Tuesday, January 6, 2015

பார்வையாளனும், பங்குபெறுவோனும்
எம்.ஜி.சுரேஷ்
       உலகத் திரைப்படங்களால் நாம் என்னவாக ஆனோம் என்பது முக்கியமான கேள்வியாகும். சராசரி உள்ளூர் சினிமாவைப் பார்ப்பவர்களாகவும் ரசிகர்களாகவும் இருக்கும் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவை உலகசினிமா என்பது முக்கியமானது.
       உலகத் திரைப்படங்களைப் பார்த்ததால்தான் பாலுமகேந்திரா, மகேந்திரன், கே.பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் தமிழுக்குக் கிடைத்தார்கள். வெறும் உள்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்திருந்தால் அவர்கள் இந்த அளவுக்கு சாதனை புரிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
       தற்காலத்தில் நம்முடைய யுகத்தில் எல்லா கலை, இலக்கியங்களைப் போலவே திரைப்படமும் ஒரு முக்கியமான மாறுதலைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. உலகத்திரைப்படங்கள் மரபிலிருந்து நவீனத்துக்கு மாறியது போல் தற்போது நவீனத்திலிருந்து பின் நவீனதன்மைக்கு மாறி வருகின்றன.
       மரபான திரைப்படம் என்பது வழக்கமான நேர்க்கோட்டுத் தன்மை கொண்டது. புகைவண்டி ஒரே தடத்தில் தடக் தடக் என்று ஒரே தாள கதியில் ஓடிக் கொண்டிருப்பது போல் ஒரே நேர்க்கோட்டில் கதை சொல்லல்  ஓடிக்கொண்டிருக்கும். ஓர் ஆரம்பம், ஒரு நடு, ஒரு முடிவு என்று ஒரு கட்டமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும்.
       உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களான விட்டோரியா டெ சிக்கா, த்ரூபோ, டேவிட் லீன், சத்யஜித் ரே போன்ற கலைஞர்கள் யதார்த்தபாணிப் படங்களையே எடுத்தார்கள். இவர்கள் ரியலிஸம் எனப்படும் கொள்கையில் இயங்கும் யதார்த்தவாதிகள். இவர்களது  சிந்தனைகள் மரபை மீறி நின்ற போதும், தங்கள் எடுத்துரைக்கும் விவரணையை மரபார்ந்த வகைமையிலேயே கையாண்டார்கள். யதார்த்தவாதம் என்பது அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்கள், சூழ்நிலைகள், மன ஊசலாட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை மிகவும் துல்லியமாக விவரிக்கும் பண்பாகும்.
       அதற்குப் பிறகு வந்தவர்கள் வழக்கமான நேர்க்கோட்டு கதை சொல்லலை மாற்றிப் போட விரும்பினார்கள். புதிய உத்திகள், புதுப்புது யுக்திகளைக் கையாண்டு தங்கள் படங்களை எடுத்தார்கள். இவர்களின் பங்களிப்பால் கதை மற்றும் ஆக்கம் போன்றவை மரபிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டன.
       ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ஆறே ஷாட்களில் ஒரு முழுத் திரைப்படத்தையும் எடுத்துக் காட்டினார். ‘ரோப்’ என்ற அந்தப் படத்தின் சாதனையை இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதே போல் ஸ்டெடிகாம் என்ற புதிய கேமராவைப் பயன்படுத்தியவரும் அவரே. ‘ஃப்ரென்ஸி’ என்ற திரைப்படத்தில் - உலகிலேயே முதன் முதலாக - அந்தக் காமிராவில் எடுக்கப்பட்ட ஷாட்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தன. ரோமன் பொலான்ஸ்கி ‘ஃப்ராண்டிக்’ என்ற ஆங்கிலப் படத்தை ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸுக்கு இயக்கினார். அந்தப் படத்தில் ஒரு புதுமை செய்தார். காமிரா ஒரே இடத்தில் வைக்கப்பட்டு இருக்கும். கதாபாத்திரங்கள் மட்டும் நகர்வார்கள். காமிராவின் அருகில் ஒரு கதாபாத்திரம் வந்து பேசினால் அது க்ளோஸ்-அப், பேசியவாறே நடந்து தொலைவுக்குப் போனால் லாங்-ஷாட். மீண்டும் காமிராவை நோக்கி நடந்து வந்து பாதியிலேயே நின்றுவிட்டால் அது மிடில் லாங் ஷாட். இந்த ரீதியில் அந்தப் படம் புதுமைத் தன்மையுடன் இருந்தது.
       கதையிலும் புதுமைகள் செய்யப்பட்டன. அமெரிக்க நடிகரும் இயக்குநருமான உடி ஆலன் இயக்கிய ’தி பர்ப்பிள் ரோஸ் ஆஃப் கெய்ரோ’ என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில்,  சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளரை நோக்கி திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் திரையிலிருந்து இறங்கி வெளியே வந்து பேசுகிறார். அதன் பிறகு 3டி படங்கள் வந்தன. கடைசியாக இப்போது திரைப்படங்கள் வேறு ஒரு புதிய பரிமாணத்துக்கு வந்திருக்கின்றன. அதுதான் பார்வையாளனைப் பங்கேற்பவனாக மாற்றும் முறை.
       1968 ஆம் ஆண்டு, ஆர்மீனியாவைச் சேர்ந்த செர்கேய் பரஜினோவ் என்ற இயக்குநர் ஒரு புதுமை செய்தார். அவர் ஒரு படத்தை இயக்கினார். அதன் பெயர் சயாத் நோவா. பொதுவாக நடிகர்கள் நடிக்கும் போது காமிராவைப் பார்க்கக் கூடாது என்பது அடிப்படை விதி. ஏதாவது ஒரு கதாபாத்திரம் நடிக்கும் போது காமிராவைப் பார்த்தால் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை அல்லது அந்த இயக்குநருக்கு படத்தை இயக்கத் தெரியவில்லை என்று சொல்வார்கள். ஆனால், பரஜினோவ் இந்தப் படத்தில் அந்த விதியை மீறினார். அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களான நம்மைப் பார்க்கிறார்கள். நம்முடன் உரையாடுகிறார்கள். இதன் மூலம் பார்வையாளனைப் பங்கு பெறுவோனாக மாற்றிக் காட்டினார் பரஜினோவ். பார்வையாளன் பங்கு பெறுவோனாக மாறியது அனேகமாக இந்தப் படத்தில்தான்.
       அமரஸ் பெரோஸ் என்றொரு தென் அமெரிக்கப்படம். அந்தப் படத்தில் ஒரு விபத்து நடக்கும். அந்த விபத்துக்கு முன்னும் பின்னுமாக என்ன நடந்தது என்று ஒரு கதை விரியும். இதில் கதை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு பின்னோக்கிப் போகிறது. பின்பு மீண்டும் முன்னோக்கிப் போகிறது. இதனால் கதை பல்வேறு துண்டுகளாக (fragments) ஆகிவிடுகிறது. துண்டாடப்பட்ட அந்த கதைகளை வைத்துக் கொண்டு பார்வையாளன் மனதில் ஒரு கதையை உருவாக்குகிறான். அப்போது பார்வையாளன் பங்கு பெறுவோன் ஆகிறான்.
       அதேபோல், ‘ரன் லோலா ரன்’ என்றொரு படம். அதில் ஒரு கதைக்கு மூன்று முடிவுகள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு சாத்தியம். பார்வையாளன் அந்த மூன்றில் தனக்கு வேண்டிய ஏதாவது ஒரு சாத்தியத்தைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இதுவும் பங்கு பெறுதலே.
       ஃப்ரெஞ்சு அறிஞர் பொத்ரியார் டிவி பற்றிக் குறிப்பிடும் போது, ‘நமது இருண்ட அறைகளை இந்த ஊடகம் தனது குளிர்ந்த ஒளியால் நிரப்புகிறது. தனது ஒளிக்கதிர்களால் நம்மைத் துளைத்தபடியே இருக்கிறது. நாம் செயலற்றவர்களாக நம்மையே ஒப்புக் கொடுத்திருக்கிறோம்’ என்றார். இன்றைக்கு டிவி நம்மை செயலற்றவர்களாக வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைத்திருக்கவில்லை. பங்கு பெறுவோர்களாகவும் ஆக்கி வைத்திருக்கிறது. இன்று டிவிக்கள் நடத்தும் ரியாலிடி ஷோக்கள், டாக் ஷோக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் பங்கு பெறுபவர்களாகவும் மாறி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் டிவியைக் கட்டணம் கட்டிப் பார்த்தவர்கள் இப்போது டிவியில் பங்கு பெற கட்டணம் பெறுகிறார்கள் என்பது வியப்புக்குரியது.
       பார்வையாளர்களின் யுகம் முடிந்து விட்டது. இது பங்கு பெறுவோரின் யுகம். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் இரவு விருந்துகளில் முன்பெல்லாம் சாப்பிடுவார்கள். ஒலிக்கும் இசைத்தட்டுகளுக்கு ஏற்ப நடனம் ஆடுவார்கள். ஒரு பாடகன் பாட பலர் ஆடுவார்கள். இப்போதோ, ’கரோகே’ என்ற பெயரில் பாடலின் வரிகள் திரையில் தோன்ற, தாங்களும் சேர்ந்து பாடி நடனமாடுகிறார்கள்.
       இதனால் தெரிவது என்னவென்றால் பார்வையாளனும், பங்கேற்பவனும் இரண்டல்ல, ஒன்று என்று மாறிவிட்டார்கள். அப்படித்தானே?
       அப்படியானால், சமூகக்கொடுமைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளனும், சமூக அக்கறையுடன் அதை மாற்றிக் காட்டுவதில் பங்குபெறுவோனாக மாறி விடுவானோ? நடந்தால் நல்லதுதானே.

                              (மௌனம் கலைத்த சினிமா, டிசம்பர், 2011)

                                         #########
      
      


திப்பு சுல்தானின் கொள்ளுப்பேத்தி
எம்.ஜி.சுரேஷ்
ஹாலிவுட் திரைப்படங்களில் அடிக்கடி காட்டப்படும் காட்சி போல் அது இருந்தது. நள்ளிரவு நேரம். உயரமான மதில் சுவரின் அருகே அந்த இளம்பெண் தரையில் மண்டியிட்டு அமர்கிறாள். அவள் முதுகின் பின்னே நிற்கும் ஒரு நாஜி சீருடை அணிந்த அதிகாரி, அவளது பின்னங்கழுத்தில் தனது பிஸ்டலை வைத்துச் சுடுகிறார். பின்னந்தலையில் இருந்து ரத்தம் குபுகுபுக்க, அந்தப் பெண் கொஞ்சமும் பயமின்றி, ‘சுதந்திரம்’ என்று ஒரு முறை குரல் கொடுத்துவிட்டுப் பின்பு ஒரு பொட்டலம் போல் மடிந்து விழுந்து சாகிறாள்.
1944ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடந்த அந்த நிகழ்ச்சி வரலாற்றின் புறக்கணிக்கப்பட்ட பக்கங்களுக்குள் போய்ப் புதைந்து கொண்டது.
திப்பு சுல்தானின் பேரன் இனாயத் கான் ஒரு சூஃபி அறிஞர். தேர்ந்த இசைக் கலைஞரும் கூட. அவர் தனது இந்துஸ்தானி இசையையும், சூஃபிக் கோட்பாட்டையும் மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு இல்லை என்ற போதிலும், ஓரா பேக்கர் என்ற இளம்பெண்ணின் காதல் கிடைத்தது. பிறகு அமெரிக்காவிலிருந்து பிழைப்பைத் தேடி ஐரோப்பாவுக்குப் போன அவருக்கு ரஷ்யாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது அவரது அமெரிக்கக் காதலி ஓராவும் வந்து சேர்ந்தாள். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுகுப் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு நூர் என்று பெயர் வைத்தனர். நூர் பிறந்த நேரம் ரஷ்யா புரட்சிப் புயலில் சிக்கி இருந்தது. அதன் விளைவாக இனாயத் கான் தன் மனைவி ஓராவையும், மகள் நூரையும் அழைத்துக் கொண்டு பிரான்ஸ் போய்ச்சேர்ந்தார். அங்கே நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. மேலும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர் கான் தம்பதிகள்.
தன் மகளுக்கு இலக்கியம், இசை, சூஃபித்தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார் இனாயத் கான். நூர் இளம் பெண்ணாக வளர்ந்த போது ஹிட்லர் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்திருந்தான். உலகமே அவனைக் கண்டு நடுங்கியது. அவனால் உலகப் போர் மூண்டிருந்தது. அந்தத் தருணத்தில் எந்தப்பெண்ணும் செய்யத்தயங்கும் காரியத்தைச் செய்யத் துணிந்தாள் நூர். ஹிட்லரின் எழுச்சியால் உலகம் நடுங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நாஜிகளுக்கு எதிராகத் தான் ஏதாவது பங்களிப்பைச் செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? அந்த நேரத்தில் நூர் மோர்ஸ் தந்தியடிக்கும் கலையைக் கற்றிருந்தாள். ஓர் எழுத்தாளராக அறிமுகம் அடைந்திருந்தாள். ஜெர்மனியில் யூதர்கள் அழிக்கப்படுவதைக் கண்டித்து ‘உடைந்த கண்ணாடி’ என்ற தலைப்பில் ஓர் உருவகக் கதை எழுதி இருந்தாள். அவள் எழுதியதைப் பதிப்பிக்க பதிப்பாளர்களும் தயாராக இருந்தனர். ஆனால், அவள் மனம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தது.
அவளுக்குத் தெரிந்த மோர்ஸ் தந்திக் கலை விரைவிலேயே அவளை உளவுத்துறையில் கொண்டு போய்ச்சேர்த்தது. நேச நாடுகளுக்காக பிரான்சிலிருந்து இயங்கும் உளவாளியாக மாறினாள் நூர். நாஜிகளின் உளவு நிறுவனமான கெஸ்டபோவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினாள். அவரது கொள்ளுத் தாத்தா திப்பு சுல்தான் பிரிட்டிஷ்காரர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். தலைவலியாக இருந்தார். இவளோ நாஜிகளுக்குத் திருகுவலியாக இருந்தாள். வித விதமான தோற்றங்கள், புதுப் புதுப் பெயர்கள் என்று தன்னை மாற்றிக்கொண்டு பிரான்ஸ், லண்டன் என்று திரிந்தாள். அவளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் பிராங்குகள் தருவதாக நாஜிகள் அறிவித்தனர். கடைசியில் பணத்துக்கு ஆசைப்பட்டு இவளது சினேகிதியே இவளைக் காட்டிக் கொடுத்தாள்.
கெஸ்டபோ அவளைக் கைது செய்து ‘ஆபத்தான கைதி’ என்று முத்திரை குத்தி வதை முகாமுக்கு அனுப்பியது. கொடிய சித்திரவதைக்குப்பின் டச்சாவ் என்ற இடத்தில், ஹிட்லரின் ஒப்புதலோடு வடிவமைக்கப்பட்ட வதை முகாமில் நூர் சுட்டுக் கொல்லப்பட்டாள். உலகப் போர் முடிந்த பின்னால், ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு நூருக்கு பிரான்ஸ் நினைவுச்சின்னம் அமைத்தது. ஆண்டுதோறும் ராணுவ மரியாதை செய்கிறது. இப்படி ஒரு இந்தியப்பெண் இருந்தாள், உலகப் போரின் போது நாஜிகளுக்கு எதிராகப் போராடி உயிர் துறந்தாள் என்ற செய்தி நம்மிடையே பெரிதாக கவனப்படுத்தப்படவில்லை. சானா கான், முமைத் கான் என்று கிறங்கிக் கொண்டிருக்கும் நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு நூர் இனாயத் கானின் வரலாறு என்றைக்கு எட்டும் என்று தெரியவில்லை. <<>>
              (வெளிவர இருக்கும் ‘நிகழ்த்தப்பட்ட மரணங்கள்’ தொகுப்பிலிருந்து)
                        #######################