Friday, November 20, 2009

சிங்கப்பூரில் நிகழ்வுகள்

சிங்கப்பூரில் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இராம.கண்ணபிரான் அவர்களில் மிக முக்கியமானவர். அவர் என்னை பின்நவீனத்துவம் பற்றி, சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டு ஒரு கூட்டத்துக்கும் ஒழுங்கு செய்தார். அதில் கலந்து கொண்டு நான் பேசினேன்.

அவர் சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய முன்னோடியான நா.கோவிந்தசாமியின் எழுத்தை அறிமுகம் செய்தார். முனைவர் திருமதி லக்‌ஷ்மியிடமிருந்து நா.கோ.வின் கதைத்தொகுப்பு ஒன்றைப் பெற்றுத்தந்தார்.

‘தேடி' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கதைத்தொகுப்பில் ஆறு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம் பெற்றிருக்கின்றன. 1976ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கதைகள் அவை. அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் நாட்டில் வெளியாகிக் கொண்டிருந்த தாமரை, செம்மலர் போன்ற இடது சாரி இதழ்களில் பிரசுரமாகிக்கொண்டிருந்த கதைகளை ஒத்திருக்கின்றன. பொன்னீலன், அஸ்வகோஷ் போன்றோரின் கதைகளுட இவற்றை ஒப்பிட முடியும்.

நா.கோவிந்தசாமியின் கதைகள் சிங்கப்பூர் சூழலில் உதித்தவை. இது போன்ற கதைகளை ஒரு சிங்கப்பூர்காரரால் மட்டுமே எழுத முடியும். சிங்கப்பூருக்குப் பஞ்சம் பிழைக்கப் போன சில எழுத்தாளர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டு தமிழ் நாட்டுச் சூழலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது சிங்கப்பூர் பின்னணியில் (ஊர், இடம் ஆகியவற்றில் சீனப்பெயர்கள் இருக்கும்) தமிழ் நாட்டுக் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவை தமிழ் நாட்டுக் கதையாகவும் இல்லாமல் சிங்கப்பூர் கதையாகவும் இல்லாமல் விழிக்கின்றன.
நா.கோ.வின் கதைகள் மண்ணின் கதைகள்.

அவரது ‘மதிப்பீடுகள்' என்ற கதை சிங்கப்பூரின் பூர்வ தமிழர்களைப்பற்றிப் பேசுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசு அந்தமான் போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதிகளை வைத்து சிங்கப்பூரை உருவாக்கியது. அதில் தமிழர்களின் பங்கு கணிசமானது. ஒரு சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர் இன்றைக்கு வழுக்கும் சாலைகளும், விண்முட்டும் கட்டிடங்களுமாக மாறி இருப்பதற்குக் காரணம் அந்தத் தமிழ்க் கைதிகளின் வியர்வை ஒரு முக்கிய காரணம். ஆனால், தங்கள் கைகளால் உருவான சிங்கப்பூர் எப்படி தங்களிடமிருந்து அன்னியமானது என்ற அவலத்தைப் பற்றி அந்தக் கதை பேசுகிறது.

‘தேடல்' என்ற கதை ஒரு உலர்ந்த நகைச்சுவை. அந்தக் கதை தலைவர்களை விமர்சிக்கிறது. பெரும்பாலான தலைவர்கள் சோரம் போகிறார்கள். எனவே எந்தத் தலைவரையும் நாம் பின்பற்ற வேண்டாம். நமக்கு வேண்டிய ஒரு தலைவரை நாம் சம்பளம் கொடுத்து நியமித்துக் கொள்ளலாமே என்ற யோசனையை அக்கதை முன் வைக்கிறது. அப்போதுதான் அந்தத் தலைவர் ஒழுங்காக நடந்து கொள்வார்; சரியில்லை என்றால் அவரை டிஸ்மிஸ் செய்து விட்டு ஒரு புதிய தலைவரை நியமித்துக் கொள்ளலாமே.

டாக்டர் மு.வ. வின் நாவல்களை ‘கருத்துக்களால் ஆன நாவல்கள்'என்பார்கள். நா.கோ.வின் எழுத்துக்களையும் ‘கருத்துக்களால் ஆன கதைகள்' என்று சொல்லலாம். இவரது கருத்துகள் முகத்துக்குக் கிட்டே வந்து மூச்சு விட்டுக் கொண்டு நிற்கவில்லை. எட்ட நின்றே பேசுகின்றன.

இத்தொகுப்பில் இறுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ‘வேள்வி' என்ற சிறுகதை மிக முக்கியமானது. இக்கதை ஒரு பெரிய வரலாற்று உண்மை பற்றிப் பேசுகிறது. ஒரு தலித் ஒரு வேப்பமரத்தின் கீழ் ஒரு சூலத்தை நட்டு அதற்கு முனீஸ்வரன் என்று பெயரிட்டு வணங்குகிறான். காலப் போக்கில் அந்தக் கோவில் அவனிடமிருந்து உயர் சாதி இந்துக்களால் அபகரிக்கப்பட்டு பெரிய கோவிலாகக் கட்டப் பட்டு ஈஸ்வரன் என்ற புதிய பெயருடன் மிளிர்கிறது.
உலகம் முழுதும் காலங்கள் தோறும் இதுதானே நடந்து வருகிறது. மொகலாயர்கள் இந்துக் கொவில்களை இடித்துவிட்டு மசூதிகளைக் கட்டினார்கள். பிரிட்டிஷ்காரர்கள் இந்துக் கோவில்களை இடித்துவிட்டு சர்ச்களைக் கட்டினார்கள். ஒவ்வொரு தடவையும் இது நடக்கவே செய்கிறது.பலம் குன்றிய இனத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த வரும் பலம் மிக்க பேரினம் தன்னுடைய மொழி, கலாசாரம், மதம் ஆகியற்றைத் திணிக்கவே செய்யும். பண்டைய தமிழகத்தில் வழிபடப்பட்ட கொற்கை என்ற தெய்வம் என்ன ஆனாள்? வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுள்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள்.
இது போன்ற ஒரு அவலத்தை அந்தக் கதை எடுத்துரைக்கிறது.

விவரணைகள் இரு விதம். ஒன்று: எடுத்துரைப்பு விவரணை; இரண்டு: கேள்விக்குள்ளாக்கும் விவரணை. நா.கோ.வின் கதைகளை கேள்விக்குள்ளாக்கும் விவரணையாக வகைப்படுத்தலாம்.
*

1 comment: