Saturday, April 28, 2012


நவீனத்துவம் நமக்களித்த நான்கு மரணங்கள் எம்.ஜி.சுரேஷ் ’நவீனத்துவம் மரணமடைந்து விட்டது’ என்பது பின் நவீனத்துவவாதிகளின் கொள்கை. இந்தக் கொள்கைக்கு ஆதாரமாக அவர்கள் நவீனத்துவ யுகத்தில் நிகழ்ந்த முக்கியமான நான்கு மரணங்கள் குறித்துப் பேசுகிறார்கள். முதலில் நவீனத்துவம் பற்றி... ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய மரபு அறிவொளி (enlightenment) மரபு. மதத்தையும், மரபார்ந்த நெறிகளையும் விட , அறிவியலும், பகுத்தறிவும்தான் முக்கியமானவை என்று அறிவொளி இயக்கம் நம்பியது. வளர்ச்சி, தன்னம்பிக்கை, பகுத்தறிவு, பூரணத்தைத் தேடும் முயற்சி போன்றவை அறிவொளி மரபின் செயல் திட்டம். உண்மையான சுயத்தை அறியும் ஞானமே இதர ஞானங்களுக்கெல்லாம் அடிப்படை என்பது அறிவொளி மரபின் கோட்பாடு. அறிவொளி மரபின் செயல் திட்டமே நவீன யுகத்தின் செயல் திட்டமாகவும் நீட்சி அடைந்தது. 1890-ல் கால் கொண்ட நவீனத்துவம் பல புரட்சிகளைப் பிரசவித்தது. நவீனத்துவம், நவீன மரபு, நவீன யுகம், நவீன நூற்றாண்டு, நவீன மனநிலை போன்ற புதிய சொல்லாடல்களை உற்பத்தி செய்தது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ரொமாண்டிசிசத்தின் புத்தார்வ மனப்பான்மையும், அறிவொளிக்கால அறிவு நெருக்கடியும் புணர்ந்து பெற்ற சிசுவே நவீனத்துவம் எனலாம். நவீனத்துவம் ஒரு புறம் மனித உரிமைகளைக் கொண்டாடியது. பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. அமெரிக்க ஜனனாயகம், ருஷ்ய சோஷலிசம் போன்ற முற்போக்குச் சிந்தனைகளை அமலாக்கம் செய்தது. மத நிறுவனங்களிடமிருந்து அதிகாரத்தை விடுவித்தது. இன்னொரு புறமோ, ஐரோப்பாதான் உலகிலேயே உயர்வான பிரதேசம் என்று பீற்றிக் கொண்டது. சுதந்திரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே, சுதந்திரம் பறிக்கப்பட்ட காலனிகளை உருவாக்கியது. ஒருபுறம் மனித உரிமைகள் குறித்து கவலைப்பட்டது. மறு புறம் மனித உரிமைகள் கோரும் போராளிகளைச் சிறையில் அடைத்து மனித உரிமை மீறல்களைச் செய்தது. இந்தக் குளறுபடிகளால் நவீன யுகம் தனது மதிப்பீடுகளைத் தொலைத்த யுகமாக மாறிவிட்டது. நவீன யுகம் போடும் இரட்டை வேடத்தால் ஜனநாயகம், பாராளுமன்றம், அரசு, நீதித் துறை போன்ற சொல்லாடல்கள் வெறும் சொல்லாடல்களாகவே நின்று விட்டன. ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு பக்க விளைவு உண்டு. சோர்வு, அவநம்பிக்கை, பகுத்தறிவின் மீதான அலுப்பு, பூரண அறிவின் சாத்தியமின்மையும் ஏமாற்றமும் ஆகியன நவீனத்துவத்தின் பக்க விளைவுகள். எனவே, உளுத்துப்போன நவீனத்துவத்தையும், அதைத் தாங்கி நிற்கும் தூண்களையும் பின் நவீன சிந்தனையாளர்கள் நிராகரிக்கிறார்கள். நவீனத்துவத்தின் மரணத்தை அறிவிக்கிறார்கள். நவீனத்துவம் மரணமடைந்து விட்டதற்கு அடையாளமாகக் கீழ்க்காணும் நான்கு மரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். 1. மனிதனின் மரணம், 2. உண்மையின் மரணம், 3.ஆசிரியனின் மரணம், 4.கவிதையின் மரணம் மனிதனின் மரணத்தை அறிவித்தவர் ஃபிரெஞ்சு பின் நவீனத்துவவாதியான மிஷல் ஃபூக்கோ. அதன் இயல்பான அர்த்தத்தில் மனிதன் என்று அழைப்பதற்கு ஏற்ப யாரும் இல்லை. இருப்பவை யாவும் உடல்களே. அதிகாரத்தின் உரையாடல்கள் மூலம் சாதுவாக்கப்பட்ட உடல்கள். மன்னராட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும் சரி, அந்த அரசின் ஆட்சியின் கீழ் வாழும் மனிதன் என்பவன், உடல் என்ற சிறையில் அடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவாக இருக்கிறான் என்கிறார் ஃபூக்கோ. இந்தச் சந்தர்ப்பத்தில் ஃபூக்கோ ‘உடல் ஆதிபத்தியம்’ என்ற சொல்லாடலைப் பயன் படுத்துகிறார். நவீன மனித அறிவியல்கள் யாவும் மனித உடலையும் அதன் நடத்தையையும் சதா ஆய்வு செய்தபடியே இருக்கின்றன. ஒழுங்குமுறைகளை விதித்து அதன்படி அந்த உடல்கள் நடந்து கொள்கின்றனவா இல்லையா என்பதைக் கண்காணிக்கின்றன. சிறையில் ஒரு கைதி எவ்வாறு கண்காணிக்கப்பட்டவாறு இருக்கிறானோ, அதே போல் சிறைக்கு வெளியேயும் மனிதன் கண்காணிக்கப்பட்டு வருகிறான்; அதாவது, ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டு, சாதுவாக்கப்பட்ட உடலில், வெறும் நடைப்பிணமாக. முதலில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட மனிதன், இரண்டாவதாக வரிசைப்படுத்தப் படுகிறான். ஒரு மாணவன் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. அவன் வகுப்பிலேயே முதல் ராங்க் எடுக்கும் மாணவனாகவும் இருக்க வேண்டும். அதேபோல் நகரத்தில் ஒரு உணவு விடுதி இருக்கிறது என்றால் அது சிறப்பானதாக இருந்தால் மட்டும் போதாது. அது நகரத்திலேயே மிகச் சிறந்த பத்து (டாப் டென்) உணவு விடுதிகளில் ஒன்று என்ற தர வரிசையில் இடம் பெற வேண்டும். ஆக, உடலாக்கப்பட்ட மனிதன் தர வரிசையில் இடம் பிடித்தாக வேண்டியவனாக இருக்கிறான். மூன்றாவதாக, தேர்வுகள் மூலம் கட்டுப்படுத்தப் படுகிறான். மனிதன் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேர்வுகளைச் சந்திக்க வேண்டியவனாக இருக்கிறான். ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை சதா தேர்வுகள் அவனை எதிர்கொள்கின்றான. இந்தத் தேர்வுகளே அவனது இருத்தலைத் தீர்மானிக்கின்றன. தேர்வில் தோற்றுவிட்டால் அவனது இருத்தல் கேள்விக்குள்ளாகி விடும். இதனால்தான் தேர்வில் தோற்பவர்கள் தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டப்படுகிறார்கள். சமூகம் என்பது ஒரு மிகப்பெரிய சிறைச்சாலை. இதில் உள்ள மக்கள் அதாவது உடல்கள் கிளார்க்குகள், இஞ்சினீயர்கள், மருத்துவர்கள், ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள் என்று பலவிதமாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். நவீன யுகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இவர்களை இவ்விதம் வைத்திருக்கிறது. நவீன யுகத்தின் அதிகாரம் இவர்களை இவ்விதம் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. அதிகாரம் இவ்விதம் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. ‘உலகம் என்பது அதிகாரத்தின் விருப்புறுதியே’ என்றார் நீயட்ஷே. ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகாரம் தேவை. ஒருவன் அதிகாரத்தைக் கைப்பற்றித் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் போது, மற்றவர்களின் ஆசைகள் விலக்கி வைக்கப்படுகின்றன. அவர்கள் துன்புறுகிறார்கள். தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். வெற்றியாளர்களுக்கும், விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான போட்டியே வரலாறு என்று அழைக்கப்படுகிறது. அதிகாரம் என்பது இரண்டு நுனிகள் கொண்டது. ஒன்று செலுத்தும் நுனி; இரண்டு பெறும் நுனி. செலுத்தும் நுனியில் இருப்பவன் பெறும் நுனிக்குப் போகலாம்; அதே போல் பெறும் நுனியில் இருப்பவன் செலுத்தும் நுனிக்கு வரலாம். எப்படி இருந்தாலும் இருவருமே சதா முறைமைப்படுத்தப் படுபவர்களே. சாதுவாக்கப்பட்ட உடல்களே. தனி மனித சுதந்திரம், விடுதலை, கருத்து சுதந்திரம் போன்ற எந்த உரிமைகளும் அற்றவர்களே. இன்றைய நவீன யுகம் மனிதர்களை எண்களாகக் குறுக்கி விட்டது. அவன் பிறந்த உடன் அவனுக்குப் பிரசவ ஆஸ்பத்திரியில் எண் தரப்படுகிறது. அதன் பிறகு பள்ளியில் சேரும் போது பதிவு எண் வழங்கப்படுகிறது. பின் வரிசையாக கல்லூரியில் வரிசை எண், வேலைக்குப் போகும் போது தொழிலாளி எண், டிரைவிங் லைசென்ஸ் எண், வங்கிக் கணக்கு எண் என்று வாழ்நாள் முழுதும், அவனை எண்கள் தொடர்கின்றன. அவன் இறந்ததும் அவன் எரிக்கப்படும் போது அல்லது புதைக்கப்படும் போது - அவன் உடலை அழிப்பதற்காகத் தரப்படும் கட்டணத்தின் பொருட்டு - தரப்படும் ரசீது எண் அவனுடைய அடையாளமாக மாறிவிடுகிறது. இன்றைய நவீன யுகத்தில் ஒரு மனிதன் தனிப்பட்ட ‘சுயம்’ (self) இன்றி இருக்க வேண்டி இருக்கிறது. அவனது சுயம் என்பது அவன் சார்ந்திருக்கும் சமூக அமைப்பு மற்றும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ஒரு தனிமனிதன் எனப்படுபவன் தனியான, சுதந்திரமான, தனது முடிவுகளைத் தானே எடுக்க முடிந்த ஒரு பிரஜை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. நவீன மனிதன் அப்படி இல்லை. இதைத்தான் ஃபூக்கோ, ‘சுயமான முழுமையான மனிதன் என்று யாருமே இல்லை; வரலாறு மனிதர்களை வெறும் உடல்களாகப் பார்க்கிறது; குறியீடுகளாக எடுத்துக் கொள்கிறது. எனவே, வரலாற்றைப் பொறுத்தவரை மனிதன் என்பவன் இறந்தவனே’ என்கிறார். எனவே நவீன யுகம் மனிதன் மரணமடைந்த யுகம் என்று சொல்லலாம். ’நமது யுகத்தில் உண்மை இறந்து விட்டது; நாம் உண்மையின் நகல்களுடன் வாழ்கிறோம்’ என்று அறிவித்து அனைவரையும் திகைக்க வைத்தவர் ழீன் பொத்ரியார். ‘இங்கு எதுவுமே நிஜம் இல்லை; டீவி, கம்ப்யூட்டர், சினிமா. பத்திரிகை, விளம்பரங்கள் போன்ற எல்லாமே நகல்களின் பிம்பங்களைப் பொழிந்தபடியே இருக்கின்றன. இந்த நகல்கள்தான் நமது காலத்தின் உண்மைகள்’ என்பது பொத்ரியாரின் கருத்து. எம்.டீவி யில் மடோன்னாவின் தொப்புளும், மார்பங்களும் குலுங்கித் ததும்பும் போது அது அசல் உறுப்புகளை விட அதிக செக்ஸ் உணர்வைத் தூண்டுகிறது. இந்த நகல் உறுப்புகள் அசல் உறுப்புகளை விட அசலாக இருக்கின்றன. அதாவது இந்த நகல் உண்மை, அசல் உண்மையைவிட அசல் தன்மையுடன் இருக்கின்றன. (hyper-real is more real than real) என்கிறார் அவர். ஒரு காலத்தில் அசல் பொருட்கள் உருவாக்கப்பட்டன. அதே போல் நகல்களும் உருவாக்கப்பட்டன. எடுத்துக் காட்டாக, டாவின்சியின் மோனலிசாவைக் கூறலாம். டாவின்சி உருவாக்கிய மோனலிசா ஒற்றைப்படைப்பு. அசல் படைப்பு. ஆனால் இன்றைக்கு ஓராயிரம் நகல் மோனலிசா படங்கள் காணக்கிடைக்கின்றன. இன்றைக்கு ஒரு ஹோண்டா சிடி அல்லது மாருதி கார்கள் உருவாக்கப்படுகின்றன என்றால் அதில் அசல் கார் எது நகல் கார் எது என்று பிரித்துப் பார்க்க முடியுமா? மோன லிசாவில் டாவின்சியின் ஒரிஜினல் மோனலிசா, நகலெடுக்கப்பட்ட மோனலிசா என்று பிரித்துப் பார்ப்பதைப் போல, இந்தக் கார்களை எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும். கார் மட்டுமல்ல நவீன யுகத்தின் எல்லாப் பொருட்களுமே நகல்கள்தான்; நகல்களின் பெருக்கம்தான். நமது சமூகம் நுகர்வோர் சமூகம். கண்கொள்ளாக்காட்சியை (spectacle) எதிர் கொள்ளும் சமூகம். இன்றைய முதலாளிய சமூகத்தில் மூலதனம் வெறும் மூலதனமாக மட்டும் பெருகவில்லை. அது பிம்பங்களாகவும் பெருகுகிறது. அந்தப் பிம்பங்கள் கால்பந்தாட்டப் போட்டிகள், ஓவியக் கண்காட்சிகள், தொலைக்காட்சிப்பெட்டி விளம்பரங்கள் என நீள்கின்றன. இக்கண்கொள்ளாக் காட்சிகளைத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குகிறது. இவை பிம்பங்களின் தொகுப்பு மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே உற்பத்தி செய்யப்படும் புதிய உறவுகளும் கூட. நுகர்வு நிகழ்த்தும் கண்கொள்ளாக்காட்சி என்பது சமூகத்தைத் தன்னுள் இணைத்துக் கொள்வதுடன், அதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் செய்கிறது. நுகர்வியம் பொருட்களை உற்பத்தி செய்வதையும், அவற்றை விற்பனை செய்வதையும் ஒரு புதிய எல்லைக்குள் முதலாளியத்தைப் பிரவேசிக்க வைத்து இருக்கிறது. இதனால், ஒரு பணம் புழங்கும் சமூகத்தில் உற்பத்தியை விட நுகர்வுதான் மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நுகர்வோரை நகல் பொருட்கள் ஆக்கிரமிக்கின்றன. இன்றைய நவீன யுகம் நுகர்வோர் யுகமாக மாறி இருப்பதால் இங்கு காதல், பாசம், நட்பு எல்லாமே நகல்களாக மாறிவிட்டன. எல்லாமே நுகர் பொருட்களாக ஆகிவிட்டன. எனவே, உண்மை மரணமடைந்துவிட்டது எனலாம். பின் நவீனத்துவவாதிகளில் ஒருவரான ரொலாண் பார்த், ‘ஆசிரியனின் மரண’ த்தை அறிவித்தார். இலக்கியம் என்பது தந்தையின் மரணத்துக்குப் பின் பிறக்கும் குழந்தையைப் போன்றது என்கிறார் பார்த். 1968 ஆம் ஆண்டு ரொலாண் பார்த் எழுதிய ‘ஆசிரியனின் மரணம்’ என்ற கட்டுரையில் கீழ்க்காணும் செய்திகள அவர் பதிவ்ய் செய்திருக்கிறார். 1.ஆசிரியனின் மரணத்தை முன்னிட்டு வாசகன் பிறக்கிறான். 2. பிரதி என்பது எண்ணற்ற கலாசார மையங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களின் திசுக்கள் ஆகும். 3. பேசுபவன் ஆசிரியன் அல்ல; மொழியே. ஆசிரியன் என்பவன் ஓர் அநாமதேய ஆசாமி. அவனுக்கும் அவனால் எழுதப்பட்ட பிரதிக்கும் சம்பந்தம் இல்லை. ஏனெனில், ஒரு பிரதியை எழுதி முடித்த உடன் அவன் இறந்தவன் ஆகிறான். படைப்பாளி என்று ஒரு நபரை நாம் நம்பும் போது அவன் தன் புத்தகத்துக்குக் கடந்த காலமாக நிற்கிறான். ஒரு எழுத்தாளன் அவன் எழுதும் புத்தகத்துக்குத் தந்தை போன்றவன். புத்தகத்தை அவன் தன்னுள் கருவாகச் சுமக்கிறான். அதற்காக உழைக்கிறான்; போராடுகிறான்; புத்தகத்தைப் பிறப்பிக்கிறான்.புத்தகம் பிறக்கும் போது படைப்பாளி இறக்கிறான். எழுதுபவனைப் பிரதியாளன் (scriptor) என்று அழைக்கிறார் பார்த். எழுத்து என்பது நான்கு அம்சங்கள் கொண்டது. ஒன்று: ஆசிரியன்; இரண்டு: பிரதி, மூன்று: வாசகன், நான்கு: விமர்சகன். ஓர் ஆசிரியன் ஒரு பிரதியை எழுதுகிறான். எழுதும் போது உயிருடன் இருக்கிறான். எழுதி முடித்த பின் அவன் இறந்து அவனுள் இருக்கும் வாசகன் பிறக்கிறான். தனது பிரதியைத் தானே வாசிக்கும் போது அந்த வாசகனுக்குத் தான் எழுதிய பிரதியில் இருக்கும் முரண்பாடுகள் தெரிகின்றன. அப்போது அந்த வாசகன் விமர்சகனாகிறான். ஆக, ஆசிரியன் என்பவன் ஏக காலத்தில் வாசகனாகவும், விமர்சகனாகவும் இருக்கிறான். இதைத்தான் ஆசிரியனின் மரணம் என்கிறார் பார்த். இதில் வரும் ஆசிரியனின் மரணம் என்பது உருவகம். நான்காவது மரணம் சற்றும் நாம் எதிர்பார்க்க முடியாத மரணம். அதிர்ச்சி தரும் மரணம். அது – கவிதையின் மரணம். என்னது கவிதையின் மரணமா? ஆமாம். கவிதை இறந்து விட்டது. பின் நவீனத்துவம் கவிதையின் மரணத்தை உறுதி செய்கிறது. பின் நவீனத்துவவாதியான பார்த் ஒரு பிரதியை - அது கதையோ அல்லது கவிதையோ - அதை இரண்டாகப் பிரிக்கிறார். ஒன்று: எழுத்துத்தனம் (writerly); இரண்டு: வாசிப்புத்தனம் (readerly). எழுத்துத்தனம் என்பது ஓர் எழுத்தாளனின் சுயப்பிரக்ஞை அவனது எழுத்துகளில் பதிவு செய்யப்படுவது. அதில் அவன் சொல்ல வரும் கருத்து பதிவாகி இருக்கும். வாசிப்புத்தனம் என்பது ஒரு வாசகன் அந்தப் பிரதியை எவ்வாறு உள் வாங்கிக் கொள்கிறான் என்பது பற்றியது. எழுத்துத்தனம் என்பது வாசிப்புத்தனத்துக்கு எதிரானது. எழுதுபவன் சொல்லும் கருத்தை வாசகன் அதற்கு எதிர்மறையாகப் புரிந்து கொள்ள முடியும் எனவே, எழுத்தாளன் சொல்லும் கருத்து முதல் வரிசை அர்த்தம் (first order meaning) என்றும், வாசகன் அதைப் புரிந்து கொள்ளும் அர்த்தத்தை இரண்டாவது வரிசை அர்த்தம் (second order meaning) என்றும் பார்த் கூறுகிறார். ஒரு மொழி என்பது குறி (எழுத்து)களால் ஆனது. அது எழுதப்படும் போது அதற்குரிய குறிகளால் ஆன அர்த்தத்தையே அது தாங்கி நிற்கும். எடுத்துக்காட்டாக தமிழில் ’அவன் கண்’ என்ற சொல் ’அவனுடைய கண்’ என்றும் ’அவன் இடத்தில்’ என்றும் இரு விதமாகப் பொருள் படும். ஆனால், இதில் எந்தப் பொருளை எடுத்துக் கொள்வது என்பது எழுதுபவனுக்கு ஒருமாதிரியாகவும் வாசிப்பவனுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இது சாதாரண உரைநடைக்கே பொருந்தும். மிக எளிமையான சொற்களைக் கொண்டு எழுதும் போதே இப்படிப்பட்ட குழப்பம் வருகிறது என்றால் படிமம், உருவகம் போன்றவற்றையும் சேர்த்து ஒரு கவிதையாக எழுதும் போது அதனால் எவ்வளவு குழப்பம் ஏற்படும்? ’அவள் பறந்து போனாளே’ என்ற பாடல் வரியில் அவள் சிறகு விரித்து ஒரு பறவையைப் போல் பறந்து போனாள் என்பது முதல் வரிசை அர்த்தம். அதாவது குறிகள் சொல்லும் அர்த்தம். அவள் இறந்து விட்டாள் என்பது இரண்டாவது வரிசை அர்த்தம். இந்த இரண்டாவது வரிசை அர்த்தம் உருவகம். அடிப்படையில் கவிதை என்பது பொய்களால் ஆனது. தாமரை முகம் என்பது ஒரு பொய். தாமரைக்கும் ஒரு முகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது அறிவுபூர்வமான உண்மை. ஆனால், ரசனையின் பொருட்டு அந்தப் பொய் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இது போல் ஏகப்பட்ட உவமைகளும், உருவகங்களும், அலங்காரங்களும் சேரும் போது கவிதையானது அர்த்தங்களின் சுமை தாங்காமல் தட்டுத் தடுமாறுகிறது. நேரடியாக ஒரு பொருளைப்பற்றிப் பேசும்போதே அது இரண்டாவது, மூன்றாவது அர்த்தங்களுடன் திணறும் போது, அதன் மேல் மேலும் மேலும் சுமைகளை ஏற்றும் போது அது குழப்பத்தையே ஏற்படுத்தும். வாசகனின் மீதான வன்முறையாக மாறும். எனவே கவிதை என்பது வாசகனின் மீதான வன்முறையாக இருக்கிறது. என்பது பின் நவீனம் கவிதையின் மேல் சுமத்தும் குற்றச்சாட்டு. சரி, கவிதை இறந்து விட்டது அப்படியானால் அதை அடக்கம் செய்துவிட்டு அஞ்சலி செய்யலாமா? அதுதான் இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன் சர்ரியலிஸ்டான ஆந்திரே பிரதான் நாவலின் மரணத்தை அறிவித்தார். நாவல் ஒரே மாதிரியாக எழுதப்பட்டு, வணிகப் பண்டமாக மாறி, தன் கலைத்தன்மையை இழந்துவிட்டது என்று அவர் புகார் சொன்னார். நம் ஊரில் கூட கல்கியின் நாவல்களை புதுமைப்பித்தன் கிண்டல் செய்திருகிறார். அதற்காக நாவலை யாரும் சிதையில் வைத்து எரித்து விடவில்லை. மாறாக, நதாலி சரௌட் போன்றவர்கள் எதிர் நாவல்கள் எழுதினார்கள். ஆந்திரே பிரதானே கூட ‘நாடியா’ என்ற ஒரு நாவலற்ற நாவலை எழுதினார். தொடர்ந்து தாமஸ் பிஞ்சன், ஜான் பார்த், இடாலோ கால்வினோ, உம்பர்ட்டோ எக்கோ பொன்றவர்கள் மாற்று நாவல்கள் எழுதினார்கள். செத்த நாவலுக்கு உயிர் கொடுத்தார்கள். நாவலின் போக்குகளை மாற்றிக் காட்டினார்கள். அவை பின் நவீன நாவல்களாக உலகெங்கும் அறியப்படுகின்றன. அது போல், மரணமடைந்த கவிதையை உயிர்ப்பிக்க வேண்டும் என்பது பார்த்தின் விருப்பம். அதற்கு சாத்தியம் இருக்கிறதா? இருக்கிறது. எந்த ஒரு புதிய விஷயமும் ஏதாவது ஒரு பழைய கூறிலிருந்தே பிறக்கிறது. அதன்படி பார்த்தால் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வடிவத்தை பார்த் கொண்டாடுகிறார். ஹைக்கூ கவிதை ஒரே ஒரு கருத்து, ஒரே ஒரு படிமம் அல்லது ஒரே ஒரு உணர்ச்சி பற்றி மட்டுமே பேசுகிறது. அதில் மிகையுணர்ச்சி இல்லை. கவித்துவ அசட்டுணர்ச்சி இல்லை. மையம் இல்லை. அதன் தளம் ஆழமின்றி தட்டையாக இருக்கிறது. எனவே, அதை மட்டுமே பின் நவீன கவிதையாக ஏற்றுக் கொள்ள முடியும் எனபது அவர் கருத்து. ஹைக்கூ கவிதையை அடிப்படையாக வைத்து, பின் நவீன கவிதையை வளர்த்தெடுக்க முடியும். ஆக, நவீனத்துவ யுகம் மரணமடைந்து விட்டது என்பதற்கு ஆதாரமாக இந்த நான்கு மரணங்களையும் கூறலாம். ஆனால் இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் நவீனத்துவத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத் திரைப்பட இயக்குநர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ஒரு புகழ் பெற்ற திரைப்படத்தை இயக்கினார். ‘சைக்கோ’ என்ற அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன், இறந்து போன தன் தாயின் உடலை ஓர் அறையில் பத்திரமாக வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருப்பான். அவள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டு அவளுடன் தினமும் பேசுவான். அதே போல நம்மில் பலர் இறந்து போன நவீனத்துவத்தை, அது இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டு, அந்த நம்பிக்கையுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? (பண்புடன், இணைய இதழ், மார்ச், 2012) ####################

1 comment:

  1. ஆழமான கட்டுரை. நவீனத்துவம் பற்றி சிந்திக்கத்தூண்டுகிறது. ஆனால் விவாதத்தை எழுப்பக்கூடியது. சில இடங்களைப் புரிந்துகொள்ள சிரம்மாக இருக்கிறது.

    ReplyDelete