Thursday, December 13, 2012
பின் நவீன இலக்கிய கருத்தியல்கள்
<>பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள்<>
எம்.ஜி.சுரேஷ்
பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள் என்பதைப் பற்றிப் பேசும் முன் பின்நவீன சிந்தனைகள் பற்றிப் பேசுவது முக்கியமானது.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் கால கலை இலக்கிய வரலாற்றில் கிளாசிசம் முதல் இருத்தலியம் வரையிலான பல் கோட்பாடுகள் தோன்றி இருக்கின்றன. ஓர் அலை வந்து சென்றதும், மீண்டும் உருப்பெற்று வரும் இன்னொரு அலையாக இந்தக் கோட்பாடுகள் கலை இலக்கியப் பரப்பில் தோன்றி அமிழ்ந்து சமநிலை எய்தி இருக்கின்றன.
கிளாசிசம் முதல் இருத்தலியம் ஈறாக தோன்றி இருக்கும் இவற்றைப் போலவே, மற்றுமொரு இசமாக அல்லது கோட்பாடாக பின்நவீனத்துவத்தைக் கொள்ள முடியாது. ஏனெனில், பின்நவீனத்துவம் என்பது கோட்பாடு அல்ல. தனக்கு முன் வந்திருக்கும் அனைத்துக்கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்க வந்ததே பின்நவீனத்துவம். எனவே, இதை ஒரு சிந்தனை என்றோ அல்லது ஒரு வித மனநிலை என்றோ அழைக்கலாம். இதை ஒரு ஆய்வு முறை என்றும் கூற முடியும்.
தவிரவும், கோட்பாடு என்பது மையம் கொண்டது. ஒவ்வொரு கோட்பாட்டுக்கும் அச்சாணியாக ஒரு கருத்து மையம் இருந்தே தீரும். பின் நவீனக் கருத்தியலோ மையம் தகர்க்கப்பட வேண்டும் என்கிறது. எனவே, தனக்கு என்று ஒரு மையம் இல்லாத, பிற மையங்களை எதிர்க்கிற ஒரு மனோபாவமே பின் நவீனத்துவம். மையமும் விளிம்பும் ஒன்றையொன்று அப்புறப்படுத்தி விளையாடும் விளையாட்டே எல்லாமும் என்று கூறுவதே பின் நவீன சிந்தனை.
நவீனத்துவத்துக்குக்குப் பின் வருவதால், நவீனத்துவத்துக்கு ஒரு முன்னொட்டு சேர்த்து இது பின் – நவீனத்துவம் என்று வழங்கப்படுகிறது.
சரி, இப்போது பின் நவீன இலக்கியக் கருத்தியல்களுக்கு வருவோம்.
மார்க்சியம் அல்லாத ஆனால் மார்க்சியத்தைப் போலவே இதுவும் ஒரு இடதுசாரிப் போக்கு எனலாம். நவீனத்துவம் உன்னதத்தைக் கொண்டாடியது. பின்-நவீனத்துவம் உன்னதம் என்பதை நிராகரித்தது. நவீனத்துவம் உன்னத தனிமனிதத்தைக் கொண்டாடியது. பின்-நவீனத்துவம் அதற்கு மாற்றாக தற்சார்புத் தனிமனிதவாதத்தை முன் வைத்தது. அதைத் தனது வாசிப்புக் கோட்பாட்டில் எடுத்துரைத்தது. வாசிப்பு என்பது ஒற்றைத் தன்மை கொண்டது அல்ல. ஒரு பிரதி என்பது வாசிப்புக்குரியது. வெவ்வேறு வாசகர்கள் ஒரு பிரதியை வெவ்வேறு வாசிப்புக்கு உட்படுத்தலாம் என்றது பின்-நவீனத்துவம். இது வாசிப்பு ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது.
பின் நவீன சிந்தனைப் போக்கை வளர்த்தெடுத்தவர்களாக ஃபிரெஞ்சு சிந்தனையாளர்களான ழாக் தெரிதா, மிஷல் ஃபூக்கோ, ரொலாண் பார்த், ழாக் லக்கான் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்கள் த்த்தம் துறைகளில் நிலவி வந்த நவீன சிந்தனைப் போக்குகளைக் கொட்டிக் கவிழ்த்தவர்கள் என்று சொல்லலாம்.
இவர்கள் தத்துவம், அரசியல்,கலை, இலக்கியம், மானிடவியல், உளவியல் என்று சகல துறைகளிலும் தடம் பதித்தார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் துறைகளில் செய்து காட்டிய பகுப்பாய்வை நாம் நமது இலக்கியத்திலும் மேற்கொள்ள் முடியும்.
அவர்களின் பகுப்பாய்வுதான் என்ன?
மிஷல் ஃபூக்கோ எல்லாவற்றையும் அதிகாரத்தின் உரையாடல்களாகப் பார்க்கிறார். சட்டம், மதம், இலக்கியம் போன்ற எல்லாப் பிரதிகளும் அதிகாரத்தின் உரையாடலை வெளிப்படுத்துகின்றன என்பது அவர் கருத்து. அதன்படி பார்க்கும் போது இலக்கியம் என்பது தான் சார்ந்த சமூகத்தின் அதிகாரம் நிகழ்த்தும் உரையாடலை வழி மொழிவதாகும் என்று கொள்ளலாம். ஒரு முதலாளிய சமூகத்தில் அதிகாரத்தின் உரையாடல். ‘அடுத்தவன் சொத்தைத் திருடுவது குற்றம்’ என்று வலியுறுத்துகிறது. ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தில் ‘சொத்து வைத்திருப்பதே குற்றம்’ என்ற உரையாடல் முன் வைக்கப்படுகிறது. அந்தந்த சமூகத்தின் அதிகாரம் நிகழ்த்தும் இது போன்ற உரையாடல்களை அந்தந்த சமூகத்தின் சட்டம், இலக்கியம் போன்றவை நிகழ்த்துகின்றன என்பது ஃபூக்கோவின் சிந்தனை.
இப்படி அதிகார வர்க்கம் நிகழ்த்தும் உரையாடல்களில் நிலவும் அரசியலை நாம் எப்படிக் கண்டு பிடிப்பது?
இதற்குப் பதிலாக பின் நவீன சிந்தனையில் தெரிதாவின் பங்களிப்பான ‘கட்டவிழ்ப்பு’ என்ற கருத்தைச் சொல்ல்லாம்.
கட்டவிழ்ப்பு என்றால் என்ன?
மையத்தைத் தகர்ப்பது.
மையத்தைத் தகர்ப்பது என்றால் என்ன?
மரபார்ந்த கருத்தியல்கள் யாவும் மையங்கள் கொண்டவை. எல்லா மதங்களுக்கும் கடவுள் என்ற கருத்து மையமாக இருக்கிறது. எல்லா கிரகங்களுக்கும் சூரியன் மையமாக இருக்கிறது. எழுதப்பட்ட ஒரு பிரதிக்கு லட்சியம், தியாகம், காதல் போன்றவை மையங்களாக இருகின்றன. இந்த மையங்கள் யாவும் ஒற்றைத்தன்மை கொண்டவை. இந்த மையங்கள் ஒற்றை அர்த்தத்தை மட்டுமே வலியுறுத்துகின்றன. பிற அர்த்தங்களை விளிம்பு நிலைக்குத் த்ள்ளி விடுகின்றன. அந்த விளிம்பு நிலை ‘மற்றமை’ (Other) என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ மதம் மையமாக உள்ள சமூகத்தில் மற்ற மதங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றன. மற்றமையான பிற மதங்கள் தாங்களும் மையத்துக்குச் செல்லப் போராடுகின்றன. இதை தெரிதா, ’இரட்டை எதிர் நிலைகளுக்கு இடையே நிகழும் விளையாட்டு’ (Play of binary opposites) என்கிறார்.
இலக்கியத்தைப் பொறுத்த வரை ‘கட்டவிழ்ப்பு’ என்பது ஒரு வாசிப்பு முறை. எந்த ஒரு இலக்கியப் பிரதியிலும் மையம் X மற்றமை என்ற இரண்டு கூறுகள் உண்டு. ஒரு பிரதியை நாம் வாசித்தவுடன் நம் மனத்தில் தோன்றும் முதல் கருத்து அந்த ஆசிரியரால் பிரதியில் முன் வைக்கப்பட்ட கருத்து (மையம்) ஆகும். கொஞ்ச நேரம் கழித்து நாம் அந்தப் பிரதியை ஆய்ந்து பார்க்கும் போது நமக்கு அந்தப் பிரதியில் ஒளிந்திருக்கும் வேறு கருத்து புலனாகும்.அந்த இன்னொரு கருத்து விளிம்பு (மற்றமை) ஆகும்.
எடுத்துக் காட்டாக, ’கோபால் பாருக்குப் போனான்’ என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். இந்த வாக்கியத்தில் சொல்லப்படும் அர்த்தத்தின் படி, ஒருவன் பாருக்குப் போனான் என்று தெரிகிறது. ஆனால், எந்த பாருக்குப் போனான் என்று தெரியவில்லை. அந்த மனிதர் வக்கீலா; பார் கவுன்சிலுக்குப் போனாரா? அல்லது அந்த மனிதர் சர்க்கஸ்காரரா; சர்க்கஸில் பார் விளையாடப் போனாரா?ஒரு வேளை அந்த நபர் மது அருந்துவதற்கு பாருக்குப் போனாரா என்றெல்லாம் குழப்பம் ஏற்படுகிறது. ஏனெனில் மொழி என்பது குழப்பம் தரக்கூடியது. ஒரு வாக்கியத்தைப் பல விதமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படி ஒரு வாக்கியத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள் கொண்டு பார்ப்பது கட்டவிழ்ப்பு என்று அழைக்கப்படுகிறது. எனவே, மேற்சொன்ன வாக்கியத்தில் கிடைக்கும் அர்த்தங்கள் நிச்சயமின்மையுடன் இருக்கின்றன. ’இப்படி நிச்சயமின்மையால் ஆன ஒரு உலகத்தில் நிச்சயத்தன்மையை வலியுறுத்துவது வன்முறையாகும்’ என்பது தெரிதாவின் கருத்து.
எனவே, எந்த ஒரு பிரதி எந்த ஒரு கருத்தை முன் வைத்தாலும், அது சொல்லும் கருத்துக்கு எதிரான இன்னொரு கருத்தை நாம் கண்டு பிடிக்க முடியும். இது ஒரு மையத்துக்கு எதிராக இன்னொரு மையத்தைக் கட்டமைப்பதல்ல.மாறாக இது மையத்துக்கு எதிரான மற்றமையின் அரசியல் செயல்பாடு என்கிறார் தெரிதா.இதை வாசிப்பு அரசியல்(reading politics) எனலாம். தமிழில் நாகார்ஜுனன், அ.மார்க்ஸ், க.பூர்ணசந்திரன், ராஜன்குறை போன்ற பலர் கட்டவிழ்ப்பை செய்து காட்டி இருக்கிறார்கள்.
எல்லாம் சரி. ஒரு பிரதியை வாசிப்பது தொடர்பான கருத்தாக கட்டவிழ்ப்பை வைத்துக் கொள்ளலாம். ஒரு பிரதியை எழுதுவதாக இருந்தால் என்ன செய்வது? இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டிருக்கும் ஒரு மொழியை, குழப்பம் தரும் ஒரு மொழியை வைத்துக் கொண்டு எப்படி ஒரு பிரதியை உருவாக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ரொலாண் பார்த் பதில் தருகிறார். அர்த்தங்களின் சுமையால் தடுமாறும் ஒரு மொழியை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். அதற்கு மாற்று, பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறையே என்கிறார் பார்த்.
ரொலாண் பார்த் ஒரு முக்கியமான பின் நவீன சிந்தனையாளர். இவர் இலக்கியம் குறித்த தனது தீவிரம் மிக்க கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.
நவீனத்துவவாதியான ழீன் பால் சார்த்தர், ‘எழுத்தாளர்கள் என்ற முறையில் நமது கடமை உலகைப் பிரநிதித்துவப் படுத்தலும், அதற்கான சாட்சிகளாக இருத்தலுமே’ என்று சொன்னார். பின் நவீனவாதியான ரொலாண் பார்த் இந்தக் கருத்தை நிராகரித்தார். ’உலகை இலக்கியத்தின் மூலம் அப்படியே கண்ணாடி போல் துல்லியமாகத் தெரியும்படி பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.’ என்றார் அவர்.
‘ஒரு எழுத்தாளன் எழுதும் வேலையானது வெறும் தகவல் தெரிவிக்கும் செயல் அல்ல. அர்த்தத்தையும், ஒழுங்கையும் வலியுறுத்தும் பொருட்டு இலக்கியத்தோடு முட்டி மோதிப் போராடுவதாகும்.’
அப்படிப் போராடி அவன் உருவாக்கும் பிரதி அது சொல்ல வந்த அர்த்தத்தை அப்படியே வெளியிடுகிறதா? அதுதான் இல்லை. எழுத்து என்பது இரண்டு விதமான தன்மைகள் கொண்ட்து. ஒன்று எழுத்துத்தனம்(writerly), இரண்டு:வாசிப்புத்தனம்(readerly). வாசிப்புத்த்னம் என்பது ஒரு பிரதியில் உள்ள எழுத்து எந்த அளவுக்குக் கண்ணாடி போல் துல்லியமாக உலகைப் பிரதிநித்துவப் படுத்துகிறது என்பது பற்றியது. எழுத்துத்தனம் என்பதோ எழுதுபவனின் சுயப்பிரக்ஞை சார்ந்தது. இது வாசிப்புத்தனத்துக்கு எதிரானது. ஆக, ஒரே பிரதியில் ஏக காலத்தில் இரு அர்த்தங்கள் இருக்கின்றன. முதல் அர்த்தம்: முதல் வரிசைஅர்த்தம்(First order meaning). இரண்டாவதாகப் பெறப்படுவது இரண்டாவது வரிசை அர்த்தம் (second order meaning). என்கிறார் பார்த். இதன் மூலம் அவர் தெரிதாவின் கட்டவிழ்ப்பை செழுமைப்படுத்தி இருக்கிறார்.
பார்த்தின் முக்கியமான பின் நவீன இலக்கியக் கருத்துகளாக, ‘பிரதி தரும் இன்பம்’ என்பதையும், ‘ஆசிரியனின் மரணம்’ என்பதையும் குறிப்பிடலாம்.
‘வாழ்வில் இன்பம் தரத்தக்க பொருட்களில் பிரதியும் ஒன்று. ஓர் உணவுப்பண்டம், ஒரு பூந்தோட்டம், ஓர் இனிய குரல், ஓர் இனிய தருணம் ஆகியவற்றைப் போன்றே ஒரு பிரதியும் இன்பம் தரத்தக்கதே. இலக்கியம் என்பது பிரதி தரும் இன்பத்தைத் தவிர வேறில்லை’ என்பது பார்த்தின் கருத்து.
ஒரு பிரதி என்பது நான்கு அம்சங்கள் கொண்டது.
1. ஆசிரியன் 2. பிரதி 3.வாசகன் 4.விமர்சகன்.
ஒரு பிரதி ஓர் ஆசிரியனால் உருவாக்கப்படுகிறது. பிரதி உருவான பின் பிரதி பிறக்கிறது. ஆசிரியன் இறக்கிறான். எழுதி முடிக்கும் வரைதான் அவன் ஆசிரியன். எழுதி முடித்த பின் அவன் ஆசிரியன் அல்ல. ஒரு வாசகன் மட்டுமே. தான் எழுதிய பிரதியை அவன் வாசிக்கிறான். தான் எழுதும் போது கவனிக்காமல் விட்ட தவறுகள் அவன் கண்களுக்குப் படுகின்றன். அப்போது அவன் வாசகன் அல்ல. விமர்சகன். இதில் கூறப்படும் ஆசிரியனின் மரணம் என்பது உருவகம் ஆகும். அடுத்ததாக பார்த் முன் வைக்கும் இலக்கிய அம்சம் ’பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறை’ என்பதாகும்.
அர்த்தங்கள் நிச்சயமற்றவை; ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடிந்த வரை அலங்காரம் நீக்கிய, மிகையுணர்ச்சி தவிர்த்த, படிமங்கள் அற்ற எழுத்து மட்டுமே சாத்தியம் என்றார் பார்த்.இதன் பெயர் பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறை என்றும் முன்னிறுத்தினார். இந்த பாணியில் இயங்கும் எழுத்துமுறையே பின் நவீன எழுத்துமுறை ஆகும்.
நல்லது. மரபார்ந்த எழுத்து முறைக்கு மாற்றாக பின் நவீன எழுத்துமுறை உருவாயிற்று. அதே விமர்சனத்திலும் பின் நவீன விமர்சனம் என்ற ஒன்று உண்டா?
உண்டு. மரபார்ந்த விமரிசனம் இம்மானுவேல் காண்டின் ‘ருசி’ (taste) என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்தது. அது ஒரு கலை, இலக்கிய அனுபவத்தை ஒரு தனிமனித ரசனையின் அடிப்படையில் அணுகித் தீர்ப்பு வழங்கியது. தனிப்பட்ட ரசனை உன்னத அனுபவத்தினால் தோன்றியது. அது பரிபூரணமானது என்று மதிப்பீடு செய்யப்பட்ட்து. அதில் விஞ்ஞானபூர்வமான அடிப்படை இல்லை. எனவே, பின் நவீனத்துவம் ஒரு புதிய விமர்சன முறையை முன் வைக்கிறது. அதன் பெயர்: பிரதி இயல் ஆய்வு (textual analysis).
மரபார்ந்த விமர்சனம் பிரதியின் வரிகளில் உள்ள அர்த்தத்தைப் பற்றிப் பேசுகிறது. பிரதியியல் ஆய்வு வரிகளுக்கிடையே உறைந்திருக்கும் அர்த்தங்களைத் தடம் பற்றிச் செல்கிறது. அர்த்தங்கள் வெடித்துப் பரவுவதைக் கண்டறிகிறது. ஒரு பிரதியில் வெவ்வேறு அர்த்தங்கள் தரும் சொற்களை லெக்ஸியா (Lexia) என்று அழைக்கிறார் பார்த். லெக்ஸியாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஆசிரியன் சொல்ல வரும் கருத்துக்கு அந்தப் பிரதி எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறது அல்லது எதிராக உருவாகி இருக்கிறது என்பதை அனுமானிக்க் முடியும்.
தமிழ்ச்சூழலில் அ.மார்க்ஸ், க. பூரணசந்திரன், ஆர்.முத்துக்குமார் போன்றோர் தமிழ் இலக்கியங்களை பிரதியியல் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
அடுத்ததாக ஜூலியா கிறிஸ்தேவா ஊடிழைப் பிரதி என்ற தன்மை ஒரு பின் நவீன பிரதிக்கு இருக்க வேண்டும் என்கிறார். துணியை நெய்யும் போது எப்படி நூல் குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்படுகிறதோ அதே போல், ஒரு பிரதியில் ஊடிழைப் பிரதி இணையும் போது அது பின் நவீன பிரதி ஆகிறது என்கிறார். இது மையத்தைச் சிதறடிக்கிறது. உருவத்தை எதிர்-உருவமாக ஆக்குகிறது.
இஹாப் ஹஸன் ஒரு முக்கியமான பின் நவீன சிந்தனையாளர் எனலாம். இவர் நவீனத்துவப் பிரதிகளுக்கும் பின் நவீனப்பிரதிகளுக்கும் இடையே உள்ள சில வித்தியாசங்களைக் குறிப்பிடுகிறார்.
நவீனத்துவம் X பின் நவீனத்துவம்
உருவம் X எதிர் உருவம்
நோக்கம் Xவிளையாட்டு
வடிவம் Xசந்தர்ப்பவசம்
படிநிலை அமைப்பு Xஒழுங்கற்ற அமைப்பு
படைப்பு Xநிகழ்வு
மையப்படுத்துதல் Xசிதறடித்தல்
வேர் X குறுக்கு மறுக்கு
ரொலாண் பார்த் சொல்லும் பூஜ்ய பாகைக் கோண எழுத்துமுறையில் இயங்கும் ஒரு பிரதி இஹாப் ஹஸன் கூறும் தன்மைகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பிரதியே ஒரு பின் நவீன இலக்கியப் பிரதி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட பிரதிகளை இதாலிய எழுத்தாளரான அம்பர்த்தோ எக்கோ, அமெரிக்க எழுத்தாளரான டொனால்ட் பார்த்தல்மே, ஃபிரெஞ்சு எழுத்தாளரான ஜார்ஜ் பெரக், ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமி என்று உலகம் முழுதும் பலர் எழுதி இருக்கிறார்கள். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் ஸ்பானிய மொழியில் எழுதிய நோபல் பரிசு பெற்ற நாவலான, ’ஒரு நூற்றாண்டுத் தனிமை வாசம்’ என்பதும் ஒரு பின் நவீன இலக்கியப் பிரதியே. இந்த நாவலின் வெற்றியே தமிழ்ச்சூழலில் பின் நவீனம் சார்ந்த இலக்கியச் சிந்தனையை விதைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. தொண்ணூறுகளில் பின் நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகமானது. 1994-ல் தமிழவன் ‘நவீனத்தமிழும் பின் நவீனத்துவமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இதையே தமிழில் வெளிவந்த முதல் பின் நவீனத்துவக் கட்டுரை எனலாம். தொடர்ந்து நாகார்ஜுனன், நோயல் ஜோசப் இருதயராஜ், க.பூரணசந்திரன், அ.மார்க்ஸ் போன்ற பலரும் பல பின் நவீனத்துவம் சார்ந்த கட்டுரைகளை எழுதினார்கள். இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து மேற்கிலிருந்து பல பின் நவீன புனைக்தைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றின் மூலம் தமிழில் பின் நவீன புனைகதைகள் எழுதும் முயற்சிகள் ஆரம்பித்தன. சதுரம், கல்குதிரை,மையம், வித்தியாசம், சிதைவு, பவளக்கொடி போன்ற சிற்றிதழ்கள் பின் நவீனப் புனைகதைகளுக்கு இடம் தந்தன. நிறப்பிரிகை, பன்முகம் போன்ற இதழ்கள் பின் நவீனத்துவத்துக்காகவே இயங்கின.
சில்வியா என்ற பெயரில் சிறுகதைகள் எழுதி வந்த எம்.டி.முத்துக்குமாரசாமி தமிழில் பின் நவீனச் சிறுகதைகள் எழுத முயன்றார். அவரது கதைகள் ‘பிரமனைத் தேடி’ என்ற தலைப்பில் தொகுப்பாக வந்திருக்கின்றன. அவை பரிசோதனைக் கதைகள் என்ற அள்விலேயே இருந்தன. பின்னர், தமிழவன், ரமேஷ்-பிரேம், சாரு நிவேதிதா, கோணங்கி, தி. கண்ணன் போன்றோர் பின் நவீன எழுத்தாளர்களாக அறியப்பட்டார்கள். தொடர்ந்து கௌதம சித்தார்த்தன், எம்.ஜி சுரேஷ் போன்றோரும் இணைந்து கொண்டார்கள்.
பின் நவீனச் சிறுகதை என்பது என்ன?
நவீனச் சிறுகதைக்கு ஆரம்பம், நடு, முடிவு ஆகிய அம்சங்கள் உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு இது கிடையாது. நவீனச் சிறுகதைக்கு மையம் அதாவது கதைக்கரு உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு அது கிடையாது. மாஜிகல் ரியலிசம், நேரற்ற எழுத்து, வகைமை தாண்டிய எழுத்து, பகடி செய்தல், தரப்படுத்தப்பட்ட விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குதல் போன்ற பலவிதமான முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டன. பின் நவீனக் கூறுகளுடன் தமிழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்த ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து பின் நவீனக் கூறுகள் உள்ள நாவல்களையும் எழுத ஆரம்பித்தனர். ரமேஷ்-பிரேம், சாரு நிவேதிதா போன்றோர் பாலியல் புரட்சி, குடும்பக் கலைப்பு, என்பதைப் பின் நவீனத்துவம் என்று நினைத்துக் கொண்டு சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார்கள். இவர்கள் எழுதிய பாலியல் வக்கிரம் மிக்க கதைகள் அனைத்தையும் பின் நவீன எழுத்து இல்லை என்று ஒதுக்கி விடலாம். பாலியல் வக்கிரம் இல்லாத பல நல்ல பின் நவீன சிறுகதைகளை இவர்கள் எழுதி இருக்கிறார்கள் என்பது முக்கியமானது.
இவர்களுக்குப் பின் எம்.ஜி.சுரேஷ், கௌதம சித்தார்த்தன், பா. வெங்கடேசன், ஜீ.முருகன் போன்றவர்களை பின் நவீனப் புனைகதைகள் எழுதி வருபவர்களாக்க் கருதலாம்.
அசோகமித்திரனின், ‘இரு நிமிடங்கள்’, சாரு நிவேதிதாவின், ‘கிரிக்கெட்டை முன் வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக் கொண்ட்து’, மற்றும் ‘நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிண்ந்தின்னிகளூம்’,ரமேஷ்-பிரேமின், ‘கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்’ ச. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வாளின் தனிமை’ எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் எழுதிய பல கதைகள், இரா. நடராசன் எழுதிய ‘மதி எனும் மனிதனின் மரணம் குறித்து’ ,எம்.ஜி.சுரேஷின் ’அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்’, பா. வெங்கடேசன் எழுதிய சில கதைகள் போன்ற கதைகளை குறிப்பிடத்தக்கத் தமிழ்ப் பின் நவீன சிறுகதைகள் என்று சொல்லலாம்.
சிறுகதைகளைத் தொடர்ந்து நாவல்கள் தோன்றின. அந்த நாவல்கள் மூலம் தமிழ்ப் பின் நவீனப் புனைகதை அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தது. சில்வியா போன்றோரால் முன்கை எடுக்கப்பட்டு, சாரு, ரமேஷ்-பிரேம், தி.கண்ணன் போன்றவர்களால் வளர்த்து எடுக்கப்பட்ட தமிழ்ப் பின் நவீனப் புனைகதை ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ் ஆகியோரால் புதிய பரிணாமத்தை எய்தியது.’விஷ்ணுபுரம்’, ‘உபபாண்டவம்’. ‘நெடுங்குருதி’ போன்றவை பின் நவீன கூறுகள் உள்ள பிரதிகள். இவை இந்துத்வாவைக் கேள்விக்குள்ளாக்கவில்லை; அப்படி இருக்கையில் இவை எப்படி பின் நவீனக் கூறுள்ள பிரதிகள் ஆகும் என்று ஒரு கேள்வி எழலாம். இவை எதிர்-வடிவம், தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்தல், புனைவு நகரத்தை உருவாக்குதல் போன்ற பின் நவீனத் தன்மைகளுடன் இருக்கின்றன. எனவே இவற்றைப் பின் நவீனக் கூறுகள் உள்ள நாவல்களாக ஏற்பதில் தவறில்லை. எம்.ஜி.சுரேஷின், ஐந்து நாவல்களும் குறிப்பிடத்தக்க பின் நவீன பிரதிகளாக திறனாய்வாளர்களால் அடையாளப்படுத்தப் படுகின்றன. ரமேஷ்-பிரேமின், ‘சொல் என்றொரு சொல்’ ஒரு முக்கியமான பின் நவீன நாவலாகும்.
தலித்தியம், பெண்ணியம், மூன்றாவது பாலினம் ஆகியவை பின் நவீனத்துவம் தமிழுக்குத் தந்திருக்கும் கொடை ஆகும். இந்த விளிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதப்படும் கதைகள் பின் நவீன புனை கதைகளே. இன்றைக்கு சிற்றிதழ்களின் வெளியாகும் சிறுகதைகளில் பெரும்பாலானவை நவீன யதார்த்தத்தில் இருந்து விலகி பின் நவீன கூறுகளுடன் இயங்கி வருவது கவனிக்கத்தக்கது. புதிய தமிழ் நாவல்களும் யதார்த்த வடிவத்திலிருந்து விடுபட்டு பின் நவீனக் கூறுகளுடன் எழுதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பின் நவீனத்துவம் செலுத்திக் கொண்டிருக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது.<><><><>
(11.12.2012 அன்று கேரள மாநிலம், சித்தூர் அரசுக் கல்லூரி ஒழுங்கு செய்திருந்த தமிழியல் – பன்னோக்குப் பார்வை என்ற ஒரு நாள் தேசியக் கருத்தரங்கில் வாசிக்க்ப்பட்ட கட்டுரை)
*****
Subscribe to:
Post Comments (Atom)
அற்புதமான கட்டுரை. பின்நவீனத்துவம் ஒரு கோட்பாடல்ல என்ற கருத்தை முன்வைக்கிறீர்கள். ஆனால் பலர் அதனை கோட்பாடு என்றே சொல்லியிருக்கிறார்கள்.மையத்தை தகர்ப்பதெல்லாம் கோட்பாடாகத்தானே உருவாகி இருக்கின்றன. பின்நவீனமும் கோட்பாடைத்தானே தகர்க்கிறது.
ReplyDeleteதிருத்தம்: பின்நவீனமும் மையத்தைத்தானே தகர்க்கிறது.
ReplyDelete