Monday, January 25, 2010

இதோ எனது பேரன் சந்தீப்....


சிங்கப்பூர்வாசியான இவன், எனது மகள் வயிற்றுப் பேரன் சந்தீப்...

Thursday, January 21, 2010

என்னைப் பற்றி...

1953-ம் ஆண்டு 13-ம் தேதி விடியற்காலை சுமார் 5.30 மணிக்கு, மதுரையில், கோபாலகிருஷ்ணன் சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த எனக்கு, மனிதர்கள் அனைவருமே கை விடப்பட்டவர்கள்; நம்மையுமறியாமல் நாம் இப்பிரபஞ்சத்தினுள் தூக்கியெறியப்பட்டிருக்கிறோம் என்ற விஷயம் தெரியாது. பின்னாளில் சார்த்தரைப் படித்த பின்புதான் தெரிந் து கொண்டேன். பிறந்ததிலிருந்தே விரும்புவது ஒன்று; நடப்பது வேறு ஒன்று என்றே எனது வாழ்க்கை நகர்ந்து வந்திருக்கிறது.இது என்னை ஒரு நிராசைவாதி ஆக்கிவிட்டது. ஆரம்பத்திலிருந்தே இலக்கின்றி தான்தோன்றியாகவே என் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதையும் சார்த்தர் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ‘நாம் அனைவரும் மேடைக்குத் தர தரவென்று இழுத்து வரப்பட்டிருக்கும் நடிகர்கள்; நமக்கு நமது வசனங்கள் எது என்று தெரியவில்லை; வசனத்தை எழுதவும் ஆள் இல்லை; சொல்லிக் கொடுப்பதற்கும் யாரும் இல்லை. நம்முடைய வசனங்களை நாமே பேசி, நம்முடைய வாழ்க்கையை நாமேதான் வாழ்ந்து கொள்ள வேண்டும். என்பார் சார்த்தர். அவர் சொன்னது போல் அர்த்தங்கள் அற்ற ஓர் அபத்த உலகில் நான் ஓர் அன்னியனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு குழந்தை ஒரு பொம்மையை வைத்து விளையாடும். பின்பு அதில் சலிப்படைந்து அதைத்தூக்கிப் போட்டு விட்டு வேறு ஒரு பொம்மையை கையில் எடுத்துக் கொள்ளும். அதைப் போல் நான் ஆரம்பத்தில் மரபுக் கவிதைகள் எழுதினேன். விரைவிலேயே அந்தப் பொம்மை சலித்துப் போக, புதுக்கவிதை என்ற பொம்மை வசீகரிக்க அதை எடுத்துக் கொண்டேன். அப்புறம் அதுவும் அலுத்துப் போக சிறுகதை, கட்டுரை, நாவல், விமர்சனம் என்று நாலா பக்கமும் பாய்ந்தேன். இந்தப் பஞ்சாயத்துகள் போதாதென்று சினிமா, டி.வி. போன்ற ஊடகங்களுக்கும் போனேன். நான் யார்; என்னுடைய இடம் எது என்று இன்று வரை எனக்குப் பிடிபடவில்லை.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகக் கதை, கட்டுரை, திறனாய்வு, பின் நவீனத்துவம் சார்ந்த அறிமுக நூல்கள் போன்றவற்றை எழுதிக் கொண்டிருக்கும் என்னைத் தமிழின் முக்கியமான எழுத்தாளன் என்று க.நா.சு, சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்றோர் பதிவு செய்து கவனப்படுத்தி இருக்கிறார்கள். எனது நாவலான கான்க்ரீட் வன த்தின் முன்னுரையில், க.நா.சு,

‘எம்.ஜி.சுரேஷிடம் புதுமைப்பித்தனின் சிடுக்கு முடிச்சுகளோ அல்லது ஜெயகாந்தனின் கொள்கைக் குதிரையேறுதலோ இல்லை.நடையைப் பொறுத்தவரையில், சுரேஷின் நடையும், பாஷையும் அவருக்கே சொந்தமானவையாக இருக்கின்றன. அது கூட பாரதியாரைப் போலத் தெளிவாகவும், வேகத்துடனும், வலுவுடனும் காணப்படுகிறது

என்று எழுதினார். சுந்தரராமசாமி ‘காலச்சுவடு இதழில் எழுதிய ஒரு பத்தியில்,

‘புதுமுறை எழுத்துகளில் நம்பிக்கை வைத்திருக்கும் எம்.ஜி.சுரேஷ் பல நாவல்கள் எழுதியிருக்கிறார். நான் படிக்க நேர்ந்த அவரது மூன்று நாவல்களுமே (சாகித்ய அகடமி) பரிசு பெறத்தகுதியானவைதான். தமிழ்த்தேர்வுக் குழுவில் செயல்படும் முக்கியஸ்தர்களுக்கு இவர்களது மதிப்பு எந்தக் காலத்திலேனும் தெரிய வருமா என்பது சந்தேகம்தான்

என்று பதிவு செய்திருக்கிறார். ‘விருட்சம் இதழில், அசோகமித்திரன்,

‘...அவருடைய முத்ல் நூல், ‘கான்க்ரீட் வனம் படிக்க நேர்ந்த போதே தமிழுக்கு ஒரு அசாதாரணமான, சிறப்பான படைப்பாளி கிடைத்திருப்பதாகத் தோன்றியது. சுரேஷுக்கு எதிலும் ஒரு சுயமான, தனித்துவமான பார்வை இருக்கிறது. சமீபத்தில் வெளியான நூல்களில் ‘அட்லாண்டிஸ் மனிதன் நிறைய கவனம் பெறவேண்டும்.

என்று எழுதியிருக்கிறார்.

எனது அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத்தேனீரும் என்ற நாவலைப் படித்துவிட்டு ஜெயமோகன் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர்,

தமிழ்ச்சூழலில் தன் குறுகிய வட்டத்துக்குள் வைத்து வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை எப்படியோ வேரூன்றி விட்டிருக்கிறது....இது லா.சா.ரா, மௌனி முதல் கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன் வரை ஒரு மாற்றமில்லாத மரபாகவே இங்கு உள்ளது....

...முழுமையை நோக்கி விரியக் கூடிய நாவல்களை இங்கு யாருமே முயற்சி செய்யவில்லை; உங்கள் படைப்பில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் இதை எதிர்கொள்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. உங்கள் நாவலின் படைப்பாற்றலுக்கு முக்கியச் சான்றாக விளங்குவதும் இதுவே...... நாவலாசிரியராக உங்கள் இடம் முக்கியமானது என்று எனக்குப் படுகிறது. என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் எனது இரண்டு நாவலகள் குறித்து ஊடகங்களில் எழுதியும் கவனப்படுத்தி இருந்தார்.

எழுதுவதால் பெரிதாகப் பணமும் கிடைப்பதில்லை; புகழுக்கும் வழியில்லை ஆனால் எதிகளுக்கோ பஞ்சமில்லை. புறக்கணிப்பு, துரோகங்கள், இருட்டடிப்பு வேலைகளும் இங்கே ஏராளம். இத்தகைய மோசமான தமிழ் இலக்கியச் சூழலில் இது வரை எழுதிக் கிழித்தது போதும். குட்பை சொல்லிவிடலாமே. எவனும் எக்கேடும் கெட்டுப் போகிறான் நமக்கு எதற்கு மன உளைச்சல் என்று சமயத்தில் தோன்றும். அத்தருணங்களில் மேற்கண்ட அங்கீகாரங்கள் வந்து என்னை இலக்கியத்தை விட்டு ஓடிப் போய் விடாமல் ஆற்றுப்படுத்தும்.

நான் ‘பன்முகம் என்ற தீவிர இலக்கியக் காலாண்டிதழுக்கு ஆசிரியராக இருந்தேன். அந்த இதழ் ஐந்தாண்டுகள் (செப்டம்பர் 2001 முதல் செப்டம்பர் 2005 வரை) வெளிவந்தது.

ஏககாலத்தில் எழுத்தாளனாகவும், இலக்கியக் கோட்பாட்டாளனாகவும் இயங்கும் என்னை டாக்டர் மு.வ., க.நா.சு மற்றும் தமிழவன் ஆகியோரின் தொடர்ச்சியாக வைத்துப் பலர் பார்க்கிறார்கள் என்பது ஒரு நூதன விஷயம்.

தமிழகத்தின் பெருமைக்குரிய விருதுகளான, ‘திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எட்டயபுரம் பாரதியார் நினைவுப்பரிசு, ஏலாதி இலக்கிய விருது, ஆகியன் எனது நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனது நாவல்களான, ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன், ‘அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும் ஆகிய இரண்டும் சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிகளில் எம்.ஏ., பட்டப் படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தன. எனது புத்தகங்களின் மேல் எம்.ஃபில், பி.எச்டி பட்ட ஆய்வு மாணவர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோட்டைச் சேர்ந்த திருமதி மு. சர்மிளாதேவி ‘எம்.ஜி.சுரேஷின் நாவல்களில் படைப்பாக்கத்திறன் என்ற தலைப்பில் ஆய்வு செய்து, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

நான் திரைப்படங்களிலும், டி.வி. நாடகங்களிலும் உதவி இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறேன் என்பது ஒரு கூடுதல் தகவல்.

இது வரை நான் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி இருக்கிறேன். அவை தமிழ் நாட்டின் வாசகர்கள், பத்திரிகைகள், விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.

எல்லாம் சரி. இலக்கியத்தில் எனது இடம் என்ன? இதற்கான பதிலாக, ‘கனவு என்ற சிற்றிதழில், கவிஞர் ஞானக்கூத்தன் எழுதி இருந்ததைப் பதிலாக முன் வைக்கலாம்.

,......நகுலன், சுந்தரராமசாமி, தமிழவன், ஜெயமோகன், எம்.ஜி.சுரேஷ் ஆகியோரின் எழுத்துகள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுத்தொகுதியாகும்

தமிழ் இனி 2000 வெளியிட்ட உலகத்தமிழ் இலக்கிய வரலாற்றில், நான் எழுதிய ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலர் என்ற நாவல் கடந்த நூறு வருடங்களில் தமிழில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட 10 சிறந்த பரிசோதனை நாவல்களில் ஒன்று என்று ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.

என்னுடைய இலக்கியப் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்திய நடுவண் அரசு மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழுவின் ஆலோசனை உறுப்பினராக நியமித்து உள்ளது.

ஒரு கொசுறுத் தகவல்:

என் மனைவியின் பெயர் நிர்மலா. என் மகன் பிரவீண் லண்டனுக்குப் படிக்கப் போய், படித்து முடித்துவிட்டு அங்கேயே பணி புரிந்து கொண்டிருக்கிறான். என் மகள் ஷ்வேதா சிங்கப்பூரில் ஒரு பெரிய கப்பல் கட்டுமானக் கம்பெனியில் பொறியியலாளராக இருக்கிறாள். என் மருமகனும் சிங்கப்பூரில் ஒரு ரசாயன நிறுவனத்தில் பொறியியலாளராக இருக்கிறார். மூன்று மாதக் குழந்தையான என் பேரன் சந்தீப் பார்ப்பவர் எல்லோரையும் சிரித்து மயக்கிக் கொண்டிருக்கிறான். பாருங்களேன்.