Monday, November 30, 2009

இளங்கோவனின் பூனை

ஜார்ஜ டவுனைப் பழைய சென்னை என்பார்கள். சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து அந்தப் பகுதியை பிரிட்டிஷ்காரர்கள் விலை கொடுத்து வாங்கினார்களாம். அதே போல் சிங்கப்பூரிலும் பழைய சிங்கப்பூர் இருக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள் மலாயாவை ஆண்ட சுல்தானிடமிருந்து சிங்கப்பூரை விலை கொடுத்து வாங்கினார்கள். ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் என்பவர்தான் அப்படி வாங்கியவர். அந்த இடத்தில் அவர் நினைவாக ராஃபிள்ஸ் பிளேஸ் இருக்கிறது. அது ஒரு விண் முட்டும் கட்டடம். அதன் அருகிலேயே இன்னொரு கட்டடமும் இருக்கிறது. அது ஒரு ஹோட்டல். சாமர்செட் மாம், ஜோஸப் கான்ராட் போன்ற பல ஆங்கில எழுத்தாளர்கள் அங்கு வந்து தங்கி இருந்திருக்கிறார்கள் என்று நான் அறிந்தபோது எனக்கு காது மடல் ஜிவ் வென்றது. அந்தச் சாலையில் நடந்த போது சாமர்செட் மாம் நடந்த சாலையில் நான் நடக்கிறேன் என்று சந்தோஷமாக இருந்தது. நிற்க. சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு ஆர்மீனியன் தெரு இருக்கிறாது. அது போலவே பழைய சிங்கப்பூரிலும் ஒரு ஆர்மீனியன் தெரு இருக்கிறது. சென்னை ஆர்மீனியன் தெருவில் ஆர்மீனியன்காரர்கள் கட்டிய சர்ச் இருக்கிறது. சிங்கப்பூர் ஆர்மீனியன் தெருவில் ஆர்மீனியாக்காரர்கள் கட்டிய கட்டடம் இருக்கிறது. அந்தக் கட்டடத்தில் சப் ஸ்டேஷன் என்ற ஒரு நாடக அரங்கம் இருக்கிறது. சென்னையில் இருக்கும் மியூசியம் தியேட்டர், அல்லியான்ஸ் ஃபிரான்ஸேஸ் தியேட்டர் ஆகியவற்றோடு இந்த அரங்கை ஒப்பிடலாம். இந்த சப் ஸ்டேஷன் அரங்கில்தான் சிங்கப்பூரில் இருக்கும் தீவிர எழுத்தாளர்கள் தங்கள் பரிசோதனை முயற்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.விண்ணை முட்டும் கட்டடங்கள் நிறைந்த சிடி ஹாலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், சந்தடியற்ற இரு மாடிக் கட்டடங்கள் ஏகாந்தமாய் நிற்கின்றன. பக்கத்திலேயே பிரிட்டிஷ்காரர்கள் காலனியாதிக்க நாட்களில் கட்டிய பழமை வாய்ந்த கட்டடங்களும் க்யூ வரிசையில் நிற்கின்றன. வாகன நெரிசலோ, மனித நெரிசலோ இல்லாத அந்த இடத்தில் சப் ஸ்டேஷன் அரங்கு அமைந்திருப்பது ஓர் உருவகம் போல் தோன்றுகிறது.

சமீபத்தில் சப் ஸ்டேஷன் அரங்கில் சிங்கப்பூர் எழுத்தாளரும், கவிஞரும் நாடகாசிரியருமான இளங்கோவன் எழுதி இயக்கிய, ‘மியாவ்’ என்ற ஆங்கில நாடகம் அரங்கேறியது. அது ஒரு பரீட்சார்த்த நாடகம். அந்த நாடகத்தைப் பார்க்க மொத்தம் 25 பேர் வந்திருந்தனர். பார்வையாளர்களில் சிங்கப்பூரில் வாழும் மேல் தட்டு வர்க்க ஆங்கிலேயர்கள், சீனர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.

அது ஒரு ஒற்றை அரங்க (one set) நாடகம். காரின் முன் இருக்கைகள். டிரைவர் ஆசனத்துக்கு எதிரே ஸ்டீயரிங். இவ்வளவுதான் செட். அந்த இருக்கைகளில் ஒரு மலாய் இளைஞனும் ஒரு மலாய் இளம்பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உரையாட ஆரம்பித்ததும் நாடகம் தொடங்குகிறது.

கதைப்படி அவர்கள் மலாய் தம்பதி. அந்த இளைஞன் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறான். பக்கத்தில் இருக்கும் அவன் மனைவி அவனைத் திட்டிக் கொண்டே வருகிறாள். அவள் திட்ட பதிலுக்கு அவன் ஏதோ சொல்ல இப்படியே நகர்கிறது நாடகம். நடு நடுவே திடீர் என்று மனித சைஸில்ஒரு பூனை சர்ரியலிஸத் தன்மையோடு வந்து அந்த இளைஞனிடம் பேசிவிட்டுப் போகிறது. அந்தப் பூனைக்குத் தெரியாத விஷயம் இல்லை. இன்றைய சிங்கப்பூர் பிரஜைகள் மீதான தனது விமர்சனங்களை கிண்டலும் கேலியுமாக அது பேசுகிறது. ஆக மொத்தம் மூன்று கதாபாத்திரங்கள். நாடகம் நடக்கும் நேரம் இரண்டு மணி நேரம். இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் நாடகம் இரவு பத்து மணிக்கு முடிகிறது.

பெட்ரொல் பங்கில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் மலாய்க்காரன் அவன். ஒரு விற்பனையகத்தில் விற்பனைப்பணிப்பெண் அவன் மனைவி. கைக்கும் வாய்க்கும் போராடும் வாழ்க்கை அவர்களுடையது. அவர்களுக்கு திடீரென்று பெரும் பணம் வந்தால் என்ன ஆகும்? அடாத மழை பெய்தாலும் விடாமல் காரில் போய் தங்கள் வீட்டுப் பூனைக்கு டின் உணவு வாங்கி வருகிறார்கள். வரும் வழியில் அவர்களுக்குள் நிகழும் சச்சரவுதான் மொத்த நாடகமுமே. சிங்கப்பூரைப் பொறுத்தவரை மலாய்க்காரர்கள் விளிம்பு நிலை மக்கள் எனலாம். மலாய் தம்பதியை வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் வாழ்க்கையின் விழுமியங்களையும், எரியும் பிரச்சனைகளையும் அலசுகிறது நாடகம். அவள் தன் தலைமுடியைக் காட்டி அதன் வண்ணம் செஸ்ட்னட் என்கிறாள். அவன் செஸ்ட்னட் என்ற தின் பண்டததை நினைத்துக் கொள்கிறான். அவள் தன் தலை முடியை முகர்ந்து பார்க்கச் சொல்கிறாள்.முகர்ந்து பார்த்து விட்டு, அது பெட்ரோல் வாசனை அடிக்கிறது என்கிறான். அவள் முறைக்க எனக்குப் பெட்ரோல் வாசனை ரொம்பப் பிடிக்கும் என்கிறான்.இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதில் Fuck, asshole, lick me போன்ற சொற்கள் தெறித்து விழுகின்றன. ஆங்கிலம் மட்டுமல்ல மலாய் மொழியிலும் வசனங்கள் பேசப்படுகின்றன. இதனால் கதை நிகழும் இடம் சிங்கப்பூர் என்பதற்கான நம்பகத்தன்மை உருவாக்கக்ப்படுகிறது. ஒரே செட் என்றபோதிலும், கதாபாத்திரங்கள் அசையாம்ல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற்போதிலும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும், தங்கள் வசனங்களை உச்சரிக்கும் தன்மையாலும் நாடகம் அலுப்பின்றி நகர்கிற்து. மலாய்க்காரனாக நடித்த ஃபைஜல் அப்துல்லா, அவன் மனைவியாக நடித்த டியூ எம்.சையனாரா, பூனையாக வரும் ஹேமங் யாதவ் ஆகியோரின் நடிப்பு வியக்க வைப்பது. கெட்ட வார்த்தைகள் இவர்கள் வாய்களிலிலிருந்து தண்ணீர் பட்ட பாடாக வெளிப்படுகின்றன. நாடகத்தின் கதைத்திட்டம், வசனம், அரங்க அமைப்பு, ஒளி அமைப்பு, ஒலி அமைப்பு, ஆகிய பணிகளை இளங்கோவன் செய்திருக்கிறார். அவற்றில் அவரது நீண்ட கால அனுபவம், முதிர்ச்சி ஆகியன தெரிகின்றன. இளங்கோவன் லண்டனில் படித்தவர். சிங்கப்பூரிலும், தாய்லாந்திலும் வழங்கப்படும் சர்வதேச விருதுகள் பெற்றவர். எப்போதுமே சர்ச்சைக்குரிய பிரதிகள் எழுதுபவர். இந்த நாடகமும் சர்ச்சைக்குரியது என்றே சொல்லலாம்.

சிங்கப்பூரில் பெரும்பான்மையான மக்கள் சீனர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் ம்லாய்க்காரர்கள். அதற்கும் அடுத்த நிலையில் இருப்பவர்கள் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர். இவர்களில் விளிம்பு நிலை மக்க்ளாக இருக்கும் மலாய் மக்களைப் பிரதானமாக வைத்து இந்த நாடகத்தை இளங்கோவன் எழுதியிருக்கிறார். அவர்கள் வாழ்க்கை விளிம்பு நிலை வாழ்க்கை’ அவர்கள் மொழி அவர்கள் வாழ்க்கை போன்றே வசவுச் சொற்களாலும், ஆபாசம் கொப்பளிக்கும் வாக்கியங்களாலும் ஆனது. அதை அப்படியே நாடகமாக்கியிருப்பது யதார்த்தமாக இருப்பது உண்மையே. ஆனால், எழுதப்பட்டிருக்கும் வரிகளுக்கு இடையே இருக்கும் மௌனம் வேறு விதமான பொருள்படுத்தலை ஏற்படுத்தி விடுகிறது. தமிழ் நாட்டில் நடைபெறும் பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் விளிம்பு நிலை மக்களான வேலைக்காரர்கள், கிராமத்திலிருந்து வரும் மனிதர்கள் போன்றவர்களை அவர்களது நாகரிகமற்ற பேச்சு, நடவடிக்கைகளுக்காக நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் கூத்து அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் வன்முறையாகும். அது ஒரு மேல்தட்டு வர்க்க மேலாதிக்க மனோபாவத்தினால் வருவது. இளங்கோவனுடைய பிரதியைக் கட்டவிழ்த்துப் பார்க்கும் போது இவ்வித புரிதலை அது ஏற்படுத்தி விடுகிறது. தமிழ் நாட்டில் தலித்மக்க்ளையும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வெள்ளையரல்லாத இன மக்களையும் கிண்டல் செய்வதற்கு ஒப்பானது இது என்றே தோன்றுகிறது. அமெரிக்காவில் மார்க் ட்வெய்னும், ஃபிரான்ஸில் மோலியேரும் அந்தந்த நாட்டிலிருந்த மேல் தட்டு வர்க்கத்தினரின் போலித்தனத்தை, பகட்டை, ஆஷாடபூதித்தனத்தை கேலி செய்தார்கள். அத்தகைய எள்ளல் இந்தப் பிரதியில் நிகழவில்லை.

சிங்கப்பூரிலுள்ள சீனர்கள் மூன்று வேளையும் உணவு விடுதியில் சாப்பிடுபவர்கள். தமிழர்கள் மூன்று வேளையும் வீட்டில் சமைப்பதைத் தின்று வருவாயைச் சேமிப்பவர்கள். மலாய்க்காரர்களோ பைபிளில் வரும் வாசகம் போல், ..அவர்கள் விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; சேமித்து வைப்பதும் இல்லை...என்ற ரீதியில் வாழ்பவர்கள். இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடான வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்திருக்கிறது.இந்த வாழ்க்கை மற்றும் முரண்பாடுகளை வைத்து நிறைய நகைச்சுவையை உருவாக்க முடியும். இது போல் விளிம்பு நிலை மக்களை அதுவும் தொழிலாளர் வர்க்கத்தினரை கேலி செய்வது நெருடலாக இருக்கிறது. மற்றபடி இந்த நாடகம் ஒரு நேர்த்தியான ஆக்கம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

*****

2 comments:

  1. வணக்கம்.

    யார் யாரோ என்ன என்னவோ இணையத்துல எழுதிக்கிட்டிருக்காங்க.. உங்களை மாதிரி ஆளுமைகளைக் காணோமேன்னு தேடிருக்கேன். வருத்தப்பட்டிருக்கேன். வந்துட்டீங்க. எழுதுங்க...கலக்குங்க...

    அன்புடன்
    அரவிந்த் செல்லையா

    ReplyDelete
  2. வணக்கம்

    இளங்கோவன் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கையை பகடி செய்வதாக எழுதியிருந்தீர்கள்.மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பகடி செய்வது நிகழவில்லை என்றும் எழுதியிருந்தீர்கள்.இதில் உள்ல முரண் எனக்குப் புரியவில்லை.
    நன்றிகளுடன்
    பாலாஜி

    ReplyDelete