Friday, October 23, 2009

நானும் இப்போது வலைப்பூவுக்குள் நுழைந்து விட்டேன். என்னுடைய சம கால எழுத்தாளர்களுள் மிகத்தாமதமாக வலைப்பூவுக்குள் நுழைந்தவன் அனேகமாக நானாகத்தான் இருக்கும். வலைப்பூக்களைப் படிப்பதும் அதில் எழுதுவதும் எனக்கு அன்னியமான விஷயங்கள் என்றே தோன்றின. எனினும் எனது நண்பர்கள் சக்கரவர்த்தியும், கல்யாண்ஜியும் இதில் என்னைப் பிடித்துத் தள்ளி விட்டார்கள். நானும் விழுந்து விட்டேன்.

எடுத்த எடுப்பில் மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ என்ற ரீதியில் தான் தோன்றியாக புத்தகங்கள் என்ற த்லைப்பிலும், நான் துவக்கி வைத்த ஒரு விழா பற்றிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டேன். அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

*

நான் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறேன். ஆண்டு தோறும் சபரிமலைக்குப் போவது போல், நான் சிங்கப்பூர் போவது வழக்கமான காரியமாகி விட்டது. இது மூன்றாவது தடவை. எனக்குப் பேரன் பிறந்திருக்கிறான். அவனைப் பார்ப்பதற்காக சிங்கப்பூர் வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறை சிங்கப்பூர் வரும் போதும் ஒரு ஊருக்கு வருவது போலவே எனக்குத் தோன்றுவதில்லை. ஏதோ ஒரு சினிமா ஷூட்டிங்குக்கான ‘செட்’டுக்குள் நுழைவது போன்ற பிரமையே எனக்குத் தோன்றும். 55 days at Peking என்ற படத்துக்காக ஹாலிவுட்டில் பீகிங் நகரையே ‘செட்’ போட்டதாக நான் படித்திருக்கிறேன். அதைப் போலவே இதுவும் ஒரு பெரிய செட் என்றே தோன்றுகிறது. சினிமா செட்டுக்குள் குப்பை போட விட மாட்டார்கள். சிகரெட் பிடித்து துண்டு சிகரெட்டை எறிய மாட்டார்கள். இங்கும் அப்படித்தான். பஸ்ஸிலும் ரயிலிலும் எஃப் டி.வி போல் பெண்கள் வித விதமாக உடை அணிந்து வருகிறார்கள். உடலை அதிகப் படியாக வெளிக்காட்டுவதில் போட்டா போட்டி நிலவுகிறது. பொத்ரியார் சொல்வது போல், sex is everywhere; that's why it is nowhere. இந்தப் பெண்கள் காலையில் வேலைக்குப் போகும் போது வித விதமான உடைகளில் வித விதமான நறுமணங்களோடு பஸ்ஸிலும் ரயிலிலும் பறக்கிறார்கள். சாயங்காலங்களில் களைத்து. சலித்து வியர்வை நாற்றத்துடன் வீடு திரும்புகிறார்கள்.

*

சிங்கப்பூர் சாலைகளில் நடக்கும் போதும், பஸ், ரயில் ஆகியவற்றில் பயணம் செய்யும் போதும் சரி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீனத்திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருப்பது போல் உணர்கிறேன். என்னைச் சுற்றிலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.

*

நாம் நகல்களின் மத்தியில் வாழ்கிறோம் என்பார் பொத்ரியார். சிமுலாக்ரா என்று அதற்குப் பெயரிடுவார். சிமுலேர் என்ற லத்தீன் சொல்லுக்கு நகல் செய் என்று பொருள். சிங்கப்பூர் ஒரு மிகப் பெரிய நகல் என்றே தோன்றுகி
றது. மேற்கத்திய பாணியில் நகல் செய்யப்பட்ட உயரமான கட்டிடங்கள், மேற்கத்திய பாணி ரயில், பஸ் சேவைகள். இங்கே சீனர்கள், மலாய், தமிழ் மக்க்ள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரே மாதிரி உடை அணிகிறார்கள்.ஒரே மாதிரி வாழ்கிறார்கள். அவர்களது ஒரே அடையாளம் அவர்கள் சிங்கப்பூரர்கள் என்பதுதான்.

இன்னமும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. பிறகு சொல்வேன்.