Thursday, September 25, 2014

க ண க் கீ ட் டா ள ர் க ள்.
- எம்.ஜி.சுரேஷ்

இந்த விவரணையை எப்படித் துவங்குவது என்பதில் எனக்கு எப்போதுமே தயக்கம் இருந்தது இல்லை. இதை எங்கிருந்தும் துவங்க முடியும்ஒரு துப்பறியும் கதைக்கோ அல்லது மர்ம நாவலுக்கோ திட்டமிடப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட ஆரம்பங்கள் தேவையதார்த்த வாழ்க்கையை விவரிப்பதற்கு எங்கிருந்து துவங்கினால் என்ன? இப்போதைக்கு இப்படித் துவங்குவது சரி என்றே படுகிறது.

 அது ஒரு தேனீர் விடுதிபத்தடிக்கு பத்தடிதான் அந்தத் தேனீர் விடுதியின் ஒடுக்கமான உள் வெளியாக இருந்ததுஅந்த வெளியை அடைத்துக் கொண்டிருக்கும் குறுகிய மேசை. (கடைக்காரன் வெங்காயம் வெட்டுவதற்கும், பூரி மாவு பிசைவதற்கும், உட்கார்ந்து உண்பதற்கும், பிற தருணங்களில் டீ குடிக்க வருபவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கும்) மேசையின் மேல் இரண்டு கண்ணாடித் தம்ளர்களில் நுரையுடன் டீ உறிஞ்சப்படுவதற்காகக் காத்திருந்ததுஒரு சீட்டாட்டக் கிளப் போன்ற தோரணையில் அந்த மேசையைச் சுற்றிலும் நான்கைந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப் பட்டிருந்தனஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்திருந்தேன்பக்கத்து நாற்காலியில் மணியண்ணன்மற்ற நாற்காலிகள் காலியாய் காத்திருந்தன.

இந்தத் தேனீர் விடுதியில்தான் நான் மணியண்ணனை வழக்கமாகச் சந்திப்பது என்று ஒரு தீர்மானம்ஏனெனில், இவரை நான் சந்திப்பது என் வீட்டில் தடை செய்யப் பட்டிருக்கிறதுஎனவே, நானும் அவரும் கள்ளக்காதலர்களைப் போல்  வெளியில் எங்காவதுதான் சந்தித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 மணியண்ணன் என்று என்னால் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தரம் அன்புடன் விளிக்கப்படும் திருவாளர் எம். எஸ். மணி ஒரு எம்.எஸ்ஸி பட்டதாரி. அதுவும் கணிதத்தில் என்பது நம்ப முடியாததுசதா சர்வகாலமும் நாலு நாட்களாகச் சிரைக்காத முகமும், பழுப்பேறிப்போன வேட்டி சட்டையும், எந்த நேரமும் அறுந்து கொள்ளத் துடிக்கும்  செருப்புமாக அலையும் ஒரு நபர் எப்படி முதுகலைப் பட்டதாரியாக இருக்க முடியும்ஐம்பது வயதாகும் மணியண்ணன்  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வசீகரமான இளைஞராக இருந்திருக்கிறார்ஏதோ ஒரு ட்யூடோரியல் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக பணி புரிந்திருக்கிறார்பகுதி நேர வேலைக்கான நேரம் போக மீதி நேரங்களில் முழு நேர வேலையாக கணிதம் கற்க வரும் கன்னியரில் பாதிப் பேருக்குக் குறையாமல்  காதலித்திருக்கிறார்அவர்களில் ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக் குழந்தைகளும் பெற்றிருக்கிறார் என்பது நம்ப முடியாத ஆச்சரியங்களில் ஒன்றுஇப்போது  திருமதி மணி தனது இரண்டு குழந்தைகளுடன் (இப்போது அவர்கள் பெரியவர்களாகி விட்டார்கள்) தன்னந்தனியே வசிக்கிறாள். ஒரு பெண்ணைப் புணர்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற சுவடே இன்றி மணியண்ணன் பிரம்மச்சாரிகள் குடியிருக்கும் மேன்ஸன் ஒன்றில் நான்கு இளைஞர்களுடன் ஒற்றை அறையைப் பகிர்ந்து கொண்டு வசிக்கிறார்

மணியண்ணன் எனக்கு ஐந்தாண்டுகளாகத்தான் பழக்கம்நான் கல்லூரியில்  படித்துக்கொண்டிருந்தபோது கணிதம் கற்கும் நிமித்தமாக இவரைச் சந்திக்க நேர்ந்ததுபழகப் பழக இவரிடம் கணக்கைத் தவிர மற்ற எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டேன் என்பதுதான் உண்மைமணியண்ணனுக்குத் தெரிந்திராத விஷயம் என்று எதுவும் இருக்க முடியாது என்பது என்னுடைய குருட்டு நம்பிக்கைநானா படேகர் முதல் நேனோ டெக்னாலஜி வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரால் மணிக்கணக்காகக் கதைக்க முடியும்.

இன்னிக்கு ரொம்ப டல்லாத் தெரியறயெஎன்ன ப்ராப்ளம்?'  என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ம்ணியண்ணன்என் பதிலுக்குக் காத்திராமல் மேசையில் இருந்த தன் கண்ணாடித் தம்ளரை எடுத்துத் தேனீரை ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்.

ஒண்ணுமில்லே  ...'

அப்பா திட்டினாராக்கும்'

  நான் பதிலொன்றும் சொல்லாமல் இருந்தேன்.

நீ ஒண்ணும் சரியில்லேன்னு சொல்லி இருப்பாரே?'

இதற்கும் நான் பதிலொன்றும் சொல்லவில்லை. நான் பதிலேதும் சொல்ல வேண்டியதே இல்லைமணியண்ணனுக்கே எல்லாம் தெரியும்.

என்னிக்குத்தான் எது சரியா இருந்தது.?'  இந்த வாக்கியத்தை விரக்தி கொண்டு மெழுகாமல் சாதாரண தொனியில் சாக்ரடீஸ் போல் முணுமுணுத்தார் மணியண்ணன். பின்பு தன் சட்டைப் பைக்குள் எதையோ தேடிப் பார்த்தார்குறிப்பறிந்து நான் என் சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அவரிடம் நீட்டினேன்வளைந்து நெளிந்திருந்த அந்த சிகரெட்டை சர்வ ஜாக்கிரதையாக வாங்கி அதன் வளைசல் நெளிசல்களையெல்லாம் நீவி நீக்கி சரி செய்து தன் உதட்டில் பொருத்திக் கொண்டார். கடைக்காரன் ஒரு கடமை நிறைவேற்றம் போல் ஒரு தீப்பெட்டியை எடுத்து அவரிடம் நீட்ட அவரும் ஏதோ ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவது போல் மிகுந்த சிரத்தையுடன் அதை அவனிடமிருந்து வாங்கி சிகரெட்டைப் பற்ற வைத்தார்ஒரு ஆழ்ந்த இழுப்பு இழுத்து புகையை சீரான இடைவெளிகளில் வெளியிட்டார்பின்பு என்னிடம் சொன்னார்.

 ‘கவலைப் படாதே சிவா . . . இதெல்லாம் சகஜம்'

 ‘ஆனா மனசு வலிக்குதே. . . சகஜமா எடுத்துக்குட்டாலும் வலி வலிக்கத்தானெ செய்யுது'

கோலி மார் தோ

பிரச்சனைகள் நெருக்கும் போதெல்லாம் மணியண்ணன் அலட்சியமாக சொல்லும் வார்த்தைகோலி மார் தோ'  ‘விட்டுத் தள்ளு' என்ற பொருளில் புழங்கும் இந்தி வார்த்தை அதுயாரிடமோ அந்த வார்த்தையைக் கற்றுக் கொண்டு அடிக்கடி பிரயோகித்துக் கொண்டிருக்கிறார்.

 ‘எல்லாம் சொல்றது சுலபம்'

 என்னுடைய டீயை நான் குடிக்க ஆரம்பித்திருந்தேன்.

என்னுடைய அப்பா நீர்ப் பகுப்பாய்வுக் கூடம் ஒன்றில் பகுப்பாய்வாளராக இருக்கிறார்குடி நீர்  மாதிரிகளை ஆய்வு செய்து  அவை குடிக்க லாயக்கானவைதானா இல்லையா என்று கண்டு பிடித்துச் சொல்வது அவர் வேலைஅவரது சான்றிதழ் பெற்ற குடி நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள்.அதில் அசாத்தியப் பெருமை அவருக்கு.  ‘ நான் செர்டிஃபை செஞ்ச தண்ணியத் தான் அப்துல் கலாம் குடிக்கிறாரு தெரியுமா?'  கல்யாணமான புதிதில் அம்மாவும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாளாம். ஒரு மா நகராட்சிப் பள்ளியில் ஆசிரியை வேலைநான் பிறந்ததும் என்னைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு வேலையை விட்டு விட்டாள். பின்பு என் தம்பியும் பிறந்தான்எங்களைப் பார்த்துக் கொள்வது அவளது பிரதான காரியமாயிற்று.எங்கள் இருவரையும் பொறியியலாளர்களாக ஆக்குவது அவளது லட்சியமாக இருந்தது. அதுவே எங்கள் குடும்பத்தின் கூட்டுக் கனவும் கூடபன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் என்னால் நூற்றுக்குத் தொண்ணூறு மதிப்பெண்கள் மட்டுமே வாங்க முடிந்ததுஇதனால் ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் விரும்பிய கோர்ஸ் கிடைக்காமல் போனதுசுய நிதிக் கல்லூரிகளில்  இடம் கிடைத்தது என்னமோ உண்மைதான்அவற்றில் எல்லாம் சேர்ந்து படிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லைஇதன் விளைவாக நான் ஒரு கலைக்கல்லூரியில்ல் பி.எஸ்ஸி., சேர்ந்தேன்.

 நான் பொறியியல் படிக்க முடியாமல் போனதில் பெரிதும் உடைந்து போனவள் அம்மாதான்சதா எதையோ பறி கொடுத்த மாதிரி இருந்தாள். ஒரு நாள் நடு ஜாமத்தில் தலைக்குக் குளித்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு எல்லோரையும் திடுக்கிட வைத்தாள்ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டதற்கு அமெரிக்காவிலிருந்து வரும் தன் மகனை வரவேற்பதற்காக என்று பதில் சொன்னாள்பின்பு ஒரு சமயம்  அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கத் தூதரக வாசலில் நிற்கும் நீண்ட க்யூ வில் போய் நின்று கொண்டிருந்தாள்கேட்டால், சிவா எம்.எஸ். படிக்க அமெரிக்கா போக வேண்டாமாவிசா வாங்குவதற்காகப் போனேன், என்றாள். மன நல மருத்துவர் அவளுக்கு பாரனோயியா என்றார்காலையிலும் மாலையிலும் விழுங்குவதற்கு நிறைய மாத்திரைகள் தந்தார்அதன் பிறகு மோசமான நிலைமை மாறி சுமாரான மனக்கோளாறுடன் வாழ்கிறாள் அம்மா

 அம்மாவுக்கு உடல் நலம் சீர் கெட்டதற்கு நான் தான் காரணம் என்று அப்பா நினைத்தார்அதனால் என்னை வெறுக்க ஆரம்பித்தார்காரணமின்றி என்னைக் கடிந்து கொள்வது; எப்போது பார்த்தாலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது; எதற்கெடுத்தாலும் என்னைத் திட்டுவது  என்பதைத் தன் வழக்கமாக்கிக் கொண்டார்வீடு நரகமானது எனக்கு.

ஒரு புறம் மனக்கோளாறான அம்மா இன்னொரு புறம் எதிரியாக மாறி விட்ட அப்பா.   வாழ்க்கை நரகமாயிற்று எனக்கு  அப்போதெல்லாம் மணியண்ணன்தான் ஆறுதல் சொல்வார்பி.எஸ்ஸி முடித்ததும் டாட் நெட் என்ற கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்தேன்பிறகு கால் செண்டர்கள், பி.பி. அலுவலகங்கள் சிலவற்றில் பணி புரிந்தேன்இப்போது சும்மா இருக்கிறேன்என்ன காரணத்தினாலோ ஒரு நிரந்தரமான வேலை எனக்குக் கிடைக்க மறுக்கிறது.
எனக்கு வேலை கிடைக்காததற்குக் காரணம் நான் மணியண்ணனுடன் பழகுவதுதான் என்பது அப்பாவின் கண்டு பிடிப்பு.  ‘அவனுடன் சேர்ந்து அவனைப் போலவே மாறிக்கொண்டிருக்கிறாய்அப்பாவுக்குப் பயந்தே நான் மணியண்ணனை இது போல பொது இடங்களில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சில கணங்கள் நாங்கள் மவுனமாக இருந்தோம். தேனீர் விடுதியின் முன்னே நீண்டு நெளிந்து கிடந்த தார்ச் சாலையை நான் வெறித்தபடி இருந்தேன்சாலையில் அனைவரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள்இரண்டு இளம் பெண்கள் தோளில் கைப் பைகளை மாட்டிக் கொண்டு சளசளத்தபடி வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு சமையல் எரி வாயு க் காரன் தனது மூன்று சக்கர வாகனத்தில் தட தடத்தபடி போய்க் கொண்டிருந்தான்ஒரு ஆட்டோக் காரன் கண் மண் தெரியாத வேகத்தில் விரைந்து கொண்டிருந்தான்எனனையும் மணியண்ணனையும் தவிர எல்லோருமே வேலைக்குப் போகிறார்கள்நினைக்கும் போது மனத்தில் குற்ற உணர்வு சூழ்ந்தது.

  மணியண்ணனுக்கு முகம் பார்த்து மனம் படிக்கத்தெரியும்.

 ‘கவலைப் படாதே சிவாநீ கொஞ்ச நாள் வேலை இல்லாம இருக்கிறதுக்கே இப்படிக் கவலைப் படறியே; நான் வருஷக் கணக்கா வேலை இல்லாம இருக்கேனே நான் எவ்வளவு கவலைப் படணும்யோசிச்சுப் பாரு...சாக்ரட்டீஸ் வேலைக்கே போனதில்லே; ஸ்பினோஸா எந்த வேலைக்குப் போனானாம்கார்ல் மார்க்ஸ் . . .  அத வுடு நம்ப பாரதியார் வேலைக்குப் போன நாளை விட வெட்டியாக் கெடந்த நாளுதானெ ஜாஸ்தி. . .  வேலை செய்ய வேண்டாம்னா நெனைக்கறோம்வேலை கெடக்க மாட்டேங்குது.கெடச்சாலும் நெலக்க மாட்டேங்குதுஎன்ன பண்றது.  . .'

 அப்படியும் என் முகம் தெளிவு பெறாமல் இருந்ததை மணியண்ணன் கவனித்தார்ஒரு கணம் யோசித்த பின்னர் என்னிடம் சொன்னார்.

சரி, ஒண்ணு பண்ணுவோம்'

  நான் உடனே ஆர்வத்துடன் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கவனித்தேன்மணியண்ணன் ஒரு மந்திரவாதிவாழ்க்கையில் நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் தருணங்களை அபூர்வ தருணங்களாக மாற்றிக் காட்ட அவரால் முடியும்.

இன்னிக்கு ஒரு காரியம் பண்ணப் போறோம்அதாவது இந்த ஊர்லெ நம்பள மாதிரி வேலெ வெட்டி இல்லாம இருக்கறவங்க எத்தன பேர்ன்னு கணக்கு எடுக்கப் போறோம்; சரிதானா?'-             

உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன் நான்என்னை உற்சாகப் படுத்தியதில் மணியண்ணனும் மகிழ்ச்சியடைந்திருந்தார்அது அவரது கண்களில் தெரிந்தது.

  ‘மொதல்லெ இந்த ரோட்ல இருந்தே ஆரம்பிப்போம்' என்றார் மணியண்ணன்

 மொதல்ல இந்தக் கடையிலிருந்தே ஆரம்பிக்கலாமேஅதாவது நம்ப கிட்டே இருந்து' என்றேன் நான்.

 ‘அது தப்பு' என்றார் அவர்.  ‘எந்த நொடியில் கணக்கீட்டாளர்களாக நம்மை நாம் நியமித்துக் கொண்டு விட்டோமோ  அந்த நொடியில் இருந்தே நாம் வேலை இல்லாதவர்கள் இல்லைநமக்கு இந்த அறிக்கையில் விலக்கு உண்டு'

  ‘அதுவும் சரிதான்'என்றேன் நான்.

 அந்தத் தேனீர் விடுதியிலிருந்து எங்களது புதிய பொறுப்புடன் புறப்பட்டோம்.

இரண்டு

தேனீர் விடுதியிலிருந்து கிழக்கு நோக்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்தால் என்னுடைய வீடு வந்துவிடும்மேற்கு நோக்கிப் போனால் மணியண்ணன் வீடு வரும்எனவே இருவருக்கும் பொதுவாக இருக்கட்டும் என்று தெற்கு நோக்கி நடந்தோம்

வானம் வெளிர் நீலத்தில் இருந்ததுமேகத்துணுக்குகள் ஆங்காங்கே தான் தோன்றியாக இறைந்திருந்தனகாலை வெயில் மிதமான உஷ்ணத்தில் இருந்ததுஇத்தகைய சூழல் நடப்பதற்கு இதமாக இருந்தது.

தேனீர் விடுதியைக் கடந்ததும் உடனடியாக ஒரு பேருந்து நிறுத்தம் எங்களை எதிர் கொண்டதுசிமெண்டால் வேயப்பட்ட கூரையும், பாவப்பட்ட தரையும், கட்டமைக்கப் பட்ட பெஞ்சுமாக வடிவம் கொண்டிருந்ததுஇரண்டு இளம் பெண்கள் பேருந்துக்காகக் காத்திருந்தார்கள்ஒரு பூக்காரி தரையில் மல்லிகைப் பூக்களைக் கொட்டி வைத்து நாரில் தொடுத்துக் கொண்டிருந்தாள்.சிமெண்ட் பெஞ்சில் ஒரு இளைஞன் ஒரு தேவ தூதனைப் போல் கைகளை அகல விரித்துப் படுத்திருந்தான்மணியண்ணன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்நானும் பதில் புன்னகை செய்தேன்அந்த இளைஞனை உடனடியாக எழுப்பினோம்போலீஸ்தான் வந்து எழுப்புகிறதோ என்று பதறிப் போய் விழுந்தடித்துக் கொண்டு எழுந்த அவன் நாங்கள் போலீஸ் இல்லை என்பதறிந்து நிம்மதியடைந்தான்பின்புநீங்கள் யார்? ‘என்ன வேலை செய்கிறீர்கள்?' என்பது போன்ற கேள்விகள் கேட்ட எங்களை இலவச டி.வி., இலவச கியாஸ் அடுப்பு போல் வேலையைத் துரத்தித் தர வந்திருக்கும் அரசு அதிகாரிகள் என்று கருதி முதுகு வளைத்து பவ்யமாகப் பேசினான்அவன் பெயர் மருத முத்துவயது இருபத்தி ஆறுஊரில் விவசாயக் கூலியாக இருந்திருக்கிறான்வீட்டில் கோபித்துக் கொண்டு இந்த நகரத்துக்கு வந்திருக்கிறான்இங்கே யாரையும் அவனுக்குத்தெரியாதாம். தன்னைப் பற்றிய தகவல்களை கலவரத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் சொன்னான்அவனைப் பற்றிய விவரங்களை ஒரு சின்ன குறிப்பேட்டில் (விலாசங்கள் எழுதுவதற்காக வைத்திருந்தது) குறித்துக் கொண்டேன். பின்பு அவனிடம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்ட போது,

எனக்கு ஏதாச்சும் வேலை கெடக்குங்களா?'

யாருக்குத் தெரியும்?'

அவன் கோபத்துடன் எங்களைப் பார்த்து முறைத்ததை நாங்கள் பொருட்படுத்தவில்லை.

ஒரு வழியாக பேருந்து நிறுத்தத்தை விட்டு நகர்ந்தோம்முதல் நேர்காணலே வெற்றிகரமாக அமைந்ததில் ஏகப்பட்ட மகிழ்ச்சி எனக்கு.

அடுத்ததாக ஒரு நடைபாதைக் கோவில்கோயில் உண்டியலைத் திறந்து பூசாரி சில்லறைகளைக் கொட்டி எண்ணிக் கொண்டிருந்தான்.

இவனுக்குக் கைல   தொழில் இருக்குது; இவன் வேண்டாம்என்றார் மணியண்ணன்.

 கோயிலை ஒட்டி சில பிச்சைக் காரர்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள்.

 ‘பிச்சைக்காரர்களை  வேலை இல்லாதவர்கள் பட்டியலில் சேர்க்க முடியுமா?' என்கிற எனது கேள்விக்கு விளக்கமாக மணியண்ணன், ‘பிச்சை எடுப்பது ஒரு தொழில் என்று கொள்ள முடியாது' என்றும்தொழில் ஏதும் இல்லாதவர்கள் மேற்கொள்ளும் ஒரு தற்காப்பு சாதனம் மட்டுமே' என்றும் சொன்னார்.உடனடியாக அந்தப் பிச்சைக்காரர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்தோம்.

 அந்தப் பிச்சைக் காரர்கள் எல்லோருமே இந்த ஊருக்குப் புதியவர்களாக இருந்தார்கள்எந்தெந்த ஊர்களிலிருந்தெல்லாமோ உதிரிகளாகப் புறப்பட்டு இங்கு வந்திருந்தார்கள்.  ‘ஏன்?' என்று கேட்டதற்குபிச்சை எடுக்காதவனுக்கு ஓரு ஊர்; பிச்சை எடுப்பவனுக்குப் பல ஊர்' என்றார்கள்.அனேகமாக உலகின் முதல் புலம் பெயர்ந்த மனிதன் பிச்சைக்காரனாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியதுமணியண்ணனிடம் அபிப்ராயம் கேட்டதற்கு, ‘இது சாத்தியம்தான்' என்று ஒப்புக் கொண்டார்.

பிச்சைக்காரர்களிடம் வேலையை முடித்துக் கொண்டு மேலும் நடந்து போனோம்போகும் வழியெங்கும் நிறையப் பேர் எதிர்ப் பட்டார்கள்ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி எல்லா முகங்களிலும் பிரச்சனை இருந்ததுசில முகங்கள் ம்வுனமாக அழுதனசில முகங்கள் எதற்கோ ஏங்கின. குழந்தைகள் மட்டுமே மகிழ்ச்சியுடன் குதித்தபடி வந்தன.சாலையில் எங்களைக் கடந்து போன பேருந்து ஜன்னல்கள் சோபிதமிழந்த முகங்களால் அடைக்கப்பட்டிருந்தன

இவங்க எல்லாரும் வேலைக்குப் போறவங்கஅதனாலதான் இந்த முகங்கள்ளே சந்தோஷமே இல்லஎப்ப என்ன காரணத்துனால வேலை போகப் போகுதோன்னு சதா பயந்துக் கிட்டே இருக்காங்கபாரு எந்த மூஞ்சியிலயாவது களை இருக்காபாவம்

மணியண்ணன் சொல்வது சரியென்றே பட்டதுஇந்த உலகத்தில் குதூகலத்துடன் இருப்பது குழந்தைகள் மட்டுமேஏனெனில், குழந்தைகள் செய்வதற்கு வேலைகள் ஏதும் இல்லை.

அப்போது ஒரு பேருந்து எங்களை உரசியபடி கடந்து சென்றது. அது ஒரு வளைவான திருப்பம்பேருந்து அந்த வளைவைக் கடந்த போது சற்று தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு  வளைந்து திரும்பியதுஅப்போது எதிர்பாராதவிதமாக பேருந்திலிருந்து ஒரு இளைஞன் சட் டென்று கீழே குதித்து எங்கள் மீது மோதிக்கொண்டான்மோதிய வேகத்தில் விழத்தெரிந்தான்நாங்களும் நிலை தடுமாறினோம்அவனிடமிருந்து இரண்டு பர்ஸ்கள் எகிறித் தரையில் விழுந்தனஉடனே பர்ஸ்களை எடுத்துக் கொண்டு ஒட யத்தனித்தவனை , ‘ஒரு நிமிஷம் இருப்பா' என்று கூறித் தடுத்தேன்அவன் திகைப்புடன் பயந்தவனாக நின்றான்.

இவன் ஒரு பிக்-பாக்கெட்இவனையும் நம் கணக்கில் சேர்த்துக்கலாமா?'

 ‘நிச்சயம் முடியாது'

ஏன்?'

இதுவும் ஒரு தொழில்தான்.'

என்ன சொல்றீங்க?'

செல் போன் கம்பனிகள், செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனங்கள், சாட்லைட் தொலைக் காட்சி அமைப்புகள் செய்றதைத் தானே இவனும் செய்றான்அவங்க பெரிய அளவுலே செய்றதெ இவன் சின்ன அளவுலெ செய்றான். அவ்வளவுதானெ வித்தியாசம்? அதனாலெ இவன நம்ப கணக்குல சேக்க வேண்டியதில்ல'

 உடனே அவனிடம் நான்,  ‘நீ போகலாம்' என்று சொன்னேன்எதற்காக தன்னை நிற்கச்சொன்னார்கள், இப்போது எதற்காகத் தன்னைப் போகச்சொல்கிறார்கள் என்று புரியாமல் குழம்பிவிட்டு உடனே இடத்தை காலி செய்தான்.

டே சிவா பசிக்குதுடாஎன்றார் மணியண்ணன்என்னிடம் இருபது ரூபாய் இருந்ததுமணியண்ணன் தன் சட்டைப் பாக்கெட்டில் சில்லரைக் காசுகளைத் துழாவித் தேடினார்.  ‘'என் கிட்டெ பணம் இருக்குண்ணெ' என்றேன்.

மூன்று

பச்சை நிற பின்புலத்தில் பொன்னிற மலர்களால் எம்ப்ராய்டெரி செய்யப்பட்டிருந்த சூரிதார் அணிந்திருந்தாள்  அந்த இளம் பெண்மிக அழகான முகம் அவளுடயது  அந்த அழகுக்குத் துளியும் சம்பந்தமின்றி அமானுஷ்யமான கண்களோடிருந்தாள்பார்ப்போரை பயமுறுத்தும் கண்கள். அந்த இளம் பெண் தன் எதிரில் போவோர் வருவோர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டாள். சற்றும் எதிர்ப் பாராத இந்த நமஸ்காரத்தினால் திடுக்கிட்டு ஒதுங்கினார்கள் மற்றவர்கள். அந்தப் பெண்ணின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி முன்றானையால் வாய் பொத்தி அழுதபடி இருந்தாள். அனேகமாக அவள் அந்தப் பெண்ணின் தாயாக இருக்கலாம்இளம் பெண்ணால் நமஸ்கரிக்கப்பட்ட ஒரு மனிதர் பெண்மணியிடம்என்ன ஆச்சு' என்றார். பதிலுக்குப் பெண்மணி, ‘என்னன்னு தெரியலெ . . .  ஒரு வாரமா இப்பிடித்தான் செய்றா' என்று  சொல்லிவிட்டுக் குலுங்கினாள்.

ஒரு இளைஞன் மரத்தடியில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். யார் என்ன சீண்டியும் அவனது கவனம் கலைவதாக இல்லை. அவன் கண்கள் சூன்யத்தில் நிலை குத்தி நின்றனதன்னை ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருக்கும்  யாரோ  ஒரு முகம் தெரியாத சைத்ரிகனுக்குபோஸ்' கொடுத்துக் கொண்டிருப்பதைப் போல் அவன் தோன்றினான்

 ஒரு நடுத்தர வயது மனிதர் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக் காட்சிப் பெட்டியின் முன் நின்று கொண்டு கைகளால் ரீல் சுற்றுவதைப் போல் நடித்துக் கொண்டிருந்தார்சராசரி மனிதர்கள் ஓரிரு நொடிகள் மட்டுமே செய்யக் கூடிய இந்த செயலை இவர் மணிக் கணக்கில் செய்து கொண்டிருக்கிறார். ஏதாவது ஒரு விஷயத்தில் மீள முடியாமல் சிக்கிக்கொண்டு - கீறல் விழுந்த கிராம போன் இசைத் தட்டு போல - தொடர்ந்து அதிலேயே விழுந்து கிடப்பவர்கள் இவர்கள் என்று எனக்குத் தோன்றியது.

 சுற்றிலும் மரம், செடி கொடிகள்வித விதமான பறவைகளின் குதூகலக் கூச்சல். பல வண்ணங்களில் நன்கு கத்தரிக்கப் பட்ட க்ரோட்டன்ஸ் செடிகள். சதுரக் கற்கள் பாவப் பட்ட தரையும் அதை ஒட்டி அழகான புல் தரையும்ஆங்காங்கே அழகாக வடிவமைக்கப் பட்ட வண்ணம் பூசப்பட்ட இரும்பு நாற்காலிகள்அந்த மன நலக் காப்பகம் நல்ல ரசனையுடன் உருவாக்கப் பட்டிருந்தது. காம்பவுண்ட் சுவருக்கு வெளியே இருந்து நானும் மணியண்ணனும்  உள்ளே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்

 இந்த இடத்தைப் பார்க்கும் தருணங்கள் மிக மோசமானவைஇங்குதான் என் அம்மாவை சிகிச்சைக்குக் கூட்டி வந்தோம்.

அம்மாவை இங்கு கூட்டிவருவது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. முதலில் அவளை ஆடிட்டரிடம் அழைத்துப் போவதாகப் பொய் சொல்லிக் கூப்பிட்ட்டோம்.  ‘எதுக்கு?' என்ற அவளிடம், ‘சிவாவை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டாமாஅதுக்கான டாக்யுமெண்ட் ரெடி பண்ணணும். அதுக்குத்தான்' என்றார் அப்பா.  ‘அப்ப சரிஎன்றாள்வழியெல்லாம் மௌனமாக வந்த அவள் இந்தக் கட்டிடத்தைப் பார்த்ததும் திகிலடைந்து போனாள். ஆட்டோவை விட்டு இறங்க மறுத்தாள்.   ‘என்னைப் பைத்தியக்காரச்சி ஆக்கிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?' என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தாள்

அவளை உள்ளே டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போய்க் காட்டுவதற்குள்  படாத பாடு பட வேண்டியதாகி விட்டது.

என்னை சீக்கிரமா வெளியே அனுப்பிடுங்க டாக்டர்ஏர் போர்ட்டுக்குப் போயி என் பையனை அமெரிக்காவுக்கு செண்ட் ஆஃப் பண்ணணும்'

உடனே அனுப்பிடறேன்உங்களை இங்கெ வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்வீட்டுக்குப் போனதும் நான் குடுக்கற மாத்திரையெ எல்லாம் ஒழுங்கா சாப்பிடணும், சரியா?'

 ‘சரிங்க டாக்டர். . . அப்ப நான் போகட்டுமா?'

  நினைவு படுத்திப் பார்க்கையில் என் கண்கள் கசிந்தன.

என்னடா ஆச்சு உனக்கு. . .   அம்மா ஞாபகமா? கோலி மார் தோ

அந்தக் கட்டிடம் முழுக்க சீருடை அணிந்தும் அணியாமலும் ஏகப்பட்ட மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்கோவில், நகைக்கடை, சினிமா தியேட்டர் மாதிரி இப்போதெல்லாம் மன நலக் காப்பகங்களிலும் கூட்டம் அதிகமாகி வருவதாக எனக்குத் தோன்றியதுமணியண்ணனுக்கும் அவ்வாறே தோன்றி இருக்கக்கூடும்.

வர வர இங்கேயும் கூட்டம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிக்கிட்டே போகுதுடா' என்றார்.  ‘ஆமா இவங்கள எல்லாம் அப்-நார்மல்னு சொல்லி இங்கெ அடைச்சி வக்கறாங்களே, இவங்க மட்டும் நார்மல்தான்னு எப்படி நம்புறது?'

 ‘அப்பிடித்தானெ சைக்காலஜி சொல்லுது/'

 டே சிவா, இது எதுவுமே சரியில்லடா. வாழ்க்கையோட நெருக்கடி தாங்காம புத்தி பிதுங்கிப் போனவங்களெ இங்கெ கூட்டிக்கிட்டு வர்றாங்க. பேதலிச்ச மனசை சரி பண்ணனும்னா நெருக்கடியிலேர்ந்து அவனை மீட்டாத்தானே முடியும்நெருக்கடியெ அப்படியே வச்சுக்கிட்டு மாத்திரையை மட்டும் முழுங்க வக்கறதுலே என்னடா பிரயோஜனம் இருக்கு?'

இத விட்டாலும் வேற வழியில்லையே, ‘    -   

அதுக்காக, லேசா மன நிலை பாதிக்கப்பட்ட ஒருத்தனை மாத்திரை மருந்தெல்லாம் குடுத்து குடுத்தே மோசமான நோயாளி ஆக்கிடலாம்னு சொல்றியாஇவங்க தர்ற மாத்திரை மருந்தெல்லாம் என்ன வேலை செய்யுது தெரியுமா?'

 ‘தூக்கம் வர வைக்கும்மனசை சாந்தப் படுத்தும். அது நல்லது தானே?'

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ந்த மருந்தெல்லாம் மனித மூளையின் சிந்தனை ஓட்டத்தை தடை செய்யும். ‘ நான் சிந்திக்கிறேன்; எனவே நான் இருக்கிறேன்னு டெகார்டெ சொன்னான்இவங்கஎன்னால் சிந்திக்க முடியாது; ஆனாலும் இருக்கிறேன்' அப்பிடின்னு சொல்ற மாதிரியான ஆட்களை உருவாக்குறாங்கஇவங்க மனுஷனை வெறும் உடலா மாத்துறாங்கஅந்த உடம்பு மெலே வன்முறைய ஏவுறாங்க.'

அப்ப இதெல்லாம் தேவை இல்லேன்னு சொல்றிங்களா?'

தேவை இல்லாததையும் கட்டிச் சுமக்க வேண்டாமேன்னு சொல்றேன்.எல்லாத்தையும்  மாத்தணும்டா'

 அப்போது ஒர் இளைஞனை சங்கிலியால் பிணைத்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்அவன் எதிர்ப் படுவோர் அனைவரையும் பார்த்துத் தன் பற்களை நற நற வென்று கடித்தான்விட்டால் எல்லோரையும் கடித்துக் குதறி விடுவான் போல் தோன்றினான்

பாவம், இவன் இங்கே மொத மொதல்ல வந்தப்ப சுமாரான நோயாளியா இருந்திருப்பான்மாத்திரை மருந்தெல்லாம் குடுத்து இவனோட சிந்தனை ஓட்டத்தைத் தடுக்கப் பாத்தாங்கதன்னோட சிந்தனை தடுக்கப் படறதை எதிர்த்து இவன் போராடுறான்இவங்க மேலெ மேலெ மருந்து குடுத்து, ஷாக் ட்ரீட்மெண்ட் குடுத்து இவனெ இந்த நெலமைக்கிக் கொண்டு வந்துட்டாங்கஇன்னமும் இவன் போராடிக்கிட்டுத்தான் இருக்கான். ஸ்பார்டகஸ் தன்னோட அதிகார வர்க்கத்துக்கு எதிரா போராடினதுக்கும் இதுக்கும்  வித்தியாசம் இல்லே.' என்று வருத்தம் தோய்ந்த குரலில் மணியண்ணன் சொன்னார்.

காலப் போக்கில் என் அம்மாவுக்கும் இந்த கதி நேர்ந்து விடுமோ என்று நினைக்கையில் என் அடி வயிற்றில் திகீர் என்றது.

மணியண்ணன் சிறுவனாக இருந்த போது அவரது சித்தப்பாவுக்கு மனப் பிரமை இருந்ததாம்அடிக்கடி மருத்துவ மனைக்குக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டி  சரியாகாமல் வீட்டிலேயே தனி அறை ஒன்றில் வைத்துப் பார்த்துக் கொண்டார்களாம்ஒரு தூணில் சங்கிலியால் அவரைப் பிணைத்து வைத்திருப்பார்களாம். சங்கிலி உரசி உரசி அவர் காலெல்லாம் புண்ணாகி சீழ் பிடித்து வீடே நாறிக் கொண்டிருக்குமாம்இரவும் பகலும் சித்தப்பா கத்திக் கொண்டே இருப்பாராம்இதனால் அவர் அறையைப் பெரும்பாலும் பூட்டியே வைத்திருப்பார்களாம்வேலைக்காரி அந்த அறையைச் சுத்தம் செய்யும் சமயங்களில் மணியண்ணன் அந்த அறைக்குள்  போவாராம்.    

அப்போது அவரைப் பார்த்த சித்தப்பாவின்  பார்வையில் சக மனிதனின் அன்புக்கான ஏக்கம் தெரிந்ததாம்.   சித்தப்பாவின் கை கால்களைப் பிணித்திருக்கும் அந்தச் சங்கிலிகளை அவிழ்த்து விட்டாலே அவர் கத்துவது நின்று போய்விடும் என்று அவருக்குத் தோன்றுமாம்இவர் சொல்லி யார் கேட்பார்கள்ஒரு சமயம் சித்தப்பாவின் சங்கிலியை அவிழ்க்கும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுற்று சரியான அடி வாங்கியதும் உண்டாம். சித்தப்பாவை அந்த சங்கிலியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது அவரது நெடுனாள் ஆசையாக இருந்ததாம்  ஆனால் கடைசிவரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை. சித்தப்பா சங்கிலி அகற்றப் படாமலேயே இறந்தும் போனாராம்இறந்த அவர் உடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது சங்கிலி அகற்றப் பட்ட அந்தக் கைகளையும், கால்களையும் மணியண்ணன் சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தாராம்துயரத்துடன் அந்த நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்ந்தார்.

 காம்பவுண்ட் சுவர் அருகிலேயே வெகு நேரம் நிற்பது சரியாக இருக்காது. நாம் உள்ளே போகலாமே என்று மணியண்ணன் சொன்னதன் பேரில்  உள்ளே பிரவேசித்தோம்உள்ளே யாரும் எங்களை எதுவும் கேட்கவில்லைஅந்த மன நலக் காப்பகத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் போல் நாங்கள் இருவரும் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவாறு நடந்தோம்

மக்கள் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார்கள்அப்போது ஒரு நோயாளியை ஒரு மன நலக் காப்பக ஊழியன் கைப் பிடித்து தர தர வென்று இழுத்துப் போனான்.  ‘அண்ணே வேணாண்ணே..  அண்ணே  ..அண்ணே' என்று கதறியபடி அவன் கூடப் போனான்.

அவனை ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்கறதுக்குக் கூட்டிக்கிட்டுப் போறாங்க' என்றார் மணியண்ணன்இவங்களுக்கு நாம ஏதாவது செஞ்சாகணுமே' என்று தனக்குள் முணு முணுத்தார்.

என்ன செய்யலாண்ணே?'

ஒரு விஷயத்தெ கவனிச்சியா?'
    
என்னண்ணே?'

இவங்களும் நம்பளமாதிரி வேலை இல்லாத ஜன்மங்கள்தான். இவங்கள காப்பாத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கு இருக்கு?'

ஆமாண்ணே'

இப்ப ஏதாவது நாம் செஞ்சாகணுமே. . . ‘

 நானும் என்ன செய்யலாம் என்பது குறித்து தீவிரமாக யோசனை செய்தேன்ஒன்றும் பிடிபடவில்லைஅப்போது தற்செயலாக என்னுடைய பார்வை காம்பௌண்ட்டின் ஒரு ஓரத்து கேட் பூட்டுப் போடப்படாமல் சாதாரணமாக சாத்தி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டு பிடித்தேன். பொதுவாக பூட்டுப்ப் போட்டு வைக்கப்படும் அந்த கேட் காவல்காரனின் கவனக் குறைவினால் வெறுமனே சாத்தி வைக்கப் பட்டிருந்ததுஅதைக் கண்டதும் என் மனம் படபடத்ததுமணியண்ணணிடம் சுட்டிக் காட்டினேன்அவர் முகமும் பிரகாசமுற்றது.

 ‘டே, ஒண்ணு செய்இங்கே வாட்ச்மேன் கிட்டே நான் பேச்சு குடுத்துக்கிட்டு இருக்கேன்நீ நைஸா அந்த கேட்டைத் தொறந்து விட்டுடு'

  நான் ஒரு கணம் தயங்கினேன்பின்பு தலையாட்டினேன்மெள்ள மெள்ள நகர்ந்து அந்த கேட்டை நோக்கிப் போனேன்மணியண்ணன் வாட்ச்மேனிடம் என்னமோ கதைக்க ஆரம்பித்துவிட்டார்.

 சுற்று முற்றும் பார்த்தேன்யாரும் என்னைக் கவனிக்கவில்லைகேட்டின் எதிரில் போய் நின்றேன்.   இன்னொரு தரம் சுற்றிப் பார்த்துக் கொண்டேன். எல்லோரும் அவரவர் பிரச்சனைகளில் மூழ்கி இருந்தார்கள்கேட்டைத் திறந்தேன்அப்போது என் மனம் பட படத்ததைப் போல் என்றுமே என் வாழ்க்கையில் பட படத்ததில்லை.

  கேட்டைத் திறந்தாயிற்றுஅடுத்து என்ன செய்வதுஅக்கம் பக்கமாக் இருந்த நோயாளிகளிடம்  ‘கேட் தொறந்து இருக்கு, வெளியே போங்க' என்று கிசு கிசுத்தேன். அது அவர்களில் சிலரைக் கவரவில்லைவேறு சிலர் அந்த நிகழ்ச்சியை வரவேற்றார்கள்இதற்காகவே காத்திருந்தது போல விரைந்து வெளியேறினார்கள்சிலர்வெளியேறுவதைப் பார்த்ததும் அவர்களைப் பின்பற்றி பலரும் கும்பலாக வெளியேற ஆரம்பித்த போதுதான் வாட்ச்மேன் நடந்து கொண்டிருந்த விபரீதத்தை கவனித்தான். அதிர்ச்சியில் ஒரு க்ணம் உறைந்தான். பின்பு, ‘டே எவண்டா கேட்டைத் தொறந்தது' என்று அலறியபடியே கேட்டை நோக்கி ஓடி வந்தான்சில நொடிகளில் அந்த இடமே கூச்சலும் குழப்பமுமாக மாறி விட்டிருந்தது.

என்னதான் வியாக்கியானங்கள் பேசினாலும் சமயங்களில் மூளை நம்மைக் காலை வாரி விடவே செய்கிறதுநான் கேட்டைத் திறந்ததை யாரும் பார்க்கவில்லை. எனவே நான் ஓட வேண்டிய அவசியம் இல்லைதான்ஆனாலும் ஒரு மூடனைப் போல் நான் விழுந்தடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தேன். திரும்பி ம்ணியண்ணனைப் பார்த்தேன். அவர் சிரித்தபடியே நின்று கொண்டிருந்தார்ஒரு வேளை நானும் ஓடாமல் நின்று கொண்டிருந்திருக்கலாமோ . . . இப்போது ஒன்றும் செய்வதற்கில்லைஓடுவதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. எங்கிருந்தோ புறப்பட்டு வந்த காவலாளிகள்  என்னைப் பிடிப்பதற்காகத் துரத்தி வந்தார்கள்நானும் என்னால் முடிந்த மட்டும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தேன்

 நாளைக்கு மணியண்ணனை அந்தத் தேனீர் விடுதியில் நான் சந்திக்கும் போது இப்படி அசட்டுத்தனமாக ஓடி வந்ததற்காக என்னை நிச்சயம் திட்டுவார்

 அதனால் என்ன.. நாளைக்கும் வேறு ஏதாவது ஒரு புதிய விளையாட்டை அவர் எனக்கு அறிமுகப் படுத்தக் கூடும். என்ற எண்ணமே என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போதுமானதாக இருந்தது.


(அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்  என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment