திரைப்படங்களில் பின் நவீன கதையாடல்கள்
எம்.ஜி.சுரேஷ்
இது ஊடகங்களின் யுகம்.காதல், அன்பு, பாசம் எல்லாமே பண்டங்களாக மாறி இருக்கும் இந்த யுகத்தில் ஊடகங்கள் அவற்றைச் சந்தைக்குரிய நுகர் பொருட்களாக மாற்றுகின்றன. இது ஓர் அபாயகரமான கவர்ச்சி. ஊடகங்களின் இந்த அபாயகரமான கவர்ச்சியிலிருந்து எதுவும் தப்ப முடிவதில்லை. கதை, கவிதை, ஓவியம் என்று எல்லா கலை வெளிப்பாடுகளும் ஊடகங்களின் வசப்பட்டிருக்கின்றன. எனவே, இலக்கிய வடிவங்கள் திரைப்படங்களாக உருமாறுவது இயல்பான செயலாக இருக்கிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த உருமாற்றம் கலையாக மாறி இருக்கிறதா அல்லது விற்பனைப்பண்டமாக ஆக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான். நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்படுவது வெகு காலமாகவே நடைபெற்று வரும் வழக்கமான விஷயம்தான்.ஆனால், பின் நவீன நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருவது புதியசெய்தி எனலாம். அதிலும், முக்கியமான செய்தி என்றும் சொல்லலாம். பின் நவீன சிறுகதைகளும், நாவல்களும் திரைப்படங்களாக உருமாறும் போது, அவை தங்களையும் அறியாமல் பின் நவீனத் திரைப்படங்களாக உருவாகின்றன என்பது கவனத்துக்குரியது.
திரைப்படங்களில் பின் நவீன கதையாடல்களின் பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி ஆராயும் முன், முன் நிபந்தனையாக பின் நவீன கதையாடல் என்றால் என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கும்.
பின் நவீன கதையாடல் என்பது என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்வதென்றால் அது நவீன கதையாடலுக்கு எதிரானது என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். எடுத்துக் காட்டாக, நவீன கதையாடல் மரபார்ந்த உருவமான ஆரம்பம்-நடு-முடிவு என்ற படிநிலை அமைப்பில் அமைந்திருக்கும். பின் நவீன கதையாடல் இந்த ஒழுங்கைக் குலைக்கும். எடுத்துக்காட்டாக, ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நவீன நாவலைப் பார்ப்போம். இந்த நாவலில் கதை மரபார்ந்த முறையில் சொல்லப்படுகிறது. கதை ஆரம்பித்து, வளர்ந்து, முடிகிறது. வரிசைக்கிரமமான அத்தியாயங்கள் கொண்டது. கங்கா என்ற ஒற்றைப் பெண்ணின் பிரச்சனையைக் கருவாகக் கொண்டது. ஒரு கதை; ஒரு முடிவு என்ற உருவம் கொண்டது. தமிழில் எழுதப்பட்ட பின் நவீன நாவலான, ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ என்ற நாவல் இந்த மரபுக்கு எதிராக இயங்குவது. இதில் கதை ஆரம்பித்து, வளர்ந்து, முடிவதில்லை. வரிசைதவறிய வரிசையில் முன்னும் பின்னுமாக அலைகிறது. அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் மாற்றிப் போட்டு வாசிக்கலாம். நவீன கதையாடல் நேரான கதை சொல்லலில் அமைக்கப்பட்டிருக்கும். பின் நவீன கதையாடல் நேரற்ற கதை சொல்லலில் சொல்லப்பட்டிருக்கும். நவீனத்துவப் பிரதி கரு ஒன்றை மையமாகக் கொண்டிருக்கும். பின் நவீன கதையாடலோ அத்தகைய மையத்தைச் சிதறடிக்கும். ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவல் பெண்ணியத்தை மையமாக முன் வைக்கிறது. ‘அட்லாண்டிஸ் மனிதன்’ நாவலில் இது போன்ற மையம் ஏதும் இல்லை. நவீனத்துவம் கதை, சிறுகதை, நாவல், கட்டுரை அனைத்தையும் படைப்பு என்று அழைக்கிறது. பின் நவீனத்துவம் எல்லா கலை ஆக்கங்களையும் பிரதி என்றே அழைக்கிறது. கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து, கார்லோ பாண்டியின் yesterday,today and tomorrow திரைப்படம் வரை சகலமும் பிரதிகளே. பிரதி என்பது முழுமை பெறாதது; கேள்விக்குட்பட்டது. படைப்பு என்பது குறையற்றது. கேள்விக்கு அப்பாற்பட்டது. யதார்த்தத்தில் குறையற்ற, கேள்விக்கு அப்பாற்பட்ட பிரதி எதுவும் இல்லையாதலால் எல்லாமே பிரதிகள் என்றே அழைக்கப்படுகின்றன.
நவீனத்துவம் தனது பிரதிகளில் ஒரு கருத்தை மையமாக வைக்கிறது. அதைக் கரு என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் ‘theme’ என்று சொல்வார்கள். பின் நவீன பிரதிகள் இந்த கரு என்ற மையத்தைத் தகர்க்கின்றன. இதனால் பின் நவீன பிரதிகள் மையம் என்ற ஒற்றைத்தன்மையிலிருந்து விலகி, மையம் நீங்கிய பன்முகத்தன்மையுடன் திகழ்கின்றன.
மையத்தைத் தகர்ப்பது என்றால் கடப்பாரையின் துணை கொண்டு ஒரு கட்டடத்தை இடித்துத் தகர்ப்பது அல்ல. அது ஒரு உருவகம். ஒரு பிரதியில் ஒரு கருத்து மையமாக இருக்கும் போது அதற்கு எதிரான கருத்துகள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றன. மையத்துக்கும் விளிம்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தகர்ப்பதுதான் மையம் தகர்த்தலே அன்றி மையத்தை இல்லாமல் செய்வதல்ல. மையத்தைத் தகர்ப்பது என்பது மையத்தின் ஆதிபத்தியத் தன்மையைத் தக்ர்த்தலே. அப்போது ஆதிக்க சக்தி இழந்த மையமும் புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலையும் ஜனநாயகத் தன்மையுடன் சமமாகக் கை குலுக்க முடியும். மையமே இல்லாமல் ஒரு விஷயம் எப்படி இருக்க முடியும்? அஸ்திவாரம் இல்லாமல் கட்டடமா? என்று பின் நவீனத்துவத்தைப் பற்றிச் சிலர் கிண்டலடிப்பது உண்டு. ‘ஒரு பிரதியில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு. இருக்கும் ஒரே கருத்தை மையம் என்று சொல்லி, அதையும் அழிப்பதல்ல நமது நோக்கம். அந்த ஒன்றுக்கு மேற்பட்ட இன்னும் பல அர்த்தங்களைக் கண்டடைவதே கட்டவிழ்ப்பு’ என்கிறார் தெரிதா. எனவே, இருக்கும் ஒரே அர்த்தத்தையும் தகர்த்து விட்டு ஒன்றுமில்லாமல் இருப்பது அல்ல பின் நவீனத்துவம். அந்த ஒரு அர்த்தத்துடன் நின்று விடாமல் இன்னும் பல அர்த்தங்களையும் கண்டடைவதே பின் நவீனத்துவம். இதுவா அதுவா என்று பார்ப்பது நவீனத்துவம். இன்னும், இன்னும், மேலும் என்று பார்ப்பது பின் நவீனத்துவம் என்று பின் நவீன இரட்டையர்களான தெலுஸ்-கத்தாரி கூறுகிறார்கள். ஆகவே, ஓர் அர்த்தத்துடன் ஒற்றைப் பிரதியாக இருக்கும் நவீன பிரதி பல அர்த்தங்களுடன் மிளிரும் பன்முகப் பிரதியாக மாறும் அதிசயத்தைப் பின் நவீனத்துவம் செய்து காட்டுகிறது. இத்தகைய பின் நவீனப் பிரதிகள் திரைப்படங்களாக மாறும் போது அவையும் பின் நவீனத் தன்மையை எய்துகின்றன.
திரைப்படங்களில் பின் நவீன கதையாடல்கள் என்ற பொருளில் ஆராயும் போது அதற்கு முகாந்திரமாக இந்த விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இலக்கியங்கள் வாழ்க்கையிலிருந்து உருவாகின்றன. அந்த அந்த காலகட்டங்களைப் பிரதி செய்கின்றன. சங்க இலக்கியங்கள் அந்தக் கால மனிதர்களின் தலையாய பிரச்சனையான காதல், போர் ஆகிய இரண்டையும் பற்றிப் பேசின. பின்னாளில் வந்த இலக்கியங்களும் தங்கள் காலத்திய புதிய பிரச்சனைகளை முன் வைத்தன. பின்பு, தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில் நகரங்கள் தோன்றின. முதலாளி, தொழிலாளி என்று இரண்டு புதிய வர்க்கங்கள் உதித்தன. நகரம் சமூக மனிதனைத் தனி மனிதனாக்கியது. கிராமத்து மனிதனின் ‘நாம்’ என்ற கூட்டுச்சிந்தனை ‘நான்’ என்ற தனிமனித சிந்தனை ஆனது. தனிமனிதனின் தனிப்பட்ட பிரச்சனைகளும் உருவாயின. நவீன கதையாடல் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியது.
நவீனத்துவத்துக்குப் பின், பின் நவீனத்துவம் கால் கொண்டது. பின் நவீனத்துவம் என்பது ஒரு நிலவரம். அது நம்மை மயக்கிப் போதைக்குள்ளாக்குகிறது. பன்னாடு முதலாளித்துவத்தின் பெருக்கம் நமது யுகத்தின் கலை, இலக்கியம், கட்டடக் கலை, திரைப்படம் போன்ற எல்லாவற்றிலும் நிலவும் தனித்தன்மையை அழித்து விட்டது. இதனால் ஒரு சமூகத்தின் தன்னிலை தொலைந்தது. தனிமனிதனின் தன்னிலை என்பதும் இல்லாமல் போய்விட்டது. கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்துக் கொண்டு நிகழ்காலம் ஒரு விதத் தடுமாற்றத்துடன் நடக்கிறது. இதனால் மனப்பிறழ்வு, கதம்பத்தன்மை, போலி செய்தல், நகல் உண்மை, இரட்டைக் குறியீடு போன்ற தன்மைகள் எங்கும் நிலவுகின்றன. ஒரு பின் நவீன யுகத்தில் உருவாகும் பிரதியும் இந்தத் தன்மைகளுடன் இருக்கும். அந்தப் எழுத்துப் பிரதியிலிருந்து பெறப்படும் திரைப்பிரதியும் இதே தன்மைகளைக் கொண்டிருக்கும்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பின் நவீன நாவல்கள் எழுதப்படுகின்றன. பல நாவல்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப்படுகின்றன. நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வஸின் பிரதிகளும் திரைப்படங்களாக ஆக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய எழுத்தாளரான உம்பர்த்தோ எகோவின் ‘ரோஜாவின் பெயர்’ என்ற நாவல் செல்லமாக பின் நவீனத்துவ வேதம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாவலும் படமாக்கப்பட்டது. புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகனான ஷான் கானரி அந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருந்தார். இப்போது இந்தக் கட்டுரையில் உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய சில பின் நவீனத் திரைப்படங்களையும், அவை உருவாகக் காரணமாக இருந்த புனைகதைகளையும் பார்ப்போம்.
1.சோலாரிஸ் (Solaris)
ஸ்டானிஸ்லாவ் லெம் (Stanislaw lem) என்ற ருஷ்ய நாவலாசிரியர் ஒரு நாவல் எழுதினார். அதன் பெயர் சோலாரிஸ். அது ஒரு அறிவியல் புதினம். பொதுவாக நவீன அறிவியல் புதினங்கள் வியப்பையும், நூதன உணர்வையும் ஏற்படுத்தி வாசகனை மகிழ்விக்கும். ஐசக் அஸிமோவ், ரே பிராட்பரி, ஆர்தர்.சி.க்ளார்க் போன்றோரின் கதைகளை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். தமிழில் சுஜாதா எழுதிய அறிவியல் புனைவுகளும் இந்தத் தரத்தில் ஆனவையே. பின் நவீன அறிவியல் புனைகதை தத்துவார்த்த சிந்தனை, மனித விழுமியங்கள், உண்மை ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறது. கலை வெறும் கேளிக்கை மட்டும் அல்ல; ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்துவதும் கூட என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சோலாரிஸ் அத்தகைய நாவலே. அதை உலகின் மாபெரும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஆந்திரேய் தார்கோவ்ஸ்கி இயக்கினார். இதே படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸோடர்பர்க் ஆங்கிலத்தில் மீண்டும் எடுத்தார். ஸ்டீவன் ஸோடர்பர்க் ஏற்கனவே, செக்ஸ், லைஸ் அண்ட் வீடியோ டேப், டிராஃபிக் போன்ற பின் நவீனத் திரைப்படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ருஷ்ய அறிவியல் அறிஞர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் விண்வெளியில் சோலாரிஸ் என்ற பகுதியில் ஒரு மிதக்கும் விண்வெளிக்கூடத்தை அமைத்து, அதில் சில அறிவியல் அறிஞர்களை அனுப்பி ஆய்வு செய்கிறார்கள். பூமியில் இருந்தபடி வேறு சில அறிவியல் அறிஞர்கள் அந்த ஆய்வுக் கூடத்துடன் தொடர்பில் இருந்து கொண்டு அங்கே நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்தபடி இருக்கிறார்கள். அப்போது சில மர்மமான நிகழ்ச்சிகள் விண்வெளி ஆய்வுக் கூடத்தில் நடக்கின்றன. விண்வெளி ஆய்வுக் கூடத்தில் இருப்பவர்களின் மனநிலை பாதிக்க்ப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பூமியில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு ஏற்படுகிறது. விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக்கூடத்தில் இருக்கும் ஒரு விஞ்ஞானி தற்கொலை செய்து கொள்கிறார். இது என்ன ஏது தெரிந்து கொள்வதற்காக பூமியில் இருக்கும் விஞ்ஞானிகள் ஒரு உளவியல் மருத்துவரை மேலே அனுப்புகிறார்கள். அவர் பெயர் க்றிஸ் கெல்வின்.அவர் விண்வெளியில் உள்ள ஆய்வுக் கூடத்துக்குப் போகிறார். அங்கே தற்கொலை செய்து கொண்ட விஞ்ஞானியின் பிணம் கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி அங்கே உள்ள பிற விஞ்ஞானிகளிடம் அவர் விசாரிக்கிறார். அவர்கள் விரக்தியாகச் சிரிக்கிறார்கள். பதில் ஏதும் சொல்ல மறுக்கிறார்கள்’ பொறுத்திருந்து பார் உனக்கே தெரியும்’ என்கிறார்கள். ஒன்றும் புரியாமல் விழிக்கிறார் க்றிஸ். அப்போது திடீரென்று ஒர் சிறுவன் அங்கே ஓடித் திரிவதைப் பார்த்துத் திடுக்கிடுகிறார். இந்த விண் வெளி ஆய்வுக் கூடத்துக்கு எப்படி ஒரு சிறுவன் வந்தான் என்று வியப்படைகிறார். அப்போது அங்கே இருக்கும் ஒரு விஞ்ஞானி, ‘பார்த்தாயா இங்கே எல்லாம் இப்படித்தான்; நம்ப முடியாதது எல்லாம் நடக்கும்’ என்கிறார்.
க்றிஸ் அந்த ஆய்வுக் கூடத்தைச் சுற்றிப் பார்க்கிறார். பின்பு தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குப் போய் ஓய்வு எடுக்கிறார். கண் அயர்கிறார். அப்போது ஓர் இளம் பெண்ணின் கை விரல்கள் அவரை வருடுகின்றன. திடுக்கிட்டு விழித்துப் பார்க்கிறார். திகைத்துப் போகிறார். ஏனெனில், அந்த இளம் பெண் வேறு யாரும் அல்ல. அவரது காலஞ்சென்ற மனைவி ஹாரி என்பது அவரால் நம்ப முடியாததாக இருக்கிறது. அவள் இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. இங்கே, இவள், எப்படி என்று தெரியாமல் பிரமித்துப் போய் நிற்கிறார். அந்தப் பெண்ணோ தான் தான் க்றிஸ்ஸின் மனைவி ஹாரி என்று சொல்கிறாள். ‘இல்லை’ என்று இவர் மறுக்கிறார்.அவளை விட்டு ஒதுங்குகிறார். அவளோ, உங்களுக்கு என் மேல் கோபமா? ஏன் என்னை வெறுக்கிறீர்கள்’ என்று மன்றாடுகிறாள். தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சுகிறாள். ‘புரிந்ததா, இது போன்ற சிக்கல்களால்தான் அந்த விஞ்ஞானி தற்கொலை செய்து கொண்டார்’ என்கிறார் அந்த விஞ்ஞானி.
விண்வெளியில் அந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் ஒரு கடல் இருக்கிறது. அந்தக் கடலில் உள்ள ஏதோ ஒரு உயிரினம் நம்மிடம் இப்படி விளையாடுகிறது என்பதை க்றிஸ் புரிந்து கொள்கிறார். இங்கு வரும் மனிதர்களின் மனத்தை அது ஊடுருவிப் பார்த்து, அதில் உள்ள சிந்தனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பிரியமான மனிதர்களை நியூட்ரான்களால் மறு உற்பத்தி செய்து நடமாடச் செய்கிறது என்பதை விரைவிலேயே கண்டு பிடிக்கிறார். இதற்கிடையே ஹாரியின் நகலாக இருக்கும் அந்தப் பெண்ணை நேசிக்கவும் செய்கிறார். ஒரு நாள் தான் அசல் ஹாரி இல்லை; அவள் இறந்து விட்டாள். தான் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகல் என்பதை அறிந்து நகல் ஹாரி மனம் உடைந்து போகிறாள். க்றிஸ்ஸிடம், ‘நீ உண்மையிலேயே என்னைக் காதலிக்கிறாயா?’ என்று அவள் கேட்கிறாள். அதற்கு அவர், ’ஆமாம்’ என்கிறார். ’அப்படியானால் நீ உன் இறந்து போன மனைவி ஹாரியைக் காதலித்தாய், அல்லவா; அதுவும் உண்மைதானே?’ என்று கேட்கிறாள். அதற்கும் க்றிஸ் ‘ஆமாம்’ என்கிறார். ’ஒரு மனிதன் எப்படி ஒரே சமயத்தில் இரண்டு பேரைக் காதலிக்க முடியும்? நீ அவளைக் காதலித்தால் என்னைக் காதலிப்பது பொய். அதே போல் என்னைக் காதலித்தால், அவளைக் காதலித்தது பொய். உன் காதலில் எது உண்மை; எது பொய்?’ என்று கேட்கிறாள். க்றிஸ் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவர் உளவியல் ரீதியாக மனம் உடைந்து போகிறார்.காதல், அன்பு, பாசம் போன்றவற்றின் மீதான ஒரு விசாரணையை இந்த உளவியல் நெருக்கடி உண்டாக்குகிறது. அன்பு என்ற விஷயத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
பின்பு பூமிக்குத் திரும்பும் அவரது நடத்தை மன நிலை பிறழ்ந்த ஒரு மனிதனின் செய்கையைப் போல் இருக்கிறது. சோலாரிஸ் ப்ராஜக்டுக்குப் போகும் அனைவரும் மனநலம் பிறழ்ந்து போகிறார்கள் என்று தீர்மானித்து அரசு இந்தத் திட்டத்தைக் கை விடுகிறது.
இதுதான் சோலாரிஸ் பிரதியின் கதை. இந்தப் படம் கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் தணிக்கை செய்யப்பட்டது. இந்தப் படம் எழுப்பும் தத்துவார்த்தமான கேள்விகளையும், வாழ்க்கையின் அபத்தம் குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களையும் பார்த்து சோவியத் அரசின் தணிக்கை அதிகாரிகள் இதில் உள்ள பல காட்சிகளை வெட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது மனம் உடைந்து போய் இயக்குநர் ஆந்திரேய் தார்கோவ்ஸ்கி கண்ணீர் விட்டு அழுதார் என்று படத்தில் கதாநாயகி ஹாரியாக நடித்த நாடல்யா பண்டார்சுக் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
2. ரோஜாவின் பெயர் (The name of a rose)
நாவல் இறந்து விட்டது என்று சர்ரியலிஸ்டான ஆந்திரே பிரதான் அறிவித்தார். நாவல் விற்பனைப் பண்டம் ஆகிவிட்டது. அதை இனியும் கலை என்று சொல்ல முடியாது என்பது அவர் வாதம். அதைத் தொடர்ந்து போர்ஹே, வி.எஸ். நைபால் பொன்றவர்கள் நாவல் என்ற வடிவத்தை நிராகரித்தார்கள். நிராகரிக்கப்பட்ட நாவல் வடிவத்தை மீண்டும் கலை வடிவமாக்க உலகெங்கிலும் பலர் முயன்றார்கள். அமெரிக்காவில் தாமஸ் பிஞ்சன், குரோஷியாவில் மிலோராட் பவிக், இத்தாலியில் உம்பர்த்தோ எக்கோ போன்றவர்கள் நாவலை பின் நவீனப் பிரதியாக மாற்றினார்கள்.
நாவல் என்பதே வணிகப் பண்டம் என்றால் மர்மக் கதை பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஒரு நாவலை அதுவும் ஒரு துப்பறியும் மர்மக்கதையை நாவலாக எழுதினால் எப்படி இருக்கும்? பெட்டிக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சந்தைக் கதைக் குப்பைகளில் ஒரு குப்பையாகத் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால், ஒரு துப்பறியும் மர்மக்கதையை ஒரு மனிதர் எழுதினார். அதை உலகம் ஒரு இலக்கியப் பிரதி என்று கொண்டாடுகிறது. அவர் பெயர் உம்பர்த்தோ எக்கோ. அவர் எழுதிய பிரதிதான் ‘ரோஜாவின் பெயர்’.
இத்தாலியில் இருக்கும் ஒரு மடாலயத்தில் அடிக்கடி கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகள் வாடிகனை கவலையடைய வைக்கிறது. கொலை செய்யப்படுபவர்கள் மடாலயத்தில் வசிக்கும் துறவிகள். கொலையாளி யார் என்பது தெரியவில்லை. அந்தக் கொலைகளைப் பற்றித் துப்பறிய ஒரு துப்பறிவாளரையும், ஒரு உதவியாளரையும் வாடிகன் அனுப்பி வைக்கிறது. அந்தத் துறவி அந்த மடாலயத்துக்குத் தன் உதவியாளருடன் வருகிறார். அவர்கள் இருவரும் மடாலயத்தில் புலன் விசாரணையை மேற்கொள்கின்றனர். அவர்கள் புலனாய்வு மேற்கொள்ளும் சமயத்திலும் மேலும் கொலைகள் தொடர்ந்து நடக்கவே செய்கின்றன. அந்த மடாலயத்தில் ஒரு பழமையான நூலகம் இருப்பதையும் அதைச்சுற்றியே கொலைகள் நடக்கின்றன என்பதையும் கண்டு பிடிக்கின்றனர்.
இன்னொரு விஷயமும் அவர்களைக் கவர்கிறது. கொலை செய்யப்பட்ட ஒவ்வொருவரின் கட்டை விரலிலும், நாக்கிலும் வண்ணக்கறை படிந்திருக்கிறது. அது ஒரு விஷம் என்பதையும் அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். அது என்ன விஷம்; எப்படி வந்தது என்பதையும் கண்டு பிடிக்கின்றனர். அந்த நூலகத்தில் விலக்கி வைக்கப்பட்ட ஏதோ ஒரு நூல் இருக்கக் கூடும். அதைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொரு பக்கமாகப் படிக்கும் போது நாவில் விரலால் தொட்டுத் தொட்டுப் பக்கங்களைப் புரட்டியிருக்க வேண்டும். அப்போது அந்தப் பக்கங்களில் தடவப் பட்டுள்ள விஷம் இவர்கள் நாவில் பட்டு இவர்களைக் கொன்றிருக்க வேண்டும் என்று கண்டு பிடிக்கிறார்கள். கடைசியில் அந்த நூலையும் கண்டு பிடிக்கிறார்கள். அது அரிஸ்டாட்டில் எழுதிய கவிதையியல் பற்றி என்ற நூலில் வரும் இன்பியல் பகுதி என்று தெரிய வருகிறது. இன்பியல் உலகில் ஒழுக்கத்தைக் கெடுத்து விடும். பாவத்துக்கு வழி வகுக்கும். எனவே, அந்த நூல் தடை செய்யப்பட்டது. அதையும் மீறி ரகசியமாகத் தேடி எடுத்துப் படிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே அதன் பக்கங்களில் விஷம் தடவப்பட்டது. இந்தக் கொலைகளைச் செய்பவர் அந்த மடாலயத்தில் வசிக்கும் ஒரு மூத்த துறவி. அவர் பெயர் ஹோர்ஹே. போர்ஹே என்று ஒலிக்கும் விதமாக இந்தப் பெயர் அமைக்கப்பட்டதற்குக் காரணம் நாவல் என்ற வடிவத்தை எதிர்த்த எழுத்தாளர் போர்ஹேவுக்கு அஞ்சலி செலுத்தும் விதம் என்று கொள்ளலாம்.
மத்திய காலக் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் கொடுங்கோன்மையை இந்த நாவல் தோலுரித்துக் காட்டுகிறது. ’இயேசு கிறிஸ்து தன் வாழ்நாளில் ஒரு போதும் சிரித்ததில்லை’ என்று நாவலில் ஓர் இடத்தில் மூத்த துறவி கூறுகிறார். சிரிப்பு என்பதே பாவத்தின் ஆணி வேர் என்பது மத்திய கால கிறிஸ்தவ மதவாதிகளின் தீர்ப்பு என்பதை இந்த நூலாசிரியர் பகடி செய்கிறார். பகடி என்பதும் ஒரு பின் நவீனத்துவக் கூறு. மேலும் இந்தப் பிரதியில் எந்த ஒரு பக்கத்தைக் கண்ணை மூடிக் கொண்டு தொட்டாலும், அந்தப் பக்கத்தில் ஏதாவது ஒரு அரிய செய்தி கிடைக்கும். இதைக் கலைக் களஞ்சிய எழுத்து முறை என்பார்கள்.
இந்த நாவலை ழீன் ழாக் அன்னூத் என்பவர் திரைப்படமாக இயக்கினார். ஷான் கானரி, கிறிஸ்டியன் ஸ்லேட்டர் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தனர். நாவலில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அப்படியே திரைப்படத்திலும் இடம் பெற்றிருந்தன. பொருத்தமான இடம், தேர்ந்த நடிப்பு, திறமையான இயக்கத்தில் படம் சிறப்பாக இருந்தது. 17 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் வாரத்திலேயே 5 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தது. வர்த்தக ரீதியாக இந்தப் படம் வெற்றியடைந்த போதிலும், நாவலில் இருந்த அளவுக்குப் பின் நவீன கூறுகள் படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாசிப்புக்காக எழுதப்படும் ஒரு பிரதி, திரைப்படத்துக்காகத் திரை மொழியில் மொழிபெயர்க்கப்படும் போது இது போன்ற இழப்புகள் நேரவே செய்யும்.
3.கிளாக் ஒர்க் ஆரஞ்ச் (Clock wok orange)
இது ஒரு எதிர்காலப் புனைவு. இதை ஆங்கிலத்தில் futuristic fiction என்று சொல்வார்கள். எதிர்காலப் புனைவுகளும் பின் நவீனப் பிரதிகளே. பிரிட்டிஷ் எழுத்தாளரான ஆண்டனி பர்ஜஸ் எழுதிய நாவல் கிளாக் ஒர்க் ஆரஞ்ச். டைம் இலக்கிய இதழ் ஆண்டனி பர்ஜஸை உலகின் மிகச் சிறந்த ஐம்பது ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவர் என்று பட்டியலிட்டுக் கௌரவித்து இருந்தது இவரது பெருமையை உணர்த்தும். நாளுக்கு நாள் பெருகிவரும் வன்முறை எதிர்காலத்தை எங்கு கொண்டு செல்லும் என்ற கற்பனையே இந்த நாவலுக்கான கதைத் திட்டம் எனலாம். இந்த நாவல் 21 அத்தியாயங்களில் எழுதப்பட்டது. 21 வயது என்பது முதிர்ச்சி அடையும் வயது. தேர்தலுக்கு வோட் போடும் வயது. இந்த வயதில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டு வாழ்க்கையை அழித்துக் கொள்வதைப் பற்றிய குறியீடாக இந்த அத்தியாய வரையறுப்பை மனங்கொள்ளலாம். எதிர்கால வன்முறைக்கு ultra violence என்று பெயரிடுகிறார் பர்ஜஸ். அந்தக் கொடூரமான வன்முறையின் பயங்கரத்தைத் தனது நாவலின் பக்கங்களில் அவர் பதிவு செய்திருக்கிறார். வன்முறையைப் பற்றிப் பேசும் இந்த நாவலின் வரிகளுக்கிடையே வன்முறைக்கு எதிரான குரல் ஒலிப்பதை ஒரு வாசகன் கண்டுணர முடியும். இந்த நாவலைத் தவறுதலாக யாராவது வன்முறையைக் கொண்டாடும் நாவலாகக் கருதி விடுவார்களோ என்ற அச்சமும் பர்ஜஸுக்கு இருந்தது. இந்த நாவலை உலகப் புகழ் பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் திரைப்படமாக்கினார். பின்னாளில் பெரும் புகழ் பெற்ற மால்கம் மக்டவல் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இக்கதையின் நாயகன் ஒரு டீன் ஏஜ் இளைஞன். பெயர் அலெக்ஸ். இவனும் இவனது தோழர்களும் ஒன்று சேர்ந்து பார்ப்பவர் மனங்களைக் கலங்கடிக்கும் விதத்தில் கொலை, கற்பழிப்பு போன்ற வன் செயல்களில் ஈடுபடுகிறார்கள். விரைவிலேயே அலெக்ஸ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறான். நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களைத் தடுப்பதற்காக சிறையில் அடைக்கப்படும் கைதிகளுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதற்கு வெறுப்பு மருத்துவம் (Aversion treatment) என்று பெயர். எதை மனம் விரும்புகிறதோ அதை வெறுக்குமாறு செய்வது அதன் நோக்கம். அப்போதுதான் வன்முறையை விரும்பும் மனநிலையை வன்முறையை வெறுக்கும் மனநிலையாக மாற்ற முடியும். சிறையில் அலெக்ஸுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹிட்லரின் நாஜி காலத்து வன்முறைகள், இதற்கு முன் எங்கெங்கோ நிகழ்த்தப்பட்ட வன்செயல்கள் திரைப்படங்களாக அவனுக்குப் போட்டுக் காண்பிக்கப்படுகின்றன. அவன் மனம் அதிர்கிறது. தொடர்ந்த மூளைச்சலவையினால் அவன் மனம் திருந்துகிறான். வன்முறை என்ற விஷயத்தையே வெறுக்கிறான். தனக்குப் பிடித்தமான இசையையும் வெறுக்கிறான். விருப்பமான வன்முறையை வெறுக்க அளிக்கப்பட்ட சிகிச்சை விருப்பத்துக்குரிய இசையையும் வெறுக்க வைத்து விட்டது என்பது ஒரு நகை முரண். கடைசியில் மனம் திருந்திய அவனை விடுதலை செய்கிறார்கள். மனம் திருந்தி வெளியே வரும் அவனை அவனது நண்பர்களும், உறவினர்களும் சேர்த்துக் கொள்வதில்லை. அவனை ஒதுக்கி விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகும் அவன் அரசுக்கு ஒரு பிரச்சனையாகி விடுகிறான். மீண்டும் அவனை அரசு ஏற்கெனவே வழங்கப்பட்ட சிகிச்சைக்கு எதிரான மாற்றுச் சிகிச்சை தந்து காப்பாற்றுகிறது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வரும் யாரும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. மனத்தின் சமநிலையைக் குலைப்பது ஒரு பின் நவீன பிரதியின் குணம். அந்தக் குணம் இந்த நாவல் மற்றும் திரைப்படங்களுக்கு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
4. ஏ.ஐ. (Artificial Intelligence)
ஆங்கில எழுத்தாளரான பிரையன் அல்டிஸ் எழுதிய ஒரு சிறுகதை ‘Super toys last all summer long’. இதில் மனிதனைப் போலவே இயங்கும் ஒரு ரோபோ பற்றிய கதை இருந்தது. இதை மிக நேர்த்தியான திரைப்படமாக்கிய பெருமை ஹாலிவுட் இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கையே சேரும்.
ஸ்விண்டன், மோனிகா ஸ்விண்டன் ஆகிய இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு மகன். அவன் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறான். அந்த மன வருத்தத்தைப் போக்க ஸ்விண்டன் தன் மனைவிக்கு மெச்சோ எனப்படும் ஒரு எந்திர மனிதச் சிறுவனை வாங்கித் தருகிறான். 11 வயதான தோற்றமும், 60 பவுண்ட் எடையும், பழுப்பு நிற முடியும் கொண்டு அசல் மனிதனைப் போலவே தோன்றும் அந்த எந்திர மனிதன் ஒரு செயற்கை அறிவு ஜீவி. பெயர் டேவிட். செயற்கை அறிவு ஜீவி என்பது மனிதனுக்கு நிகரானது. மனிதனைப் போலவே சிந்திக்கும். அன்பு செலுத்தும். அது போல அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரன் மோனிகாவுடன் நன்கு பழகி ஒட்டிக் கொண்டு விடுகிறது. மோனிகா தனக்குப்பிறந்த மனிதக் குழந்தையை விடத் தன்னை அதிகம் நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அதற்காக அது மேற்கொள்ளும் முயற்சிகளைத் தவறாகப் புரிந்து கொண்டு மோனிகா அந்த எந்திரனை குப்பைகள் கொட்டும் இடத்தில் கொண்டு போய்ப் போட்டு விடுகிறாள். அங்கிருந்து தன் தாயைத் தேடி டேவிட் அலைகிறான். அவனது தீவிரமான தேடலைப் பார்த்துப் பரிதாபப்பட்டு மோனிகாவைப் போன்ற ஒரு செயற்கை அறிவு ஜீவியைத் தயாரித்து வழங்குகிறார்கள். அதைத் தன் தாய் நினைத்துக் கொண்டு அதனுடன் மகிழ்ச்சியுடன் டேவிட் வாழ்கிறான். டேவிட் தன் தாயைத் தேடுவது; அவளைப் போல் தயாரிக்கப்பட்ட நகலுடன் வாழ ஆரம்பிப்பது எல்லாமே பார்வையாளரின் கண்களை கலங்கச் செய்யும். மனிதன் எந்திரமாக வாழும் ஒரு யுகத்தில், எந்திரமே கூட more human than human என்ற தன்மையுடன் வாழக்கூடும் எனும் போது, மனிதனாகிய நான் மட்டும் ஏன் எந்திரம் போல் வாழ்கிறேன் என்று யோசிக்க வைக்கிறது.
இது போன்ற கதையாடல்கள் மேற்கத்தியத் திரைப்படங்களை வேறு ஒரு புதிய தளத்துக்கு முன்னகர்த்தி இருக்கின்றன. தமிழிலும் இது போன்ற பின் நவீன கதையாடல்கள் எழுதப்பட்டும், வாசிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால், இவையெல்லாம் எந்தக் காலத்தில் திரைப்படப் பிரதிகளாக மொழிபெயர்க்கப்படும் என்று தெரியவில்லை. நவீன பிரதிகளே உதாசீனப்படுத்தப்படும் ஓர் அவலமான சூழலில் பின் நவீனப் பிரதிகள் திரைப்படமாவது கேள்விக்குரியே.
(21.03.2011 அன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த
நிகழ்த்துகலைப் பள்ளியின் சார்பாக நிகழ்ந்த கருத்தரங்கில்
வாசிக்கப்பட்ட கட்டுரை.)
<><><><><><><><><>
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்,
ReplyDeleteதமிழில் மாற்று சினிமாவிற்கான களம் அமைக்கும் முயற்சியின் விளைவே பேசும்படம்.நெட் பேசும்படம் இணைய இதழ் மாற்று சினிமாவிற்கு முதன்மையான இடமளிக்கும்.மாற்றம் கருதி தயாரிக்கப்படும் படங்களுக்கும் குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கும் பேசும் படம் கூடுதலாக அக்கறை செலுத்தும். அர்ப்பணிப்பு உணர்வுடன் கலைக்கு மரியாதை கொடுக்கும் இந்த ஒரு முயற்சிக்கும் பேசும்படம் முக்கியத்துவம் கொடுக்கும்
இணைய இதழ் பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் please conduct;9952266992