Saturday, March 19, 2011

சதுர்புஜன் கதைகள்

எம்.ஜி.சுரேஷ்


நமது யுகத்தில் நாவல் இறந்து விட்டது. அதன் மிச்ச சொச்சங்களை தொலைக்காட்சி மெகா சீரியல்கள் தத்தெடுத்துக்கொண்டு விட்டன. கவிதையின் நிலையோ இன்னும் மோசம். கவிதை இன்று திரைப்படப் பாடல்களாகவும், வெகுஜனப்பத்திரிகையில் வெளியாகும் நகைச்சுவைத் துணுக்குகளாகவும் நீர்த்துப் போய் விட்டது. சிறுகதையோ சுருங்கி ஒரு பக்கக் கதையாக முடங்கி விட்டது. இந்த அவலமான தமிழ்ச் சூழலில் ஒருவன் எழுத முன்வருவதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது. அத்தகைய துணிச்சலான காரியத்தை சதுர்புஜன் செய்ய வந்திருக்கிறார் என்பதே மனதுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.
இன்றைக்கு வெளியாகும் பெரும்பாலான இலக்கிய முயற்சிகள் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. எனவே புதிதாக வெளிவரும் எந்த ஒரு புத்தகமும் நமது நம்பிக்கையைப பெறுவதில் தோல்வியையே தழுவுகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு வாசகன் கையில் வந்து சேரும் சதுர்புஜனின் கதைகள் சந்தேகத்தையே கோரி நிற்கும். அவநம்பிக்கையுடன் இத்தொகுப்பைப் புரட்டிப்பார்க்கும் ஒரு வாசகன் இதில் இடம் பெற்றுள்ள முதல் சிறுகதையான 'குழந்தை மட்டும்' என்ற கதையைப் படிக்கும் போது திடுக்கிடவே செய்வான்.


எளிய சொற்களில், குறைந்த பக்கங்களில் நமது காலத்தின் நூதனமான பிரச்சனை ஒன்றை இந்தக் கதை பேசுவது கண்டு துணுக்குறுவான். கல்யாணமே வேண்டாம்; ஆனால் குழந்தை மட்டும் வேண்டும் என்று நினைக்கும் ஓர் ஆணும் பெண்ணும் சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்ற சாத்தியப்பாட்டை இந்தக் கதை முன் வைக்கிறது. சந்தர்ப்ப சூழல் மனிதர்களை எவ்விதம் புரட்டிப் போடுகிறது என்கிற வாழ்க்கையின் நகைச்சுவைத் தன்மையை இக்கதை எடுத்துரைக்கிறது. சிறுபத்திரிகையில் வெளிவருவதுதான் நல்ல சிறுகதை. வெகுஜனப் பத்திரிகையில் வெளிவருவது இலக்கியம் ஆகாது என்கிற பொதுப்புத்தியை இக்கதை தகர்க்கிறது. தனது முன்னோடிகளை நகல் செய்யாமல், தனக்கே உரிய தனித்த நடையில் கதாசிரியர் இந்தக் கதையைச் சொல்லி இருக்கிறார் என்பது மகிழ்ச்சி தருகிறது. இன்றைய பின் நவீன உலகில் காதல், திருமணம், குடும்பம் போன்ற விஷயங்கள் தகர்ந்து வருவதையும், அதையும் மீறி இன்னும் கிழிந்து விடாமல் நீடிக்கும் உளநெகிழ்ச்சித திரையைப் பற்றி இக்கதை பேசுவது முக்கியமானது.
அதே போல், 'திருப்புமுனை', 'நேரம் வந்தது' போன்ற கதைகளும் வழக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தியைத்தகர்க்கின்றன. நல்ல மார்க்குகள் வாங்கும் மாணவனைத்தான் எல்லாப் பள்ளிகளும் விரும்பும். அட்டகாசம் செய்யும் மாணவனை விரும்பாது. ஆனால், நல்ல பையன்களை விட 'தண்ணி தெளிச்சு' விடப்பட்ட பையன்களைத்தான் பள்ளிகள் ஏற்றுக்கொண்டு திருத்த வேண்டும் என்ற கருத்தை திருப்புமுனை என்ற கதை சொல்கிறது. முதியோர் இல்லத்தை புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் புகலிடமாகக் கருதும் சிந்தனைக்கு மாற்றாக, முதியோர் இல்லத்தை முதியோர் வேறு மாதிரியும் பார்க்க முடியும் என்பதை இந்தக் கதை விவரிக்கிறது. இத்தொகுப்பின் சிறுகதாசிரியர் வெகுஜனப்பத்திரிகையின் தீவிர வாசகர் என்பது இவரது தட்டையான தீவிரமற்ற நடையின் மூலம் புலனாகிறது. சற்று காத்திரமான நடையில் எழுதப்பட்டிருந்தால் இக்கதைகள் அடுத்த தளத்தை நோக்கி நகர்ந்திருக்குமே என்று கவலை கொள்ள வைக்கிறது. எனினும், ஆதவன், பழைய பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு போன்றவர்களுக்குக் கிட்டத்தில் வரும் கதைகள் இவை என்று சொல்லலாம்.
சதுர்புஜனின் கதாபாத்திரங்கள் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தினர். அந்த வர்க்கத்துக்கு உரிய பதற்றம், பரிதவிப்பு, நிராசைகள், ஏக்கங்கள் ஆகியவற்றுக்கு உள்ளானவர்கள். வாழ்க்கையின் புதிர்ப்பாதையில் சிக்குண்டு போக வழி தெரியாமல் திண்டாடுபவர்கள். இதற்கு உதாரணமாக 'பார்சல்' 'மாமி' போன்ற கதைகளைக் கூறலாம். இக்கதைகள் நவீன மனிதனின் உளவியல் சிக்கல்களையும், சிடுக்கு முடிச்சுகளையும் ஆராய்கிறது. ஓரளவுக்கு மனதைத்தொடும் முயற்சியில் வெற்றியும் பெறுகிறது. இயல்பான கதைகூறல் கை வந்த போதிலும் ஆசிரியர் ஏன் இடைவெளி, பொக்கிஷம், 'இனியதொரு கனவு, 'ஆசை' போன்ற, சுமாரான செயற்கையான சந்தைக் கதைகளை எழுதினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதை மாந்தர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சமூகத்தின் வாழ்க்கை, அவர்கள் பேசும் மொழி, அவர்களுக்கேயான பிரச்சனைகள் ஆகியன இக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இக்கதைகள் அந்தச் சமூகத்தையும் கடந்து அனைவருக்குமான கதைகளாக உருக்கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. 'செல்லக்குட்டி' கதையில் வரும் பட்டாபி தான் தனது இளம் வயதில் வைத்து விளையாட விரும்பிய பொம்மையை தான் வளர்ந்து பெரியவனானபின் தன மகனுக்கு வாங்கித் தந்து மகிழ்கிறான். அதே போல் நேரம் வந்தது என்ற கதையில் வரும் முதியோரை அந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாம் ஒதுக்கி விடமுடியாது. ஊரிலுள்ள மக்களின் தேவை, உணர்வு, விருப்பம் ஆகியவற்றைப் பற்றி சதா கவலைப்படும் பிரதாப் வீட்டில் இருக்கும் தன மனைவியின் தேவைகள் பற்றிக் கவலைப் படாமல் புறக்கணிக்கும் நகைமுரண் சிந்திக்கத்தக்கது. குண்டுமல்லிசெடியில் வரும் அப்பா தன மகன் சிறுவன் அர்ஜுனுக்காக, தான் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் கம்ப்யூட்டரை விட்டு விட்டு வந்து விளையாடுவது சிந்திக்க வைக்கிறது.
சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டை விட்டு விட்டு வேறு புது வீட்டுக்குக்குடிபோனால் அங்கெ வேறு பிரச்சனை வந்து நிற்கிறது; மனைவி மக்கள் முக்கியம் என்று நினைத்து பிரமோஷனை வேண்டாம் என்று மறுக்கும் ஒரு பள்ளி ஆசிரியர் பின்பு அதையே எண்ணி எண்ணி மறுகுகிறார். இறுதியில் அவருக்கு எப்படி மன ஆறுதல் கிடைக்கிறது என்று ஒரு கதை விவரிக்கிறது.

சதுர்புஜனின் சில கதைகள் நீதி போதனை செய்கின்றன (பாடம்) வேறு சில கதைகள் சஸ்பென்ஸ் கொக்கியில் வாசகனைத் தொங்கவிடுகின்றன. பொதுவாக சதுர்புஜனின் கதைகள் வெறும் பொழுது போக்கு அம்சத்தையே குறி வைக்கின்றன (கண்டிஷன்). சில கதைகளோ எதிர்பாராதவிதமாக வாசகனின் மன இறுக்கத்தைத் தளர்த்தி மெல்லிய புன்னகை பூக்குமாறு செய்கின்றன (குழந்தை மட்டும்). மொத்தத்தில் வணிகப் பத்திரிகைகளுக்கான கதைகள் எழுதுவது எப்படி என்று இவருக்குத் தெரிந்திருக்கிறது. இவரது பலமும் பலவீனமும் அதுதான்.

சதுர்புஜனின் கதைகள் நடப்பியல் கதைகள். மரபார்ந்த வடிவத்தில் இயங்குபவை. ஆரம்பம், நடு, முடிவு என்ற சட்டகத்தில் அடைக்கப்பட்டவை. நடப்பியல் கதைகளுக்கே உரிய லட்சியவாதத்தைப் போற்றும் தன்மை கொண்டவை. இவற்றை மீறும் கதை ஒன்றைக் கூட அவர் எழுதவில்லை என்பது அயர்ச்சி தருவதாக இருக்கிறது. அவருக்கு இலகுவான மொழி வாய்த்திருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாகவும், சிறப்பாகவும் சொல்ல முடிகிறது. எனவே அவரால் இன்னும் சிறந்த கதைகளை உருவாக்க முடியும்.

பொதுவாகத் தமிழ் எழுத்தாளர்கள் முதலில் வணிக இதழ்களில் எழுத ஆரம்பிப்பார்கள். காலப்போக்கில் தங்கள் திசையை மாற்றிக்கொண்டு வேறு வழியில் பயணிக்க ஆரம்பிப்பார்கள். சதுர்புஜன் தற்போது அப்படிப்பட்ட நிலைமையில் இருப்பதாக எனக்குப் படுகிறது. இது ஒரு நிலவரம். நாற்சந்தியில் நின்று கொண்டு இனி எப்படிப் போவது என்று தீர்மானிக்கப் போராடுவது. சதுர்புஜனால் இது வரை தான் எழுதிய லேசான கதைகளை மீறிய காத்திரமான கதைகளை எழுத முடியும். அதற்கான மொழியும், பயிற்சியும் அவர் கைவசம் இருக்கிறது. சந்தை ஆய்வாளரான அவர் இத்தொகுப்பின் மீதான தனது ஆய்வை மேற்கொள்ள முடியும். அதன் மூலம், அவர் இதுவரை தான் நடந்து வந்த பாதையிலேதான் இனியும் நடந்து செல்லப்போகிறாரா அல்லது வேறு பாதையில் நடக்கப் போகிறாரா என்று தீர்மானிக்க முடியும். அந்தத் தீர்மானத்தின் மூலம் மட்டுமே அவரது கதைகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று சொல்லத் தோன்றுகிறது.


(நன்றி: யுகமாயினி, மார்ச், 2011)

XXXXXX

No comments:

Post a Comment