Friday, December 9, 2011

பின் நவீனத்துவம் இன்று தமிழ்ச்சூழலில் இறந்து விட்டதா?

எம்.ஜி.சுரேஷ்

உண்மையில் பின் நவீனத்துவம் மரணம் அடைந்து விட்டதா? ஆமாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இருக்கும் ஒரு பொருள் இல்லாமல் போவதுதான் மரணம் என்று குறுகியபார்வையில் பார்க்காமல், மரணம் என்பதை மாறுதல் என்று விரிந்த பார்வையுடன் பார்க்கும் போது பின் நவீனத்துவம் மரணம் அடைந்துவிட்ட உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பஞ்ச பூதங்கள் ஓரிடத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒன்று சேரும் போது அதை டைனசார் என்றோ மனிதன் என்றோ அழைக்கிறோம். அவை தனித்தனியே பிரிந்து செல்லும் நிகழ்ச்சியை மரணம் என்கிறோம். மீண்டும் அவை ஒன்று சேரும் போது அது பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. ஆக, பஞ்ச பூதங்கள் ஒன்றாகச் சேர்ந்த போது டைனசார் உருவானது. பஞ்ச பூதங்கள் பிரிந்து போனபோது டைனசார் மரணம் அடைந்தது. அப்போது பிரிந்த பஞ்சபூதங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்த போது மனிதன் தோன்றினான். எனவே, டைனசார் பஞ்சபூதங்களாகப் பிரிந்த போது அதிலிருந்து பிரிந்து வந்த கால்ஷியம் அணுக்கள் என் எலும்பில் இருக்கின்றன. இதர அணுக்கள் மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன் போன்றோரின் உடல்களில் இருக்கின்றன. இது டைனசாரின் மரணமா அல்லது மாற்றமா?

தொண்ணூறுகளில் பின் நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகமானது. . காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹோர்ஹே லூயி போர்ஹே, இதாலோ கால்வினோ, டொனால்ட் பார்தல்மே போன்ற அயல்நாட்டுப் பின் நவீன எழுத்தாளர்களின் கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, பின் நவீன புனைகதைகள் தமிழுக்குப் பரிச்சயமாயின. அந்தப் பாதிப்பில் தமிழிலும் எழுத்தாளர்கள் அது போல எழுத முயற்சி செய்தார்கள். சில்வியா, தி.கண்ணன், ரமேஷ்-பிரேம், சாருநிவேதிதா போன்றோர் மையம் நீக்கிய, நெரற்ற எழுத்தில் பின் நவீன சிறுகதைகளை எழுதி ஒரு தொடக்கத்தை நிகழ்த்தினார்கள். அந்தத் தொடக்கம் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ் போன்றோரால் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது முக்கியமானது. சில்வியா போன்றோரால் எழுதப்பட்ட பின் நவீனக் கதைகள் மரணமடைந்து, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களால் இன்னொன்றாகப் பிறப்பெடுத்திருக்கிறது. விஷ்ணுபுரம், உபபாண்டவம், நெடுங்குருதி போன்றவை நவீனபிரதிகள் அல்ல. அவை பின் நவீனத்துவக் கூறுகள் உள்ள பிரதிகள். அவை இந்துத்வாவைக் கேள்விக்குள்ளாக்கவில்லை; எனவே, அவை எப்படிப் பின் நவீனப் பிரதிகள் ஆகும் என்று சட்டைக் காலரைப் பிடித்துக் கேட்பது அழகியல் ஃபாசிஸம் ஆகும். மையத்தைத் தகர்ப்பது பின் நவீனத்துவம் எனில், ஒரு பின் நவீன கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடிப்பதும் ஒரு புதிய மையத்தைக் கட்டமைக்கும் முயற்சி அல்லவா? எனவே, பின் நவீன கூறுகளைக் கொண்டுள்ள கதைகளை நாம் பின் நவீனக் கதைகளாக வரித்துக் கொள்வதில் தவறில்லை. சுந்தரராமசாமியுடன் நவீன இலக்கியம் ஒரு முடிவுக்கு வந்தது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ்-பிரேம் போன்றோரால் தமிழ்ப் பின் நவீன எழுத்து முன்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. தலித்தியம், பெண்ணியம், மூன்றாவது பாலினம் போன்றவை பின் நவீனத்துவம் நமக்கு அளித்த கொடைகள்.இன்றைய தேதியில் அவை உச்ச நிலையில் இருக்கின்றன. பின் நவீனத்துவம் இறந்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், தலித்தியமும், பெண்ணியமும் கூட சேர்ந்து உடன்கட்டை ஏறிவிட்டன என்று கொள்ளலாமா?
நன்றி: உயிர்மை, டிசம்பர், 2011

<><><><><><><><><>

1 comment:

  1. பின் நவீனம் பற்றிய உங்கள் விளக்கங்களும் , கருத்துகளும் மிகத்தெளிவாக இருக்கின்றன. நான் படித்த சிலரின் கட்டுரைகளும் நூல்களும் என்னைக் குழப்பத்தில் தள்ளியும் பின்னர் புரியாமையையும் உண்டாக்கியது. மலேசிய சிற்றிதழான மௌனத்திலும், இணய ஏடான வல்லினத்திலும் உங்கள் பங்களிப்பால் சிற்றிதழ் எழுத்தாளர்கள் பலனடைந்திருக்கிறார்கள். அதற்கு நான் ஒரு உதாரணம். நன்றி

    ReplyDelete