நூலாய்வு:
காலத்தை உறங்க விடமாட்டேன் – தெலுங்கு மொழிபெயர்ப்புக் கவிதைகள்
எம்.ஜி. சுரேஷ்
தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலம், சங்க மருவிய காலம், காவியங்கள் காலம், பக்தி இலக்கிய யுகம் போல வானம்பாடிகளின் காலம் ஒரு முக்கியமான காலகட்டமாகும். விமர்சனங்கள் இருப்பினும் வானம்பாடிகளை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. வானம்பாடி இயக்கத்தைச் செதுக்கிய சிற்பிகளில் ஒருவரான கவிஞர் சிற்பி நவீன தமிழ்க் கவிதைகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர். அவரது மொழிபெயர்ப்பில் தற்காலத் தெலுங்குக் கவிஞர்களில் ஒருவரான என்.கோபியின் ‘காலத்தை உறங்க விடமாட்டேன்’ என்ற சாகித்திய அகதமி பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு வெளி வந்திருக்கிறது. கோபி பன்னிரண்டு கவிதைத்தொகுப்புகள், ஐந்து இலக்கியத் திறனாய்வு நூல்கள், நான்கு பயண நூல்கள் எழுதி இருக்கிறார். பலகலைக் கழகங்களில் துணைவேந்தராக இருந்திருக்கிறார் என்று பின்னட்டைக் குறிப்பு கூறுகிறது. ஒரு சாகித்ய அகதமி பரிசு பெற்ற கவிஞரால் மொழி பெயர்க்கப்பட்ட இன்னொரு சாகித்ய அகதமி பெற்ற கவிஞரின் கவிதைத் தொகுப்பு இது என்பது எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கவே செய்கிறது.
இந்நூலில் ஐம்பது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. உலகமெங்கிலும் எழுதப்படும் தற்காலக் கவிஞர்களின் கவிதைகளைப் போலவே, இவற்றிலும் சுயசரிதைத்தன்மை, சர்ரியலிஸக்கூறுகள், துண்டாடப்பட்ட விவரணை, வரிகளுக்கிடையே நிலவும் மௌனம் ஆகியன இருக்கின்றன. இதனாலேயே இத்தொகுப்பு எல்லா மொழி வாசகர்களுக்குமான வாசிப்பைத் தன்னுள் கொண்டிருக்கிறது எனலாம்.
இவருக்கு எதையும் பாடுபொருளாக்கிவிட மூடிகிறது. சாதாரண ரொட்டி முதல் சமூகத்தின் சகல கூறுகளையும் சல்லித்து, திரட்டி, கவிதைகளாக உருட்டித் தேய்த்துத் தட்டில் வைத்து வழங்க சாத்தியப்படுகிறது. ரொட்டி, முற்றம், மெத்தை, கல், சாலை போன்ற, கவிஞர்கள் கவனிக்கத் தவறுகிற, அற்பமான பொருட்கள் கூட இவரிடம் கவிதைகளாக உருமாற்றம் எய்துகின்றன.
நவீன தொலைதொடர்பு அவசர யுகத்தில் நாம் ‘கடிதம்’ என்ற அரிய விஷயத்தைத் தொலைத்து வருகிறோம். இந்த சமூக மறதியை, ‘வாழ்க்கை என்கிற வண்ணத்தொகுதியை ஒரு ஹலோவினால் தொலைத்து விடாதீர்கள்’ என்று எச்சரிக்கிறார் கவிஞர். இன்னொரு கவிதையில் தன் வீட்டு முற்றத்தைப் பற்றிப் பேசும் போது,
’துன்பங்களின் போது தாயாரின் முந்தானையில்
முகம் புதைத்தது போல் – என் கவிதைகளுக்குள்
நான் ஒளிந்து கொள்கிறேன்’
என்று வேதனையுடன் சொல்கிறார்.
வெள்ளம் என்ற கவிதையில் ‘வியர்வை எறும்புகள் எத்தனை தட்டினாலும் விலகுவதில்லை’ என்று அருமையான சிந்தனையை முன் வைக்கிறார். இனி எப்போது வியர்த்தாலும் இந்த வரிகள் நினைவில் வந்து போகும்.
ஒரு மகளின் மரணத்தைப் பற்றிப் பேசுகையில்
‘அவள் மரணம் நொடியில் நேர்ந்தது; எங்கள் மரணம் நொடிக்கு நொடி
நேர்கிறது’ என்று எழுதுகிறார். பிரியத்துக்குரியவர்களை மரணம் பிரித்துச் செல்லும் அனுபவத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே இந்த வரிகளில் தெரியும் வலியை உணர முடியும். இவருக்குக் கவிதை நன்கு கை வருகிறது. எடுத்துக்காட்டாக,
‘காலண்டர்களைத் தின்று கொழுத்த காலத்துக்கு
இயக்கம் மட்டுமே உண்டு
இலக்கு இல்லை’
கண்ணீர் என்பது ஒரு துளி நீர் அல்ல
வாழ்வின் வெற்றி மிளிர்கையில் – அது
விலை மதிக்க முடியாத ரத்தினம்
மீண்டும் மீண்டும் இசைத்தட்டைக் கீறும்
கிராம ஊசி போன்றது கவிதை
கவிதையின் வாசனைக்காக
வெற்றுப் பக்கங்கள் காத்திருக்கின்றன
நாய்க்குட்டிகளைப் போல
கண்களிலிலிருந்து உதிர்வதால் மட்டும்
அது கண்ணீர் ஆகுமா?
அதோ அந்தப் பையன்
மீண்டும் நம் குழந்தைப் பருவத்துக்குள்
பந்தை எறிகிறான்
ஆழ்ந்து முகர்ந்தால்
இரவுக்கும் மணமுண்டு
இது போல நமக்குள் இனம் புரியாத உணர்வைக் கிளர்த்தும் வரிகளை இவரால் எழுத முடிகிறது என்பது மகிழ்ச்சி தருகிறது.
இவரது சில கவிதைகள் துக்கம் கொள்கின்றன. சில கோபம் கொள்கின்றன. சிலவோ நகைக்கின்றன. இவை வாழ்க்கை மீதான கவிஞரின் பன்முக அவதானிப்பைச் சுட்டவே செய்கின்றன. தனது கவிதை ஒன்றில் அவரே கூறுவது போல்,
‘என் கவிதைகள் எது குறித்தும் கர்வம் கொள்வதில்லை
அவை சற்று நாணமுள்ளவை
அவற்றின் ஜாதகத்தில் அச்சம் கிடையாது’ என்பது உண்மையே. ஆனால், இவர் அடிக்கடி கவிதையின் சுதந்திரம் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. நமது யுகத்தின் மனிதன் அதிகாரத்தின் நுண் அரசியலில் சிக்கிக்கொண்டு சுதந்திரமின்றித் தவிக்கிறான். அவனுக்கே சுதந்திரம் சாத்தியமில்லாத போது அவன் எழுதும் கவிதை மாத்திரம் எப்படிச் சுதந்திரமாக இருக்க முடியும்?
மனிதன் அதிகாரத்தின் அடிமை. அவன் எழுதும் பிரதிகளும் அந்த அடிமைத்தனத்தின் அரசியல் வெளிப்பாடுகளே. அந்த அரசியல் யாருக்கு ஆதரவானது அல்லது யாருக்கு எதிரானது என்பதுதான் பிரச்சனையே. எடுத்துக் காட்டாக, இவரது கவிதை ஒன்றின் தலைப்பு கண்ணீரின் உபனிஷதம். இந்தத் தலைப்பு இந்துத்வா கருத்தியலின் அரசியலைப் பரப்புவதாக இந்துத்வா எதிரிகள் குற்றம் சாட்டக்கூடும் அல்லவா? அதே போல் ‘பறை’ என்ற கவிதையில் வரும் ஒரு வரி, ‘குமரய்யாவின் பறை சின்னக் குமரய்யாவின் எதிர்காலத்தைக் காக்கக்கூடும்’ என்று தீர்மானம் வழங்குகிறது. இத்தீர்ப்பு ராஜாஜியின் குலத்தொழில் கோட்பாட்டை வழி மொழிவதாக திராவிட சிந்தனையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும். இவையெல்லாம் இப்பிரதி முன் வைக்கும் அரசியல் அல்லவா? தவிரவும், ‘அணையுங்கள்’ என்ற கவிதையில் தெலுங்கானா பிரச்சனை பற்றிப் பட்டும் படாமலும் பேசுகிறார் என்பது கவனத்துக்குரியது. புரட்சித் தீயை அணையுங்கள் என்று இவர் கூறுவது யாருக்கான ஆதரவு அரசியலை முன் வைக்கிறது என்பதை யோசிக்க வைக்கிறது.
எது எப்படியோ, நவீன தெலுங்குக் கவிதை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இந்தத் தொகுப்பு ஒரு உரை கல்லாக இருக்கிறது என்று சொல்லலாம். சம காலத் தமிழ்க் கவிதை போலவே இந்தக் கவிதைகளும் கீழைத்தேய மனத்துடன் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வாசகனை அந்நியப்படுத்தாத மொழி பெயர்ப்பு இந்த நூலின் பலம். இதுவே இந்த நூலை ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாக ஆக்குகிறது.
<><><><><>
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment